நாட்டுப்புறக் கலைகள் குறித்த விழிப்புணர்வு  நம் எல்லோருக்கும் தேவை! - நாட்டுப்புற கலைஞர் சுந்தரமூர்த்தி

Thursday, April 13, 2017

“என்னோட சின்ன வயதிலேயே என் அப்பா, அம்மாவை விட்டு பிரிஞ்சிட்டாரு. முழுக்க, முழுக்க, அம்மா அரவணைப்புல தான் வளர்ந்தேன். குடும்பத்துல ஏழ்மை தாண்டவமாடுச்சு. ரொம்ப கஷ்டப் பட்டுதான், நான் பரதம் கத்துக்கிட்டேன்.

நடனத்தின் மேல் உள்ள ஈர்ப்பு, என் இரத்தத்திலேயே ஊறிய கலை மீதான ஆர்வம், இதுதான் என்னை 154 நாட்டுப்புறக் கலைகளை விரட்டி விரட்டி கத்துக்க வச்சுது.” என்று உணர்ச்சிப்பெருக்கோடு தன் சாதனைகளை பற்றி பேச ஆரம்பித்தார் நாட்டுப்புறக் கலைஞர் சுந்தரமூர்த்தி. அழிந்துவரும் நாட்டுப்புறக்கலைகளுக்கு உயிரூட்டி வரும் அவரை, சந்தித்தோம். 

 

பரதக் கலைஞரான உங்களுக்கு, நாட்டுப்புறக் கலைகள் மீது ஈடுபாடு ஏற்பட்டது எப்படி?

“ எனக்கு நடனத்தின் மேல் ஆர்வம் இருக்கிறதை கண்டு பிடிச்சது, என் அம்மா தான். அவங்க என்னை நடனக் கலைஞர் முனிரத்தினம்மாள் கிட்ட சேர்த்துவிட்டாங்க. எல்லா கலைகளுக்கும் தாய் கலைதான் பரதம். அதுல இல்லாதது எதுவுமே இல்லை. பரதத்தில் உள்ள அடவுகளை நீங்கள் புரிந்து, கற்றுக் கொண்டீர்களானால், உங்களுக்கு நாட்டுப்புறக் கலைகள் எல்லாம் எளிதாக வரும். எனக்கு மொத்தமா 32 குருநாதர்கள் உண்டு. இவங்க எல்லாருக்கிட்டேயும் நான் என்னால முடிஞ்ச தட்சிணையை கொடுத்திட்டு, கலைகளை கத்துக்கிட்டேன். தமிழ் நாட்டுகலைகள் மட்டுமில்லாம, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தின் பாரம்பரியக் கலைகளையும் கத்துக்கிட்டேன். நாட்டுப்புறக் கலைகள்ல 'தப்பாட்டம்', 'மாடு', 'மயிலு', 'பெரிய கொம்பு', 'சாட்டைக்குச்சி', 'சிலா', 'கரகாட்டம்' போன்ற 60 கலைகள் இருக்கு. அதைத் தவிர, நம்ம ஊர் கரகாட்டத்தை, ஆந்திராவில் 'கரகலு'ன்னு சொல்லுவாங்க, கர்நாடகாவில் 'பாடலு'ன்னு சொல்லுவாங்க, அதையும் கத்துக்கிட்டேன். இதை நான் மட்டும் கத்துகிறது இல்லாம, என்னைப்போல நிறைய பேருக்கு சொல்லித்தரணும்னு ஆசைப்படறேன்!”

 

நாட்டுப்புறக் கலைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல, திட்டம் ஏதேனும் உள்ளதா?

“ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைகளை கத்துகிறதுக்கு  நான் ரொம்ப சிரமப் பட்டேன். பரதம் கத்துக்கிட்டதால, எல்லாக் கலைகளோட வடிவம் எனக்கு எளிதாக புரிஞ்சுது. தப்பாட்டத்துக்கு, இதுதான் ஸ்டெப்ன்னு எனக்கு நல்லாத் தெரியும். அதை நான் ஆவணப்படுத்தி வச்சுக்கிட்டேன். அதனால, என்கிட்டே கத்துக்க வர்ற மாணவர்களுக்கு அது ரொம்ப சுலபமா இருக்கு.

சென்னையில மாடம்பாக்கம்ல ‘சுக்ரா டான்ஸ் அகாடமி' மூலமாக நான் நாட்டுப்புறக் கலைகளை சொல்லி கொடுத்திட்டு வர்றேன். அதுமட்டுமில்லாம, மேற்கத்திய நடனம், வாத்தியங்கள் போன்ற வகுப்புகளும் சொல்லிக் கொடுக்குறோம். எட்டு நாட்களில் நாட்டுப்புறக் கலைகளை கத்துக்கிட்டு அரங்கேற்றுவதுதான் எங்க ஸ்பெஷாலிட்டி!”

 

இந்தத் துறையில, ஏதாவது பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கா?

“எனக்கு இந்தக் கலை எந்த விதமான மன அழுத்தத்தையும் கொடுக்கலை. இதனை மக்களுக்கு கொண்டு சேர்க்க முடியலையே? நம்ம பாரம்பரியக் கலையை நம் மண்ணின் மைந்தர்களுக்கு நாமே உணர்த்த வேண்டிய சூழல் வந்துவிட்டதே?ன்னு நினைக்கும் பொழுதுதான் எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த நிலை மாறி, நிறைய இளைஞர்கள், நாட்டுப்புறக் கலையோட மகத்துவத்தை கத்துக்கிட்டு வரணும். பெற்றோர்களும் அவர்களை ஊக்குவிக்கணும். 'உணவே மருந்து' என்பதைப் போல, கலையும் மனிதனுக்கு மருந்துதான். இதை ஏன் நான் சொல்றேன்னா, ஒவ்வொரு கலைகளோட அசைவுகளும், நமக்கு ஒரு விதமான பயிற்சி!”

நாட்டுப்புறக் கலையை வியாபாரரீதியாக அடுத்தக் கட்டத்திற்கு  நகர்த்திச் செல்ல சுந்தர மூர்த்தியின் நண்பர்கள் அவருக்கு பக்க பலமாக இருக்கின்றனர். அவருடைய நண்பர் திரு. ஜானகி ராமன் கூறுகையில்,

“கலைகளாலயோ அல்லது விளையாட்டாலோ படிப்பு பாதிக்காது. இதை பெற்றோர்கள் புரிஞ்சிக்கணும். விளையாட்டுல ஈடுபடுறவங்களால கண்டிப்பா நல்லா படிக்க முடியும். மேலை நாடுகள்ல இதை புரிஞ்சிக்கிட்டு அவங்க குழந்தைகளை ஊக்குவிக்கிறாங்க. எங்களால முடிந்த அளவில், நாங்களும், பெற்றோர்களிடம் நாட்டுப்புறக் கலைகளை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திக்கிட்டுதான் இருக்கோம்!" என்றார். நம் பாரம்பர்ய கலைகளை காக்க வேண்டியது நம் அனைவரின் சமூகப் பொறுப்பு. அதை செய்தால் சுந்தரமூர்த்தி போன்ற எண்ணற்ற கலைஞர்கள், அக்கலையை வளர்த்தெடுக்க உதவியாய் இருக்கும். செய்வோமா?!.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles