தேசிய விருதுகளால் மகுடம் சூடிய தமிழ் சினிமா!

Thursday, April 13, 2017

தமிழ் சினிமாவுக்கு இது கொண்டாட்டமான நேரம். இந்திய அளவில் உயரிய விருதாக கருதப்படும் தேசிய விருது. அவற்றில் ஆறு விருதுகளை வெவ்வேறு பிரிவுகளில் தட்டி வந்திருப்பதுதான் அதற்கு காரணம். சிறந்த மாநிலமொழிப் படம், சிறந்த பின்னணி பாடகர், சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பாடலாசிரியர், சிறந்த திரைப்பட ஆய்வாளர் ஆகிய விருதுகளை கோலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் ஆளுமைகளே பெற்றுள்ளனர்.

இயக்குநர் ராஜூமுருகன் இயக்கிய 'ஜோக்கர்' திரைப்படம் இரண்டு விருதுகளையும், சூர்யா நடிப்பில் விக்ரம் குமார் இயக்கிய '24' படம் இரண்டு விருதுகளையும், சீனுராமசாமி இயக்கிய 'தர்மதுரை' ஒரு விருதும் பெற்றுள்ளது. சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வைரமுத்துவும், சிறந்த திரைப்பட ஆய்வாளருக்கான விருதை தயாரிப்பாளர் தனஞ்ஜெயனும், பெற்றுள்ளார். சிறந்த ஒளிப்பதிவாளராக திரு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சிறந்த மாநில மொழிப் படமாக ட்ரீம் வாரியர்ஸ் தயாரித்த 'ஜோக்கர்' தேர்வாகியுள்ளது. 

தேசிய விருதுகளை தேர்ந்தெடுக்கும் கமிட்டியின் தலைவராக, இந்த முறை நியமிக்கப்பட்டவர் இயக்குநர் பிரியதர்ஷன். இவர், தமிழ், மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தனது கவித்துமான கதைசொல்லல் முறையால் கவர்ந்தவர். ஏற்கனவே, இவர் இயக்கிய 'காஞ்சிவரம்' தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் கோலிவுட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு தேசிய விருது அங்கீகாரம் என்பது எட்டாக் கனியாகவே இருந்து வந்தது. அபூர்வமாகத்தான் தென்னிந்தியாவின் பக்கம் தேசிய விருது குழுவினரின் கவனம் திரும்பும். ஆனால், கடந்த சில வருடங்களாக இவற்றில் பெரும் மாற்றம் உருவாகி, வந்திருக்கின்றன. அதன் தாக்கம்தான் ஒரே நேரத்தில் இப்போது தமிழ் சினிமாவுக்கு ஆறு தேசிய அங்கீகாரம்!

இந்த மாற்றம் ஒரே நாளில் நடக்கவில்லை. அதற்கு, தென்னிந்திய திரைப்பட இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும் பெரும் உழைப்பை செலுத்தியுள்ளனர். குறிப்பாக, இயக்குநர்களில் மறைந்த பாலசந்தர், பாலுமகேந்திரா மற்றும் மகேந்திரன், பாரதிராஜா உள்ளிட்டோரின் அர்ப்பணிப்பு முக்கியமானது. சிறந்த படங்களை இயக்குவதோடு, தேசிய விருது கமிட்டியில் தங்களை இணைத்துக்கொண்டு, நல்ல படங்களை தேர்வு செய்தும், ஊக்குவித்தும் வந்தனர். அப்படியாக, பாரதிராஜா கண்டறிந்து, தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய படம் 'குற்றம் கடிதல்'. அதேவரிசையில் இயக்குநர் வெற்றிமாறனின், மாறுபட்ட முயற்சியான 'விசாரணை' படமும் கடந்த வருடம் தேசிய விருதை தட்டியது. தேசிய விருதுகளை அள்ளுவதில் மலையாளத் திரையுலகத்தை தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகமும் களத்தில் இறங்கியுள்ளது வரவேற்கப்பட வேண்டியதே!

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை 64வது தேசிய விருது கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக, கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, இப்போது ஏழாவது முறையாக தேசிய விருதை பெற்றிருக்கிறார் என்பது  தமிழுக்கு கூடுதல் அங்கீகாரம்!. இந்த விருது குறித்து வைரமுத்து பேசும்போது, "இந்த விருதால் நான் அடையும் மகிழ்ச்சியை விட, நாடு அடையும் மகிழ்ச்சியே பெரிதென்று கருதுகிறேன். அலுவல் மொழிகளாக அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவில் 2 தேசிய மொழிகளில் திரைப்பாடலைப் பொறுத்தவரையில் தமிழ்தான் முன்னிற்கிறது என்பதில் என் சமகாலச் சமூகம் மகிழ்ச்சி அடைகிறது. பெருமையுறுவது மொழியே தவிர நானல்ல; நான் ஒரு கருவி மட்டுமே!" என்கிறார் பெருமிதத்துடன்!

சிறந்த படத்துக்கான விருதை பெறவுள்ள இயக்குநர் ராஜுமுருகன்  "மனித உரிமைகள் பற்றிய பேசுக்கூடிய படமாக, 'ஜோக்கர்' படத்தை இயக்கியிருந்தேன். பொதுவாக, இன்றைக்கு படம் எடுப்பதைக் காட்டிலும், அதை திரையரங்களுக்கு கொண்டு சேர்ப்பதில்தான் பெரும் சவால்கள் நிறைந்திருக்கிறது. இவையெல்லாவற்றையும் தாண்டி படத்துக்கு கிடைத்த வரவேற்பு மறக்க முடியாது. அதேபோல, அரசும் தேசிய விருது மூலமாக அங்கீகரித்துள்ளது, எங்களது குழுவை மகிழ்ச்சியை ஆழ்த்தியுள்ளது" என்று, தனது கருத்தை பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை தயாரித்த ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "இந்த விருது இன்னும் நல்லப் படங்களை தயாரிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது" என்று கூறியுள்ளார். இவையெல்லாம் சிறந்த படங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக உருவாகும் என்கிற நம்பிக்கையை நமக்குள் விதைக்கிறது!

தேசிய விருது அறிவிப்பில் கூடுதலாக கவனம் ஈர்த்த மற்றொரு விஷயம். கோலிவுட்டின் தொழில்நுட்பங்களில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த சில துறைகளுக்கு, விருது அறிவிக்கப்பட்டுள்ளதும், அவற்றையும் நம்முடைய டெக்னீஷியன்களே பெற்றிருப்பதும்தான். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி, பெரும் வசூலை வாரிக் குவித்த படமான 'புலி முருகன்' படத்துக்கு சிறந்த சண்டைப் பயிற்சிக்கான தேசிய விருதை ஃபைட் மாஸ்டர் பீட்டர் ஹெய்னும், 'ஜனதா கரேஜ்' என்கிற தெலுங்கு படத்துக்காக சிறந்த நடனக்கலைஞருக்கான விருதை டான்ஸ் மாஸ்டர் ராஜு சுந்தரமும் பெற்றுள்ளனர். ஆக, தமிழ் சினிமா தேசிய விருதுகளால் மகுடம் சூடியுள்ளது என்றால், அது மிகையில்லை!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles