பெண் விடுதலைக்காக போராடிய எல்லோருமே ஆண்கள்தான்! - எழுத்தாளர் குட்டி ரேவதி 

Friday, March 31, 2017

இருபதாம் நூற்றாண்டில், நவீன இலக்கியத்தில் பெண்களின் வருகை பெரிய உடைப்பை ஏற்படுத்தியது. கவிஞர்கள் சல்மா, சுகிர்தராணி, தமிழச்சி தங்கபாண்டியன், லீனா மணிமேகலை, தமிழ்ச்செல்வி, பரமேஸ்சுவரி, திலகபாமா என்று அந்தப் பட்டியல் நீண்டது. ஒவ்வொரு படைப்பாளிகளும் தனித்துவமான நடையில் கவிதையில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தினர். அதில் உலகளாவிய தமிழர்களின் கவனத்தை ஈர்த்தவர் குட்டி ரேவதி.

'பூனையைப் போல அலையும் வெளிச்சம்', 'முலைகள்', 'தனிமையின் ஆயிரம் இறக்கைகள்', 'உடலின் கதவு', 'யானுமிட்ட தீ', 'இடிந்த கரை' உள்ளிட்ட கவிதைத் தொகுப்புகள் அவரின் ஆக்கங்களில் முக்கியமானவை. பாடலாசிரியராகவும், களப் போராளியாகவும், பதிப்பக உரிமையாளராகவும் திகழும் குட்டி ரேவதி, திரைப்பட இயக்குநராகவும் விரைவில் அறிமுகமாக உள்ளார்!. இலக்கியத்தில் தனது பயணத்தின் ஒரு பகுதியை அவர் இங்கே மனம் திறக்கிறார். 

"நீண்ட பயணங்களின் வழியே உருவானவள்தான் கவிஞர் குட்டி ரேவதி. முதல் கவிதைத் தொகுப்பு 'பூனையைப் போல அலையும் வெளிச்சம்', 2000ஆம் ஆண்டில் வெளிவந்தது. அதற்குப் பிறகுதான் 'முலைகள்' நூல் வெளியானது. நிறைய சர்ச்சைகளையும், விவாதங்களையும் கொண்டு வந்த தொகுப்பு அது. அந்த படைப்பு வெளியானவுடன் பலரும் என்னிடம் வைத்த கேள்வி. 'நீங்கள் கவனம் பெற வேண்டும் என்பதற்காகத்தானே அந்த தலைப்பை வைத்தீர்கள்?' என்று கேட்டனர். உண்மையில், என்னை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக அந்த தலைப்பை வைக்கவில்லை. 

அடிப்படையில் நான் ஒரு சித்த மருத்துவர். கல்லூரியில் படிக்கும்போது பாடத்திட்டங்களில் உடல் உறுப்புகளை குறித்த சொற்கள் நிறைய உண்டு. முலைகள், யோனி போன்றவையெல்லாம் சாதாரணமாக பயன்படுத்தும் வார்த்தைகள் தான். எங்களுடைய செய்முறைத் தேர்வுகளில் கூட அந்த வார்த்தைகளுக்கு தடையில்லை. அந்தவகையில் எங்களிடம் சொல் வேறுபாடு கிடையாது. அந்தப் பின்னணியில்தான் நான் கவிதை எழுதத் தொடங்கினேன்!.

தொண்ணூறுகளில் இந்தியா முழுவதிலும் அம்பேத்கர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அந்த நாளை ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டாட்ட நாளாக மாற்றுகிறார்கள். அது ஒரு புதிய எழுச்சியை, அலையை உருவாக்குகிறது. அதுதான் மறுமலர்ச்சிக்கான விஷயமாக மாறுகிறது. அதுமட்டுமில்லாமல், அப்போதுதான் ஒடுக்கப்பட்ட  முதல் தலைமுறை மக்கள் கல்வியை கற்று, மேலே வருகிறார்கள். எழுத்து, மொழி அதிகாரம் எல்லாம் அப்போதுதான் அவர்களின் கைக்கு வந்து சேருகிறது. அவர்களது நாக்கு பேசத் தொடங்குகிறது; அவர்களது கைகள் எழுதத் தொடங்குகின்றன. அப்படியாக எழுதும்போது அதுவரையும் அவர்களின் உடலும், மனமும் பட்ட பாடுகளை எழுத்தாக மாறுவது எல்லாம் தன்னியல்பானது என்றே நினைக்கிறேன். அப்படியாகத்தான் நானும் எழுதினேன். அதனால்தான் முலைகள் கவிதைத் தொகுதி பல எதிர்ப்புகளை சம்பாதித்தது. இன்றுவரையும் அந்த படைப்புக்கு எதிரான அவதூறுகள் நடக்கவே செய்கின்றன!

இதையெல்லாம் நான் பொருட்படுத்துவதில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக களத்தில் நின்று, சிவகாமி ஐ.ஏ.எஸ். அவர்களோடு, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி வருகிறேன். தமிழ்ச் சமூகத்தில் மட்டுமில்லை; இந்திய அளவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுபவர்களில் முக்கியமானவர் சிவகாமி . அவர்தான் முதல் தலித் நாவலை எழுதுகிறார். அவருடன் இரண்டு வருடங்கள் தமிழகம் முழுக்க உள்ள கிராமங்கள், சேரிகள் தோறும் சுற்றி வந்தேன். அப்படி சுற்றும்போதுதான் பெண்களின் நிலை குறித்தும், பெண்களுக்கு எத்தகைய உரிமைகள் தேவை என்பதையெல்லாம் அறிந்து கொண்டேன்.

அதேபோல, இன்று இருளர், பழங்குடி மக்கள் மீது விழுந்திருக்கும் வெளிச்சத்திற்கு காரணம் பேராசிரியர் கல்யாணி அவர்கள்தான். அவரிடம் இருக்கும் சமூக விழிப்புணர்வு எந்த அரசியல்வாதிக்கும் இல்லை என்றே சொல்வேன். கல்யாணி அய்யாவோடு சேர்ந்து இருளர் வாழ்வையும் அறிந்து வந்தேன். அதேபோன்று, 'தலித் முரசு' இதழுக்காக 'அன்டச்சபிள் கண்ட்ரி' என்கிற ஆவணப்படத்தை ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்தார். இந்தியா சுதந்திரம் அடைந்ததுக்கு பிறகு தலித்துகளின் மீதான வன்கொலைகள் குறித்த ஆவணப்படம் அது. அதற்காக களத்தில் சென்று பாதிக்கப்பட்டவர்களையும், போராளிகளையும் சந்தித்தது எனக்குள் பெரிய விழிப்புணர்வை கொண்டு வந்தது. 

அப்போதுதான் எனக்கு தெரிந்தது. பெண்ணுரிமை என்பது ஆணிடம் இருந்து பெற வேண்டியது இல்லை; இந்தியாவின் சமூக கட்டமைப்பில் இருந்து விடுபடுவதுதான். சாதி, மத, குடும்பம் மற்றும் இன்ன பிற கட்டமைப்புகளில் இருந்து ஆணும் பெண்ணுமே விடுதலையாக வேண்டும். அதுவே உண்மையான விடுதலை. ஒரு முறை புத்தரிடம் ஒரு பெண் போய், 'என்னையும் உங்களுடைய சங்கத்தில் இணைத்துக் கொள்ள முடியுமா?' என்று கேட்கிறார். அதற்கு புத்தர் அழகாக பதில் சொல்கிறார். "ஒரு பெண்ணுக்கு என்னவிதமான உரிமைகள் தேவை என்பதை எப்படி ஒரு ஆண் தீர்மானிக்க முடியும்?. அது பெண்களே தீர்மானித்து அவர்கள்தான் எங்களிடம் சொல்ல வேண்டும். நீங்கள்தான் எங்களை வழிநடத்த வேண்டும். ஆகவே, நீங்களே உங்களுக்கான சங்கங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்" என்கிறார். புத்தர் எவ்வளவு பெரிய துறவி. அவரின் தீர்க்கமான சிந்தனையை பாருங்கள். அவர் வழியில்தான் பெரியார், அம்பேத்கர் போன்றவர்களும் சிந்தித்தார்கள். வரலாற்றில் பெண் விடுதலைக்காக போராடிய எல்லோருமே ஆண்கள்தான்!" - முத்தாய்ப்பாக முடித்தார் குட்டி ரேவதி. 

- கிராபியென் ப்ளாக்

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles