சுவாமி தேசிகரின் வரலாறு யதார்த்தப் படமாகிறது!  - துஷ்யந்த் ஸ்ரீதர் 

Friday, March 31, 2017

இன்றைய ஆண்ட்ராய்ட் இளைஞர்களுக்கு சாஸ்திர சம்பிரதாயங்கள் பற்றி எதுவுமே தெரிவது இல்லை. இன்னும் எதிர்காலத்தில் 'இவையெல்லாம் என்ன ஆகப் போகிறதோ' என்று வருந்துபவர்களுக்கு துஷ்யந்த் ஸ்ரீதர் ஒரு வரப்பிரசாதம்!. இன்று 'ஆண்ட்ராய்டு', 'ஐபேட்' களில் உலவிவரும் சிறுசுகளும், இவர் குரலுக்கு அடிமை. சொல்லும் சத் விஷயங்களை எளிதாக, எல்லோருக்கும் புரியும் வண்ணம் எடுத்துரைக்கிறார்.

தொழில்நுட்பவாதியான இவர், இன்று உபன்யாசகர். அதோடு மட்டுமில்லாமல் திரைப்படத் துறையிலும் கால்பதித்து உள்ளார். “வேதாந்த தேசிகர்" என்கிற வரலாற்று படத்தில் நடித்ததோடு மட்டுமல்லாமல், அதில் இணை இயக்குனராகவும், கதை, வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது. உபன்யாசம் சொல்ல இடைவிடாமல் பறந்து கொண்டிருப்பவரை கேப்பில் பிடித்தோம்!

 

சுவாமி 'வேதாந்த தேசிகர்' திரைப்படம் குறித்து ?

“பாமரர்களுக்கு ஒரு விஷயத்தை எளிதாக கொண்டு போகணும்னா, என்னைப் பொறுத்தவரை அதற்கு பெஸ்ட் சாய்ஸ் செல்லுலாய்ட் தான். இதை நான் ஏன் சொல்றேன்னா, 'திருவிளையாடல்' என்ற படம் மூலமாகத்தான் நமக்கு நாயன்மார்களை தெரிஞ்சது. நம்முடைய புராணங்கள் எல்லாம் திரைப்படமாக்கப்பட்டு வெகுஜன மக்களை போய் சேர்ந்தது. அந்த மாதிரி சுவாமி 'வேதாந்த தேசிகர்' படமும் மக்களை போய்ச் சேரும்னு நினைக்கிறேன். 

2015 ஆம் ஆண்டு இறுதியில் திரு. முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள், "சுவாமி வேதாந்த தேசிகர் பற்றி ஒரு திரைப்படம் எடுக்கப் போறேன். அதுல நீங்க நடிக்க முடியுமா?” ன்னு கேட்டார். உடனே நடிக்கிறேன்னு சொல்லிட்டேன். ஆனால் ஸ்க்ரிப்ட் நான்தான் எழுதுவேன். ஆனால், அதுக்காக எனக்கு நீங்க ஒரு ரூபாய் கூட காசு கொடுக்க வேண்டாம்னு சொன்னேன். அதுக்கு அவரும் சம்மதிச்சாரு. சுவாமி 'வேதாந்த தேசிகர்' படத்தை முக்தா ஸ்ரீனிவாசனும் அவருடைய மூத்த மகன் ரவியும்  தயாரிச்சிருக்காங்க. நானும், முக்தா சுந்தரும் இந்தப் படத்தை இயக்கியிருக்கோம். பெரும்பாலான வேலைகள் முடிஞ்சிடுச்சு. விரைவாக படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கோம்!”

 

இந்தப் படத்தோட ஸ்பெஷாலிட்டியா எதைச் சொல்வீங்க?

“இந்தியாவில் 750 ஆண்டுகளுக்கு முன்னர், நம்ம நாட்டு மக்கள் எல்லோருமே அறிஞர்களாகத்தான் இருந்தார்கள். 'ஆச்சார்யன் வேதாந்த தேசிகர் சுவாமி' சிறந்த அறிஞராக கருதப்பட்டார். அவரை செயற்கையாக சித்தரிக்காமல், யதார்த்தத்தை திரையில் கொண்டுவரணும்னா எப்படி பேசியிருப்பார்?ன்னு யோசிச்சோம். சம்பிரதாய விஷயங்கள்ல இன்னிக்கி இருக்குற பல பெரியவர்கள் கிட்டே கேட்டு, குறிப்பு எடுத்து, வசனம் எழுதினோம். அதாவது மணிப்பிரவாள நடையில வசனங்கள் இருக்கும், அதோட மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, சில இடங்கள்ல கன்னடம், ஜெயினர்களின் மொழியான ப்ராக்ரிதம், புத்த மதத்தினரின் மொழியான பாலி, ஒடியா, உருது இத்தனை மொழிகளை தேவையான இடத்தில் பயன்படுத்தியிருக்கோம். சில தகவல்களை வரலாற்று ஆய்வாளர் திருமதி. சித்ரா மாதவன் எங்களுக்கு குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார். இப்படி பல தேடல்களுக்கு பிறகுதான் படத்தை உருவாக்கியிருக்கோம். இந்தப் படத்துக்கு ராஜ்குமார் பாரதி இசையமைச்சிருக்காரு. அவர், சுவாமி 'வேதாந்த தேசிகர்' படம் மூலமாக எல்லோராலும் அறியப்படணும்ங்கிறது எங்களோட ஒரு விருப்பம்!.”

 

சுவாமி வேதாந்த தேசிகரை அறிந்தவர்கள் மிகச் சிலரே. அதோடு அவர் வாழ்க்கை சரித்திரம் ஏற்கனவே நாடக வடிவில் எடுக்கப்பட்டு விட்டது. அப்படியிருக்கும் பட்சத்தில், உங்களுடைய இந்தத் திரைப்படம் எந்த விதத்தில் மாறுபட்டு இருக்கப் போகிறது?

“நீங்கள் குறிப்பிட்டதுபோல், ஏற்கனவே நாடக வடிவில் சுவாமியின் சரித்திரம் வந்திருந்தாலும், அதைப் பற்றி பலர் அறிந்திருக்கவில்லை. தேசிகர்  தன்னுடைய தத்துவங்களை விவாதங்களின் மூலம் பல ஊர்களில் அரங்கேற்றி வெற்றி பெற்றிருக்கிறார். அதுபோன்ற விவாதங்கள் பல, இத்திரைப்படத்தில் அரங்கேறியிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை வெள்ளித்திரைதான் அதற்கு சரியான தீர்வு. அவருடைய விவாத நிகழ்ச்சிகள் எங்கெல்லாம் நடந்ததோ, அதே இடத்தில் சென்று படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். இப்படியான ஒரு சலுகை நாடகத்தை விட சினிமாவுக்கே கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

அவருடைய கதையை நாங்க சீக்வன்ஸா சொல்லாம, நரேஷன் மூலமாக விவரிச்சு இருக்கோம். அதாவது, அஹோபிலமடத்தின் முதல் ஜீயர், பரகால மடத்தின் பிரதம ஜீயர், பிரதிவாதி பயங்கரம் ஸ்வாமி போன்றவர்கள் மூலமாக இத்திரைக்கதையை நகர்த்தியிருக்கிறோம்.”

 

சர்வதந்திரஸ்வதந்திரரான சுவாமி தேசிகரிடம், பல தனித்துவங்கள் இருந்ததாக அவரைப் பற்றிய வரலாறுகளில் கூறப்படுகிறது. அதுபோன்ற விஷயங்களை நீங்கள் இத்திரைப்படத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்களா?

“ சுவாமி தேசிகர், மிகப்பெரும் அறிவுஜீவியாக வாழ்ந்திருக்கார் என்பதில் எந்த விதமான ஐயங்களும் கிடையாது. அவரால், கிணறு வெட்ட முடியும், ஒரே நாளில் அவர் ஸ்லோகத்தை இயற்றியது, தனக்கு கெடுதல் நினைத்த பாம்பாட்டிக்காக, கருடனை நோக்கி அவர் சேவித்து, அவனுக்கு நல்லது நினைத்தது, இதைத்தவிர அவருடைய சில விவாதங்களை இந்தத் திரைப்படத்துல நாங்க சொல்லியிருக்கிறோம். அவருடைய சில ஸ்லோகங்கள், சதுரங்க விளையாட்டில் இடம்பெறும் குதிரையின் நகர்வு போன்ற பல விஷயங்கள் கூட இருக்கு. அதை விஷுவலாக கொண்டு வருவது சிரமமான ஒன்று. அதை நான் புத்தக வடிவில் எழுதிக்கொண்டிருக்கிறேன்.”

 

எப்பொழுது படம் வெளியாகும்?

“சுவாமி தேசிகருக்குதான் அது தெரியும். உண்மையை சொல்லணும்னா, திரைப்படம் எடுக்குறது எவ்வளவு சிரமம்னு உங்களுக்கே தெரியும். நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, எங்களுக்கு அவ்வளவாக பொருளாதாரம் கிடையாது. இதுல வேலை பார்க்குற மக்களை நம்பித்தான் எடுக்கிறோம். அவங்க தங்களோட ஓய்வு நேரத்துல வந்து படப்பிடிப்பை நடத்திக்கொடுத்துட்டு போறாங்க. இன்னும் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் இருக்கு. அக்டோபர் மாதம் அவரோட 750 ஆவது பிறந்த நாள் ஆரம்பம். அப்போ வெளியிடணும்னு நினைச்சிட்டு இருக்கோம். பார்க்கலாம்!.” என்று வேதாந்த தேசிகரின் வரலாற்று படம் குறித்த பதிவுகளை, நம்மிடம் சிறு உபன்யாசத்தைப்போல் கூறினார் துஷ்யந்த். அது செவிக்கு விருந்தாக அமைந்தது என்றால் மிகையில்லை!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles