கலை அழியும்போதே கலைஞனும் அழிஞ்சுடணும்! நடிகர் ராஜகுமாரன்

Friday, March 31, 2017

"படம் பார்க்கிறவர்களை விட, படம் எடுக்கிறவர்களின் எண்ணிக்கை கோலிவுட்டில் அதிகமாயிடுச்சு. எந்த இடத்தில் எந்த படப்பிடிப்பு நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு ஷுட்டிங் அதிகமா நடக்குது. இந்த மாதிரியான நேரத்தில் நாம எடுத்த ஒரு படத்தை, முதல் பார்வையிலே வாங்கிட்டாங்க என்கிறபோது சந்தோஷமாக இருக்கு.

அதற்காக சூர்யா சாருக்கும்,2 டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்துக்கும் எங்களுடைய ரஃப் நோட் கம்பெனி மூலமா ஆயிரமாயிரம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்!"- உணர்வுபூர்வமாக பேசுகிறார் இயக்குநரும் நடிகருமான ராஜகுமாரன். தமிழ் சினிமாவுக்கு லாயக்கற்ற முகம் என ஒதுக்கிய, கோலிவுட்டை 'கடுகு 'படம் மூலம் நிமிர்ந்து பார்க்க வைத்திருக்கும் புலிவேஷக் கலைஞன். தொடர்ந்து அவரிடம் பேசியபோது, 

 

'கடுகு' கதைக்குகள் வந்தது எப்படி?

"இயக்குநர் விஜய் மில்டன் சார் 'கடுகு' படத்தின் கதையை வந்து என்னிடம் சொன்னார். இந்தப் படத்துக்கு விஜய், அஜித், விக்ரம் சார் போன்றவர்களை வைத்து எடுத்தால் சிறப்பாக இருக்கும். அது தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கொடுக்கும். ஆனால், இதையெல்லாம் விட்டுட்டு என்னை வைத்து ஏன் சார் எடுக்க வேண்டும்? என்று அவரிடம் கேட்டேன். 'கதை உங்களை மாதிரி ஒருத்தரை டிமாண்ட் பண்ணுது. அதனால்தான் உங்களை தேர்ந்தெடுத்தேன்' என்றார். வர்த்தக ரீதியாக படம் போய்ச் சேரவில்லை என்றால் அத்தனை உழைப்பும் வீணா போயிடுமே சார்? என்று சொன்னேன். 'வியாபார ரீதியாகவும் இந்தப் படம் மக்களிடம் போய்ச் சேரும். நீங்களும் என்னை நம்புங்க. நம்மை நாம் நூறு சதவீதம் நம்பினால்தானே, பிறர் நம்மை நம்புவார்கள்!' என்றார். அதன்பின் தாமதிக்கவில்லை. அவரின் இயக்கத்தில் நடிக்க, என்னை முழுமையாக அர்ப்பணித்துவிட்டேன்!"

 

படத்தில் புலிவேஷ கலைஞனாகவே வாழ்ந்திருக்கிறீர்களே?

"சினிமா லாங்வேஜை புரிந்துகொள்ள நீண்ட அனுபவம் வேணும். அந்த அனுபவத்தோடு நானும் இருக்கேன். அவருக்கும் என்னை ரொம்ப நாளாக தெரியும். இந்தப் பாத்திரத்துக்கு நான் பொருத்தமானவனா இருப்பேன் என்று அவருக்கு தோன்றியிருக்கு. அதனால் என்னை அவர் தேர்ந்தெடுத்தார். இந்தப் படத்தில் நான் ஒரு தொலைந்து கொண்டிருக்கிற புலி வேஷக் கலைஞனாக நடித்திருக்கிறேன். புலி ஜெ. பாண்டி இதுதான் அந்தப் பாத்திரத்தோடு பேரு. 'கடுகு' படத்தில் நடிக்க ஆரம்பித்த பிறகு, ஒரு பத்து மாதம் என்னை வைத்து எண்ணெய்யில் போட்டு கடுகை பொரிப்பது போல பொரித்து எடுத்துவிட்டார்கள். இந்தப் படத்தின் பாத்திரத்துக்காக, என்னை தட்டி, வெட்டி, ஒட்டி ஒரு முழுக் கலைஞனாக மாற்றிய பெருமை இயக்குநர் விஜய் மில்டன் சாரையே சாரும். எல்லா புகழும் அவருக்கே!"

 

படப்பிடிப்பின்போதே உங்களுடைய நடிப்பு பேசப்பட்டதாமே?

"கடலூர் மாவட்டத்தில் இருக்கிற தரங்கம்பாடியிலதான் கதை நடக்கும். அதைச் சுற்றியும் படப்பிடிப்பு நடந்தது. 'கடுகு' படத்தில் பாதிக்கு மேல்தான் புலிவேஷமிட்டு வருவேன். அந்தப் பாத்திரத்துக்காக சென்னை மணலி, திருநெல்வேலி இருந்து எல்லாம் பயிற்சியாளர்கள் வந்து எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க. 'மேடையில் புலிவேஷம் கட்டி, நான் ஆடுகிற மாதிரியான காட்சி ஒன்று படத்தில் வரும். அதைப் படம்பிடிக்கும்போது உடன் இருந்த அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும், துணை நடிகர், நடிகைகளும் ரசித்து கவனித்திருக்கிறார்கள். ஷுட்டிங் ஸ்பாட்டில் அதுபற்றி பேச்சாகவும் இருந்திருக்கிறது. பிறகு, இதையெல்லாம் இயக்குநர் விஜய் மில்டன் என்னிடம் சொன்னார். கேட்கும்போது சிலிர்ப்பாக இருந்தது!"

 

படத்தை பார்த்துவிட்டு சூர்யா சார் என்ன சொன்னார்?

"போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் முடிந்து, சூர்யா சார் 'கடுகு' படத்தை பார்த்ததும் அவருக்கு ரொம்பவும் பிடித்துபோய் விட்டது. "படம் பார்க்க ஆரம்பித்த இரண்டாவது நிமிஷமே, நான் படத்துக்குள்ளே போய்ட்டேன். படத்துல யார் நடிக்கிறாங்க... என்பதே தெரியாமல், அவர்களோடு நானும் கலந்துட்டேன். இந்த மாதிரி ஒரு படம் தமிழ் சினிமாவில் அத்திப்பூத்த மாதிரி தான் வரும். அதை நாம விடக்கூடாது..." என்று சூர்யா சார், ஒரு பண்பலை வானொலிக்கு பேட்டி கொடுத்திருந்ததை கேட்டேன். அது போதும் சார்!" 

 

புலிவேஷக் கலைஞர்கள் பற்றி இப்போ என்ன நினைக்கிறீங்க?

"நம்ம நாட்டுல மொத்தம் 3,354 புலிகள் இருக்கு என்று  ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அந்தப் புலிகளை காக்கும் பொருட்டு வனத்துறையினரும், சமூக ஆர்வலர்களும் தீவிரமாக போராடி வருகிறார்கள். ஆனால், தமிழகத்தில் புலி வேஷம் கட்டி ஆடக்கூடிய கலைஞர்கள் என்று எடுத்துக்கிட்டா, விரல்விட்டு எண்ணிடலாம். அப்படியானவர்களை காக்க, நாம் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம்? ஒரு கலை அழியும்போதே, அதனோடு சேர்ந்து கலைஞனும் மரித்துப்போயிடணும் சார். புலிவேஷம் கட்டி மக்களை மகிழ்விக்கிற கலைஞன், ஒரு டீக்காக கையேந்தி நிற்கும் அவலம், துயரமானது..." - சமூக அக்கறையோடு முடித்தார் ராஜகுமாரன். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles