பாரம்பரியத்தை ஸ்டைலிஷாக காண்பிக்க முடியுமா?!

Friday, September 30, 2016

மீனாகாரி ஒர்க்ஸ், பாந்தினி முறம், சடங்குகளைப் பிரதிபலிக்கும் கல்யாண மாப்பிளை / பொண்ணு பொம்மைகள் என்று இன்றைய இளைஞர்களுக்கு ஒவ்வொரு சம்பிரதாயங்களையும் கற்றுக்கொடுக்கும் இடமாக விரிந்திருக்கிறது. அந்த இடத்திலிருக்கும் ஒவ்வொன்றிலும் கலைநயம். பார்த்தவுடன் அற்புதமான கலையனுபவம் மனதில் ஒட்ட முயற்சிக்கிறது. இதனை நமக்குத் தருகிறது, சென்னை ஆர்.கே.மடம் சாலையில் அமைந்திருக்கும் ஜேபி கிரியேஷன்ஸ். 

ஆயுதபூஜையை ஒட்டி, அந்த இடமே களைகட்டியிருக்கிறது. அதுபற்றி நம்மிடம் விவரித்தார் கடை உரிமையாளர் ஜெயஸ்ரீ பாலகிருஷ்ணன். 

 

“எனக்கு சின்ன வயசுலேருந்தே கிராப்ட் மீதான ஆர்வம் ரொம்ப அதிகம். எங்க அம்மா, பாட்டியெல்லாம் கைவேலைகள் நிறையா செய்வாங்க. நான் பம்பாயில பொறந்து வளர்ந்தேன். திருமணத்துக்கு அப்புறம், எங்க வீட்டுக்காரர் வேலை விஷயமா நிறையா ஊர் மாற வேண்டியிருந்தது. அதனால எனக்கு பல ஊர்களோட கலாச்சாரம், அவங்களோட கலைப்பொருட்களை பற்றி தெரிஞ்சுக்க வாய்ப்பு அமைஞ்சது. எனக்கு மூன்று குழந்தைகள். அவங்க ஓரளவுக்கு வளர்ந்த உடனே, திரும்பவும் கைவேலைகளைச் செய்ய ஆரம்பிச்சுட்டேன். முதல்ல சாரி பேக், ப்ளவுஸ் பேக் போன்றவற்றை செஞ்சேன். இதுக்கு நல்ல வரவேற்பு. ஏன்னா, இந்த பேக்ல பட்டுப்புடவைகள், காட்டன் புடவைகள்னு இப்படி எல்லா வகையான சேலையையும் அடக்கிவிட முடியும். முக்கியமா, உங்க பீரோவுல அதிகமான ஸ்பேஸ் எடுக்காது. புடவையோட மடிப்பும் கலையாது. 

 

நாங்க ஹைதராபாத், பெங்களூர்னு  ஊர்ஊரா எக்ஸிபிஷன் போட்டுட்டு இருந்தோம். அப்போ, எங்களோட கான்சப்டான கல்யாணமே வைபோகமே ரொம்ப ஹிட் ஆகிடுச்சு. கல்யாணம்ங்கிறது ஒவ்வொருத்தருக்கும்  லைஃப் டைம் ஈவெண்ட். கல்யாணத்துல நடக்குற ஒவ்வொரு சம்பிரதாயங்களும் ஸ்பெஷலா இருக்கணும்னு எதிர்பார்ப்பாங்க. 

 

அதுல, எப்போதுமே மணப்பெண்களுக்குத்தான் வெரைடீஸ் அதிகம். வேளாவேளைக்கு பட்டுப்புடவை, விதவிதமான ஆபரணங்கள் இப்படீன்னு சொல்லிகிட்டே போகலாம். எல்லாமே பெண்ணைச் சார்ந்துதான் நடக்கும். ஆனால், ஆண்களுக்குன்னு ஒண்ணுமே இல்லை. பெரும்பாலும் வெள்ளை வேஷ்டி, சட்டைதான். என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான், காசி யாத்திரை ஐடியா ’க்ளிக்’ ஆச்சு. வெள்ளை துணியில மயில்கண் பார்டர் வச்சு குடை, புக், பை மற்றும் கைத்தடி செய்துகொடுத்தோம். அது க்ராண்டாவும் தெரிஞ்சுது.

 

அதுக்கப்புறம் பொண்ணோட புடவைக்கு மேட்ச்சா காசி யாத்திரை செட் செஞ்சு கொடுக்க ஆரம்பிச்சோம். மாப்பிளை சீர்வரிசை, விளையாடல் செட் இப்படி ஒவ்வொரு விஷயத்துக்கும் மெனக்கெட்டு ரொம்ப ஆர்டிஸ்டிக்கா கொடுத்துட்டு வர்றோம். மீனாகாரி ஒர்க் சொம்பு, திரட்டிப்பால் டப்பா, குந்தன் ஸ்டோன் ட்ரே, போல்கி ஸ்டோன்ஸ் பதிச்ச ஜூவல் பாக்ஸ், வளையல் பாக்ஸ் இப்படி எல்லாத்துலயும் ஒரு அழகுக்கலை இழையோடி இருக்கும்.   

 

எங்களோட மெயின் ஸ்பெஷாலிட்டியே கல்யாண பொம்மைகள் தான். கல்யாணத்துல மாப்பிள்ளைக்கும் பெண்ணுக்கும் நடக்குற ஒவ்வொரு சடங்கையும் சிறிய மினியேச்சர் பொம்மைகளா செஞ்சு டிஸ்பிளே பண்ணுவோம். நிச்சயதார்த்தம், ஊஞ்சல், முகூர்த்தம், நலங்கு, வரவேற்பு, காசி யாத்திரை இப்படி எல்லா சம்பிரதாயங்களையும் பொம்மைகளா செஞ்சு வச்சிருக்கோம். 

 

ஓவ்வொரு சடங்குக்கும் மாப்பிள்ளையும் பொண்ணும் என்ன ட்ரெஸ் போடுறாங்களோ, அப்படியே அந்தப் பொம்மைகளுக்கு கட்டி விட்டுடுவோம். அது எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்சிருந்தது. ரிஷப்ஷனை மிஸ் பண்ணவங்க, பொண்ணு - மாப்பிள்ளை என்ன ட்ரஸ் பண்ணியிருந்தாங்கன்னு அந்த பொம்மையைப் பார்த்து தெரிஞ்சுக்குவாங்க.

 

கஸ்டமர்களுக்கும் பொம்மை ஐடியா ரொம்பப் பிடிச்சிருக்கு. அவங்க அந்த பொம்மைகளை சீமந்தம், முதலாவது திருமணநாள், நவராத்திரி கொலுன்னு எல்லா பங்ஷனுக்கும் உபயோகிச்சுக்கலாம். அதுதவிர, நவராத்திரி சமயங்கள்ல ரிட்டர்ன் கிப்ட் செய்றோம். தாம்பூலப்பை, விதவிதமான குங்குமச்சிமிழ், மீனாகாரி பிளேட்னு நிறையா கலெக்‌ஷன்ஸ் இருக்கு. இந்த வருஷம் ஹேங்கிங் லைட்ஸ் கொண்டு வந்திருக்கோம். 

 

பொழுதுபோக்கா ஆரம்பிச்ச விஷயம் இன்னிக்கி வெளியூர், வெளிநாடுன்னு பெரிய லெவல்ல இருக்கு. வெளிநாடுகள்ல இருக்குற நிறையா பேர், அங்கிருந்து ஆன்லைன் ஆர்டர்ல பண்றாங்க. எங்க குடும்பத்தோட சப்போர்ட், முக்கியமா எங்க ஊழியர்கள் இல்லேன்னா இந்த வெற்றி சாத்தியமில்லை.

 

எங்க கடையில வேலை பார்க்குறவங்களுக்கு, பொம்மைக்கு புடவை, மடிசார், பஞ்சகச்சம் எப்படிக் கட்டுறதுன்னு சொல்லிக்கொடுப்பேன். அவங்க அதை நல்லா கத்துக்குவாங்க. அதுதவிர, நிறைய கைவேலைகளையும் அவங்களே செய்வாங்க. அவங்களோட ஐடியாக்களையும் எனக்குச் சொல்லுவாங்க. அந்த ஐடியாக்களை நான் எடுத்துச் செய்வேன். அது அவங்களுக்குப் பெருமையாகவும் ஊக்கமாகவும் இருக்கும். அதனால, அவங்க கிரியேட்டிவ் ஐடியாக்களை செயல்படுத்த இன்னும் உழைப்பாங்க” என்று தான் வேலைவாங்கும் விதம் பற்றியும் விவரித்தார் ஜெயஸ்ரீ. எதையும் பாசிட்டிவாக அணுகும் இவரது முகத்தில், எப்போதும் பளிச்சிடுகிறது அழகான வெற்றிப்புன்னகை.

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles