விஜய்தான் பாவம்! ‘தேவி’ அனுபவம் சொல்லும் பிரபுதேவா!

Friday, September 30, 2016

பேசும்போதே, முகத்தில் விதவிதமான எக்ஸ்பிரஷன் காட்டுகிறார் பிரபுதேவா. ‘தேவி’ படத்தின் மூலம், இப்போது தயாரிப்பாளர் அவதாரம். படத்திலும் நேரிலும் வித்தியாசம் எதுவும் தெரியாத அளவுக்கு யதார்த்தமாக இருக்கிறார் இந்த நடனப்புயல். ‘தேவி’ படத்தின் புரமோஷனுக்காக வந்திருந்தவரைச் சந்தித்தோம். 

“தமிழ்சினிமாவில் நல்ல நடிப்பை, நான் பிரபுதேவாவிடம் பார்க்கிறேன்” என்று ஒரு பேட்டியின்போது இயக்குநர் மகேந்திரன் குறிப்பிட்டிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தமிழில் நடிக்க வந்திருக்கிறீர்களே?

“எல்லோரும் இதையேதான் கேட்கிறாங்க. உண்மையைச் சொன்னா, உங்களுக்குப் பிடிக்குமான்னு தெரியலை. ‘தேவி’ படத்தோட கதையில், வேறொரு நடிகர்தான் நடிக்க இருந்தாரு. ஒரு தயாரிப்பாளரா, அதைத்தான் முதலில் செஞ்சேன். சில காரணங்களால் அவரு நடிக்காததால, கடைசியில் நானே நடிக்க வேண்டியதாப் போச்சு. உண்மையில் இந்தக் கதை எனக்குப் பிடிச்சிருந்தது. இயக்குநர் ஏ.எல்.விஜய், “நீங்க நடிச்சா நல்லாயிருக்கும் சார்”ன்னு சொன்னாரு. “உண்மையிலேயே இது சரியா இருக்குமா?”ன்னு கேட்டேன். “நிச்சயமா”ன்னார். உடனே வேலைகளில் இறங்கிட்டோம்!”

 

தேவி படத்தோட ஸ்பெஷாலிட்டி?

“ ‘தேவி’ படம் வித்தியாசமான கதைன்னு எல்லாம் சொல்லமாட்டேன். ஆனா, ரொம்ப ஜாலியான, சந்தோஷமான படமாக இருக்கும். எமோஷன் வேல்யூ கதையில கொஞ்சம் தூக்கலா இருக்கும். தேவி படத்தோட தலைப்பையும் போஸ்டரையும் பார்க்கிறவங்க, இது ஒரு ஹாரர் படமாக இருக்கும்னு நினைக்கிறாங்க. உண்மையில், இந்தப் படத்துல ஹாரரை வெறும் இருபத்தைந்து சதவீதம்தான் வச்சிருக்கோம். ஆனா காமெடி படத்துல பிரதானமா இருக்கும். ஹாரர் ஒரு மூலையில கொஞ்சமா இருக்கும். இருக்கு ஆனா இல்லைன்னு சொல்லுவாங்களே, அந்த மாதிரி. ஆடியன்ஸை பயமுறுத்துற வகையில கோரமான முகமோ, காட்சிகளோ இருக்காது. கண்டிப்பா இது ஒரு பேமிலி என்டெர்டெயின்மென்ட் படம்தான்!”

 

பொதுவாக நடிகர் பிரபுதேவாவை பார்த்தாலே ஒரு குதூகலம் வந்துவிடும். இந்தப் படத்திலும் அதை எதிர்பார்க்கலாமா?

“ ’இந்தப் படத்துல நீங்க பிரஷ்ஷா இருக்கீங்க’ன்னு டைரக்டரும் கூட சொன்னாரு. நீங்க சொல்ற மாதிரி இருந்தால் சந்தோஷம்!”

 

படத்தின் நாயகி தமன்னா குறித்து?

“அடிப்படையில் தமன்னா கடினமான உழைப்பாளி. அவங்ககூட சேர்ந்து நான் வேலை பார்க்கிற முதல் படம் இது. இந்தப் படத்தோட கதை எனக்குத் தெரியும். ஆனா, தமன்னாவுக்கு ஒவ்வொரு காட்சியைப் பற்றியும் தெள்ளத்தெளிவா தெரியும். அந்தளவுக்கு ஈடுபாட்டோடு நடிச்சாங்க. படத்தில் அவங்க கேரக்டர் பேருதான் தேவி. அப்படின்னா, அவங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம்னு பாருங்க. ஒரு படத்தோட கதையில பெண் பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் இருந்துச்சுன்னா, அது நல்ல கதைன்னு எனக்குத் தோணும். அப்படியொரு கதையா தேவி படம் தமன்னாவுக்கு அமைஞ்சிருக்கு.”

 

படத்துல எல்லாமே மூன்று மாதிரி தெரியுதே?

(மெலிதாகச் சிரிக்கிறார்) “இந்தப் படத்தினுடைய கதை எல்லா மொழிக்கும் பொருந்திப்போகக் கூடியது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூணு மொழி பேசணும்னு, எனக்கே கூட தேவி படம் சவாலானதாக இருந்துச்சு. ஆனா, டைரக்டர் விஜய்தான் பாவம். அவருக்குதான் பென்டு நிமிர்ந்து போச்சு. படப்பிடிப்பின்போது மட்டுமில்லை, போஸ்ட் புரொடக்ஷன் போதும் ரொம்ப கஷ்டப்பட்டாரு!”

 

நடிகர்கள் தனுஷ், பிருத்விராஜ் போன்றவர்கள் தாங்கள் இயக்கும் படத்தில் நடிக்கவில்லை. இந்த டிரெண்ட்டை பத்து வருடத்துக்கு முன்பே நீங்கள் செய்துவிட்டீர்களே?

“இன்னும் அவங்க படத்தை முடிக்கலையே. பத்து வருஷத்துக்கு அப்புறம் கேளுங்க. அப்போ சரியா இருக்கும்!”

 

‘தேவி’ படத்தோட மார்கெட்டிங் வேல்யூ தெரிஞ்சுதான் தயாரிப்பில் இறங்கினீங்களா?

“ஆக்சுவலா, நீங்க யோசித்த அளவுக்கு எல்லாம் நாங்க யோசிக்கலை. தயாரிப்பாளரா கதை கேட்டபோது பிடிச்சிருந்தது. நானே நடிக்க இருந்ததால் மூணு மொழின்னு முடிவாச்சு. இப்போ, விநியோகஸ்தர்கள் எல்லாம் ரொம்ப தெளிவா இருக்காங்க. அவங்களுக்குப் பிடிச்சிருக்கிறததாலதான் மூணு மொழிகளிலும் படம் வியாபாரம் ஆகியிருக்கு. ஆக, மார்கெட் வால்யூ என்கிறது கூட நாம யோசிக்க வேண்டிய ஒண்ணுதான்!”

 

படப்பிடிப்பின்போது ஏதாவது கலாட்டா நடந்ததா?

“ஷூட்டிங்கின்போது விஜய், தமன்னா, சோனு, கேமிராமேன் மனுஷ் எல்லாருமே எனக்குப் புதுசு. படத்துல நல்லா நடிக்கணும் என்பதை விட, இவங்ககிட்ட நல்ல பேரு எடுக்கணும்னுதான் முடிவு பண்ணினேன். அதனால படப்பிடிப்புக்கு வந்தோமா, ஒழுங்கா நடித்தோமா, வீட்டுக்குப் போனோமான்னு இருந்தேன். கலாட்டாவுக்கு எல்லாம் நேரமில்லை!”

 

நடன இயக்குநர், நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எந்த ரோல் சவாலானது?

“நிச்சயமா தயாரிப்பாளர் ரோல்தான். ஏன்னா, மற்றதில் எல்லாம் பணம் வாங்குறோம். இதுல மட்டும்தான் பணம் கொடுக்கிறோம். இல்லையா?” 

 

ரசிகர்களுக்குச் சொல்ல விரும்புவது?

“ ‘தேவி’ படம் அக்டோபர் 7ல் ரிலீசாகுது. படத்தை தியேட்டரில் போய் பாருங்க. வேறென்ன சொல்ல?”

 

வேறு இயக்குநர்களின் படங்களில் நடிப்பீர்களா?

“உறுதியாக நடிப்பேன்!” சிம்பிள் ப்ளஸ் ஹம்பிளான பதில்கள் மட்டுமே, பிரபுதேவாவிடம் இருந்து கிடைக்கிறது. தமிழ்சினிமா இயக்குனர்கள், இனிமேல் இவரை மனதில்வைத்து விதவிதமான கதைகளைத் தயார் செய்யலாம். ஏன்னா, பிரபுதேவா இஸ் பேக்!

- கிராபியென் ப்ளாக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles