ஆடலும் பாடலும்  நாடகத்துக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கும் ! - வினோதினி வைத்தியநாதன்

Thursday, September 15, 2016

தான் நடிக்கும் படங்களில், இயல்பான நடிப்பின் மூலமாகத் தனித்துத் தெரிபவர் வினோதினி வைத்தியநாதன். அழகுக்குட்டி செல்லம், அப்பா போன்ற படங்களின் மூலமாக, சினிமா ரசிகர்களின் தேவதையாக மாறியிருப்பவர். இவரைப் பார்த்தால், இயக்குனர் கே.பாலச்சந்தரின் கதை நாயகியரை நேரில் பார்ப்பது போன்ற பிம்பம் தோன்றுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.

பேச்சில் மட்டுமல்ல, இவரது செயல்பாடுகளிலும் தெளிவுடன் தைரியம் கலந்திருக்கிறது. ’உங்களுக்குப் பிடித்த துறையைத் தேர்ந்தெடுத்து செய்தால், கண்டிப்பாக வெற்றி நிச்சயம்’ என்று ஆணித்தரமாகக் கூறும் வினோதினி மனோதத்துவத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சினிமா பிரபலமாக அனைவருக்கும் அறிமுகமாகி இருந்தாலும், நாடகக்கலைஞர் என்ற வேறொரு முகமும் இவருக்குண்டு. தொடர்ந்து தனித்துவமான நாடகங்கள் தந்துவரும் வினோதினியிடம், அவரது நாடக அனுபவங்கள் குறித்துக் கேட்டோம்.

 

“நான் ஒரு தனியார் கம்பெனியில எச்.ஆர். வேலை பார்த்துட்டு இருந்தேன். சரியாகச் சொல்லனும்னா, 2006 ஆம் ஆண்டு என்னோட வேலைகளை விட்டுட்டு, நடிப்பு மேல உள்ள ஆர்வத்துனால கூத்துப்பட்டறையில சேர்ந்தேன். மூன்றரை வருஷம் கூத்துப்பட்டறையில் பணியாற்றினேன். அதுக்குப்பிறகு, தனியா இயங்கணும்னு வெளியில வந்துட்டேன். எனக்குன்னு தனிப்பட்ட ஒரு குழுவை அமைச்சுக்காம, பல குழுக்களோட சேர்ந்து பணியாற்றி இருக்கேன். தமிழ் நாடகக் குழு, ஆங்கில நாடகக் குழுன்னு வித்தியாசம் பார்க்கறது இல்லை. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘க்லௌன்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்’ ங்கிற குழுவோட கூட ஒர்க் பண்ணியிருக்கேன். கூத்துப்பட்டறை, மெட்ராஸ் பிளேயர்ஸ், தியேட்டர் நிஷா, மூன்றாம் அரங்கம் கருணாபிரசாத், வெளி ரங்கராஜன், ஞாநி இப்படி எல்லார் கூடவும் தொடர்ந்து இயங்கிட்டு வர்றேன்.

 

சென்னையில நடக்குற ’ஷார்ட் அண்ட் ஸ்வீட்’னு தியேட்டர் பெஸ்டிவல் பார்த்தபிறகுதான், நாடகங்கள் எழுதலாம்னு எனக்கு ஐடியா வந்துச்சு. நாலஞ்சு வருஷமா, ஆக்டிவ்வா எழுதிட்டு வர்றேன். ‘சாத்தூர் சந்திப்பு’ன்னு காமெடி நாடகம். இந்த நாடகம் எல்லோராலும் வரவேற்கப்பட்டது. அதுக்கு அப்புறம், ஹிந்து டிராமா பெஸ்ட் ஒண்ணு வந்துச்சு. அதுக்கு என்னை ஒரு நாடகம் எழுதச் சொன்னாங்க. பம்மல் சம்பந்த முதலியார் நாடகம்னா, எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன்னா அவரோட எழுத்துகள்ல நிறைய நையாண்டி இருக்கும். கூத்துப்பட்டறையில் இருக்கும்போது, அவரோட நாடகங்கள், எழுத்துக்கள்னு எல்லாவற்றையும் கத்துக்குற வாய்ப்பு எனக்குக் கிடைச்சது. அவரோட ஒரு நாடகத்தை இன்ஸ்பிரேஷனா வச்சுட்டு தான், நான் ‘ஓர் ஒத்திகை’ எழுதினேன். அந்த நாடகத்துக்குள்ள தெருக்கூத்தை கொண்டு வந்தேன். 

 

என்னைப் பொறுத்தவரைக்கும் பாடலும் ஆடலும் இருந்தா, அது அந்த நாடகத்துக்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுக்கும்னு நம்பறேன். தெருக்கூத்தையும் சேர்த்ததால், எங்களுக்குச் சில அடவுகள் தெரிய வேண்டியது அவசியமாச்சு. அதுக்காக, ஆத்தூர் ஏழுமலைன்னு ஒருத்தரை தொடர்பு கொண்டோம். அவரு, தெருக்கூத்துல இருக்கும் சில நெளிவு சுளிவுகளை எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தாரு. இந்த ‘சாத்தூர் சந்திப்பு’, ‘ஓர் ஒத்திகை’ என்ற இரண்டு நாடகத்தையும் சேர்த்து, ‘நாகர்கோயில் எக்ஸ்பிரஸூம் நாடகக் கம்பெனியும்’ பண்ணோம். இதுவரைக்கும் ஒரு வருஷத்துல எட்டு ஷோ பண்ணிட்டோம்.

 

இப்போ இந்த வருஷம் ஹிந்து பெஸ்டுக்காக, ‘1001 இரவுகள்’ ன்னு ஒரு நாடகம் பண்ணோம். ஒரு மணி நேர அவகாசத்துக்கு முழு நீள தமிழ் நாடகமாக பண்ணச் சொன்னாங்க. இதோட ஸ்க்ரிப்ட், பாடல்கள் எல்லாத்தையும் நானே எழுதி இயக்கியிருக்கேன். சின்ன வயசுல அக்பர் - பீர்பால் கதைகள், அம்புலிமாமா கதைகள், தெனாலி ராமன் கதைகள் இதையெல்லாம் கேட்டிருப்போம். இந்த வரிசையில அரேபிய இரவுகள் கதையும் வரும். அதை அடிப்படையா வச்சு எழுதினதுதான் இந்த ‘1001 இரவுகள்’. 

 

எல்லோருக்கும் தெரிந்த கதையாக இருந்தாலும், இதை நவீன காலத்துக்கு ஏற்ற மாதிரி, ஸ்டேஜுக்கு ஏற்ற மாதிரி, நான் கொஞ்சம் மாற்றி எழுதினேன். இந்தக் கதையில, தெனாலி ராமன் எல்லாம் வருவாரு. இதுல கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் மாறி மாறி வரும். இந்த ஸ்டைல் ஆப் ரைட்டிங்குக்கு, எனக்கு இன்ஸ்பிரேஷன் முத்துசாமிதான். இந்த நாடகத்துல, ஒரு கட்டத்துல கதாபாத்திரங்கள் உயிர்பெற்று கதை மாந்தர்களோட வர ஆரம்பிச்சுடுவாங்க. அந்த அபத்தத்தனம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று தனது நாடக அனுபவங்கள் பற்றி விரிவாக விவரித்தார் வினோதினி.

 

அவரிடம் ‘தற்போதைய சினிமாவில் கதாநாயகிகளுக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கிறதே’ என்றதும், “என்னால அப்படிச் சொல்ல முடியாது. கதையைக் கேட்டுதான் ஒத்துக்குறாங்க. என்னைக் கேட்டால், முன்பைவிட இப்போ படங்கள் ரொம்ப அதிகமாகிடுச்சுன்னு தான் சொல்லுவேன். கதை கேக்குறவங்களுக்கு, அவங்க கேரக்டரோட முக்கியத்துவம் தெரிஞ்சிருக்கும். அவங்க எவ்ளோ நேரத்துக்கு திரையில வரப்போறாங்க, இந்த கதாபாத்திரம் கதைக்கு திருப்புமுனையை இருக்குமான்னு, அவங்களுக்குத் தாராளமா புரியும். அவங்களுக்கு வேணுமானால் நடிக்கப்போறாங்க. இல்லேன்னா, வேண்டாம்னு சொல்லப் போறாங்க. இப்போ உங்க திறமைகளை வெளிப்படுத்தறதுக்கு நிறைய மீடியம் இருக்கு. நீங்களே ஒரு பிரைவேட் வீடியோ எடுத்து, யூட்யூப்ல அப்லோட் பண்ணலாம். இப்படிப் பல மார்க்கங்கள் உங்களுக்கு இருக்கு. என்னைப் பொறுத்தவரைக்கும், நடிப்புக்கான திறந்தவெளி நிறையா இருக்குன்னுதான் சொல்லுவேன்” என்று சினிமா நடிப்பைப் பற்றியும் பேசியவாறே நமக்கு விடையளித்தார்.

 

நடிப்போடு நின்றுவிடாமல், எழுத்தையும் இயக்கத்தையும் கையிலெடுத்திருக்கிறார் வினோதினி வைத்தியநாதன். அவரது பேச்சு, எதிர்காலத்தில் அவரிடமிருந்து நிறைய நல்ல படைப்புகள் வெளியாகும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது. 

 

மேலும் படிக்க:

'ரெமோ'ண்டிக் லுக்கில் கலக்கும் சீனா கானா..!

ஆண்டவன் கட்டளை ‘பேப்பர் மேரேஜ்’ கதையா..!?

இருமுகனில் ஏறுமுகம் கண்ட விக்ரம்! 

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles