குத்தாட்டத்தில் குதித்த ரஜினியின் நாயகி 'ராதிகா ஆப்தே'!

Thursday, September 8, 2016

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி, சமீபத்தில் வசூலில் சக்கைபோடு போட்ட படம் ‘கபாலி’. இந்தப் படத்தில் ரஜினியின் நாயகியாக வந்து, 'மாய நதி'யில் நம்மையெல்லாம் மூழ்கடித்தவர் ராதிகா ஆப்தே. அவரின் நடிப்பைப்பற்றி சொல்லவே தேவையில்லை. எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும், கொடுத்த வேடத்தில் பிச்சு உதறுவார். அதுவும் குடும்பப்பாங்கான பாத்திரமெனில், அவருக்கு நிகர் அவரேதான். பாலிவுட்டில், இன்றைய தேதியில் பேமிலி டிராமாவுக்கு அவரை விட்டால் ஆளில்லை என்ற நிலை.

இப்படியெல்லாம் ராதிகா ஆப்தேவின் பிம்பங்கள் இணையத்தில் உலாவந்து கொண்டிருக்கும் நிலையில், புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. தெருவில் இறங்கி ராதிகா ஆப்தே நடனம் ஆடப்போகிறார் என்று வெளியான அந்தச் செய்தி, நெட்டிசன்களை மட்டுமல்லாமல் இந்தியத் திரையுலகையே கொஞ்சம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. 

ராதிகா ஆப்தேவின் மீதான கவனக்குவியலுக்குக் காரணம் குத்தாட்டம் மட்டுமல்ல. “தன்னுடைய காந்தக் குரலால் இசை ரசிகர்களின் மனங்களை கட்டிப்போட்டிருக்கும் கானக்குயில் ஆஷா போன்ஸ்லேவின் பிறந்தநாளுக்காக, நான் தெருவில் இறங்கி ஆடப்போகிறேன்” என ராதிகா ஆப்தே விடுத்துள்ள ஸ்டேட்மென்ட்தான்!

“திடீரெனத் தெருவில் இறங்கி ரசிகர்கள் முன் ஆடுவது என்றால் ..ச்சும்மாவா? அதற்கெல்லாம் பயிற்சி வேண்டாமா?” என்று அவரிடமே கேட்டால், “லண்டனில் இரண்டு வருடம் நவீன நடனத்தை கத்துகிட்டு வந்துருக்கேனாக்கும்..” என்று அந்தப் பக்கத்தில் இருந்து பதில் வந்துவிழுகிறது. சரி, எந்தெந்த பாடல்களுக்கு அம்மணி ஆடப்போகிறார்? பாலிவுட்டின் கிளாசிக் பாடல்களான “ஆஜ் ரபட் ஜாயே தோ” (நமக் ஹலால்) “ஜானே தோ னா” (சாகர்) பாடல்களுக்கு முதலிடம் என்று பதில் கிடைக்கிறது. அதோடு, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற மேலும் சில பாடல்களும் ராதிகா ஆப்தேவின் பட்டியலில் உள்ளதாம். இந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சிக்காக, நவீன நடனத்தையும் லத்தீன் நடனத்தையும் இணைத்து விளையாடும் நடனக் கலைஞரான டெரன்ஸ் லூயிஸோடு சேர்ந்து குத்தாட்டத்தில் குதிக்கிறார் ராதிகா ஆப்தே.
 
திடீரென்று இப்படியொரு முடிவை ராதிகா ஆப்தே எடுக்க, ஆஷா மீதுள்ள பற்றுதான் காரணமா? “வழக்கமாக, ராதிகா நடிக்கும் பாத்திரங்கள் எல்லாம் குடும்பப் பாங்கானதாகவே உள்ளது. அதிலிருந்து கொஞ்சம் வேறுபட்டு, தன்னால் குத்தாட்டமும் போட முடியும் என ரசிகர்களிடம் அவர் நிரூபிக்க நினைக்கிறார்” என்கிறது பாலிவுட் வட்டாரம். காரணம் எதுவாகினும், ஆஷா போஸ்லேவின் பிறந்த நாளான இன்று, ராதிகா ஆப்தேவின் குத்தாட்டம் ரசிகர்களுக்கு ’தெறி’ விருந்தாக இருக்கும் என்பதில் ஆச்சர்யமில்லை!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles