சிவா, ஜெய் ரெண்டு பேரும் பெரிய ஹீரோவாகிட்டாங்க! நட்பைப் பாராட்டும் நிதின்சத்யா

Monday, October 31, 2016

சென்னை 28 படத்தின் ஹைலைட்டே, நிதின் சத்யாவின் தங்கையை சிவா காதலிக்கிறார் என்று தெரியவரும் காட்சிதான். அதன்பிறகு, ஷார்க்ஸ் டீமில் பெரிய பிரச்சனை வெடிக்கும். உணர்ச்சிவசப்படும் நிதின் சிவாவை அடிப்பார். அப்போது, ஆம்புலன்ஸ் டிரைவராக வரும் அஜய்ராஜ் நிதினை சமாதானப்படுத்துவார்.

நிதின்சத்யா அவரிடம், “உனக்கொரு தங்கச்சி இருக்காள்ல. நான் அவளை உஷார் பண்ணவாடா?"ன்னு கேட்பார். ’சென்னை 28 இன்னிங்ஸ் 2வில் அதுவே நிகழ்ந்திருக்கிறது’ என்கிறது படக்குழு. ’சிவா மேல கோவப்பட்டு அவரை அடிச்சுட்டு, இப்படி அஜய்க்கு செய்றது நியாயமா பாஸ்?’ என்றவாறே நிதின்சத்யாவிடம் நல்லா நாலு கேள்வி கேட்டோம்.

 

சென்னை 28 பார்ட் 2 பற்றி..?

“வெங்கட் பிரபு எனக்கு சூப்பரான ஒரு பேக்கேஜ் கொடுத்திருக்காருன்னுதான் சொல்லுவேன். சென்னை 28 பார்ட் 1ல சொன்னமாதிரி, இதுல அந்த ஏழுமலையோட தங்கச்சியைத்தான் காதலிச்சுக் கல்யாணம் பண்ணியிருக்கேன். எனக்கே இது ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. இந்த மாதிரி விஷயங்கள், நம்ம சென்னை 28 இன்னிங்ஸ் 2ல இருக்கு.”

 

உங்கள் ஜோடியாக நடித்துள்ள கிருத்திகா பற்றி..?

“நடிகை கிருத்திகா, என்னை மிரட்டுற மனைவியா இதுல பெர்பார்ம் பண்ணியிருக்காங்க. இப்போ நிறையா படங்கள்ல அவங்க கமிட் ஆகியிருக்காங்க. நாங்க நல்லா போட்டி போட்டு நடிப்போம். இது நல்ல காம்பினேஷனா வந்திருக்கு, அதை நீங்க திரையில பார்ப்பீங்க.”

 

இயக்குனர் வி.பி. பற்றி..?

“ரொம்ப நல்ல மனிதர். எங்க எல்லாருக்கும் அண்ணன், அதுக்கும் மேல எங்க ஆசான்னுதான் சொல்லணும். படப்பிடிப்பின்போது எல்லோருக்கும் அவ்ளோ ப்ரெஷர் இருக்கும். “என்னடா இப்படி ப்ரெஷராயிருக்கு”ன்னு நாங்க பீல் பண்ணுவோம். ஆனால், அவரு எந்த ஒரு வேலைப்பளுவையும் முகத்துல காட்டவே இல்லை. பிரமாதமான தயாரிப்பாளர் அவரு. எங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் செஞ்சு கொடுத்தாரு. இருபது வருஷத்துக்கு முன்னாடி நான் எப்படிப் பார்த்தேனோ, இன்னிக்கி வரைக்கும் துளியும் மாறாமல் அப்படியேதான் இருக்கார் வி.பி."

 

கிளப் 7 பற்றி..?

“இதைப்பற்றி உங்ககிட்ட நிறைய பேரு ஏற்கனவே சொல்லியிருப்பாங்க. அந்த செவன்ல உண்மையா இருந்தவங்க நானும் விஜய் வசந்தும்தான். அதுக்கு அப்புறமாத்தான், எல்லாரும் உள்ளே வர ஆரம்பிச்சாங்க. ஷூட்டிங் முடிச்சு அரைமணி நேரம் நல்லா ரெப்ரெஷ் பண்ணிட்டு, அந்த கிளப் செவன்ல கூடுவோம். விடிய விடிய, அடுத்த நாள் ஷூட்டிங்கில எப்படி இன்னும் பெட்டரா பண்றதுன்னு கலந்து பேசுவோம். இந்த டிஸ்கஷன் எல்லாம் பிரேம்ஜி தலைமையிலதான் நடக்கும். இன்னொரு முக்கியமான விஷயம், இது வெங்கட் பிரபுவோட ஏழாவது படம். நாங்க ஏழு பேர், அவர் பேர் ஏழு வார்த்தையிலே இருக்கு. எங்களோடது க்ளப் செவன். இதெல்லாமே இயல்பா நடந்த ஒரு விஷயம்.”

 

சென்னை 28 இன்னிங்ஸ் 2ல் இடம்பெற்ற பன்ச் டயலாக் பற்றி..?

“பார்ட் ஒண்ணுல நான் பேசின “எப்படிப் போட்டாலும் அடிக்குறான்டா" என்ற வசனத்தை, கிரிக்கெட் இருக்குறவரைக்கும் எல்லாரும் பேசுவாங்க. அதுக்கு முழுக்காரணம் வெங்கட் பிரபுதான். அதே மாதிரி பார்ட் டூவுல, “இந்த பத்து நாள் இவங்க கூடத்தான் குடிக்கப்போறேன், கிரிக்கெட் விளையாடப் போறேன், கூத்தடிக்கப் போறேன்”ங்கிற பன்ச் டயலாக்கை நீங்க டிரைலர்ல பார்த்திருப்பீங்க. இந்த மாதிரி நிறையா பன்ச்கள் எனக்கிருக்கு, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க."

 

சென்னை 28ல் கிடைத்த நண்பர்கள் இப்போ எப்படியிருக்காங்க? 

“எல்லாரும் தேறிட்டாங்க. யாரையும் ஏமாத்தவே முடியலை.ஏன்னா, பார்ட் ஒன் வரும்பொழுது நானும் அரவிந்தும்தான் அனுபவசாலிகள். இப்போ சிவா, ஜெய் ரெண்டு பேரும் பெரிய ஹீரோவாகிட்டாங்க. ஆனாலும், பொசிஷனுக்கு அப்போ சண்டை போட்டுக்கிற மாதிரிதான் இப்பவும் போட்டுப்போம். ஹவுஸ் பார்ட்டி சாங் பாருங்க, அதுல எல்லாருக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்திருப்பாங்க. ”

 

ரசிகர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

“சென்னை 28 உலக அளவுல எல்லாரையும் கவர்ந்த படம். எல்லாவிதமான ரசிகர்களையும் திருப்திப்படுத்தும். அதுல எனக்கு நூறு சதவிகிதம் நம்பிக்கையிருக்கு. நமக்குள்ள நடக்குற உணர்ச்சிகளை ஒரு படமாகப் பார்த்தால் எப்படியிருக்குமோ, அப்படி ஒரு அழகான படம் சென்னை 28. படத்தைப் பார்க்காம மிஸ் பண்றது உங்க இஷ்டம். ஆனால் என்னைக் கேட்டால், மிஸ் பண்ணாம படத்தைத் தியேட்டர்ல பாருங்கன்னுதான் சொல்லுவேன்."

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles