வீருவுக்கு இன்று பிறந்தநாள்!

Thursday, October 20, 2016

எது எப்படியிருந்தாலும், நான் இப்படித்தான் இருப்பேன் என்றிருப்பார்கள் சிலர். அது மற்றவர்கள் பார்வைக்கு வினோதமாகத் தெரியும். அப்படிப்பட்ட நபர்கள் வெற்றி பெறும்போது அல்லது தோல்வி பெறும்போது, அவர்களது இயல்பு குறித்தான விவாதங்கள் பெருகும். அதிலொருவர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக். வீரு என்பது இவரது செல்லப்பெயர்.

சேவாக்கின் ஆட்டத்திறமையை விரும்பாதவர்களும், அவர் ஆடும்போது கண்ணிமைக்காமல் பார்க்கத்தான் வேண்டியிருக்கும். ஏனென்றால், அவர் விளையாடிய போட்டிகள் பெரும்பாலானவற்றில் இந்திய அணியின் கை ஓங்கியிருந்திருக்கிறது. அதுதான், இன்றைக்கும் நாம் சேவாக்கை நினைவுகூரக் காரணமாகிறது. 

கவனக்குறைவு ஏதும் இல்லாமல், மனதில் எழும் கனவைப் பின் தொடர்ந்தால் போதும்; வானமே நம் வசப்படும். எளிய பின்புலத்தில் இருந்து வந்த சேவாக் போன்ற ஜாம்பவான்களின் வெற்றிகள், இதனை ஆணித்தரமாகச் சொல்லும். ஒருகாலத்தில் டெல்லி ரஞ்சி அணிக்காக விளையாடிய சேவாக், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் போலப் புகழ்பெற வேண்டுமென்று கனவு கண்டவர். பின்னாளில் இந்திய அணிக்காக விளையாடியபோது, அதே சச்சினுடன் சேர்ந்து தன் கைவரிசையைக் காட்டியவர். ’சச்சின்! சச்சின்!’ என்று கோஷமிடும் ரசிகர்களை, மெல்லத் தன் பக்கம் ஈர்த்தவர். டெஸ்ட் போட்டிகள் இப்படித்தான் இருக்கும் என்ற பார்முலாவை உடைத்து, ரசிகர்களை நாள்முழுக்க உற்சாகப்படுத்தியவர். 

சச்சினும் சேவாக்கும் விளையாடிய காலங்களில், தூரத்தில் இருந்து பார்ப்பவருக்கு இருவருக்கும் எந்த வித்தியாசமும் தெரியாது. அந்த அளவுக்கு, சச்சினை அடியொற்றிப் பின்பற்றியவர் சேவாக். பிற்காலத்தில், அவர் அதே சச்சினுக்குப் போட்டியாக உருவெடுத்தது காலத்தின் ஆச்சர்யங்களுள் ஒன்று. சேவாக் களத்தில் நின்றால் போதும்; அவர் நிற்கும் நிமிடங்கள் அதிகமானால், ஸ்கோர் போர்டில் ரன்களும் உயரும். 2000ம் ஆண்டு முதல் 2008ம் ஆண்டுவரை, இந்த நிலைமையே தொடர்ந்தது. 

90 ரன்கள் எடுத்திருந்தாலும், 190 ரன்கள் எடுத்திருந்தாலும் சேவாக்கின் ஆட்டத்தில் மாற்றம் ஏதும் இருக்காது. முதல் பந்தை எதிர்கொள்ளும் மனோபாவம் மட்டுமே, அவரிடம் எப்போதும் மீதமிருக்கும். இதுதான் அவரது பலம். ஒருவகையில், இது அவரது பலவீனமும் கூட. பின்னாட்களில் வீருவின் ஆட்டத்திறன் பாதிக்கப்பட்டபோதும் கூட, அவர் அந்தப்போக்கை கைவிடவில்லை. அதுவே, அவர் அணியைவிட்டு விலக்கப்படவும் காரணமானது. அதன்பிறகு, அவர் மீண்டு வரவில்லை. அதற்கான வாய்ப்புகளும் கைகூடவில்லை. 

பார்வையாளனை மகிழ்விக்கும் திறன்பெற்ற எந்தவொரு கலைஞனும், எந்தக்காலத்திலும் புறக்கணிப்பைச் சந்திக்கக்கூடாது. சேவாக் தனது ஓய்வு முடிவை அறிவித்தபோது, அத்தகைய துயரம் நிகழ்ந்தது. ஒரு சில ஆட்டங்களில் தலைகாட்டிவிட்டு, மைதானத்தில் இருக்கும் ரசிகர்களின் முன்னிலையில் ஓய்வை அறிவிக்கும் அவரது எண்ணம் கடைசிவரை ஈடேறவேயில்லை. கிரிக்கெட் வரலாற்றில், வேறெந்த வீரருக்கும் நிகழக்கூடாத அசிங்கம் அது. 

யார் நம்மைக் கொண்டாடுகிறார்களோ, அவர்களே நம்மைப் புறக்கணிப்பது வேதனையின் உச்சம். புகழின் உச்சத்தைத் தொட்டவர்களில் சிலருக்கு, இந்த அனுபவத்தைச் சந்திக்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்படும். வரலாற்றில் மறக்கமுடியாத சாதனைகளைச் செய்தபின்னும், இப்படியொரு நிலைமையை எதிர்கொள்வதை யாராலும் சகிக்க முடியாது. கிரிக்கெட் என்ற விளையாட்டின் மூலமாக எத்தனையோ ரசிகர்களை குதூகலப்படுத்திய வீருவுக்கு, அந்தச் சாபம் வாய்த்தது. ஆனால், அதையும் மனமுவந்து ஏற்றுக்கொண்டார் அவர். 

டெஸ்ட், ஒருநாள் மற்றும் ட்வெண்டி 20 போட்டிகளில் ஆடும்போது, ஒவ்வொரு வீரரும் வெவ்வேறு விதமாகச் செயல்படுவார்கள். சேவாக், அதனை ஒருபோதும் செய்ததில்லை. சிறிய இடைவெளிக்குப் பிறகு, இப்போது அந்தத்திறன் கவனிக்கப்படுகிறது. டேவிட் வார்னர் போன்று, பல சர்வதேச வீரர்கள் இவரது பார்முலாவைப் பின்பற்றுகின்றனர். ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறுகின்றனர். சச்சின், சவுரவ், ராகுல், லக்‌ஷ்மண், கும்ப்ளே என்று நீளும் சமீபத்திய கிரிக்கெட் சாதனையாளர்களின் வரிசையில் வீருவுக்கும் தனித்த இடம் உண்டு. 

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றபின் பயிற்சியாளராகவோ, வர்ணனையாளராகவோ இருப்பது சிலரது விருப்பம். அந்த வகையில், வர்ணனையாளராகி இருக்கும் சேவாக், அந்தக்களத்திலும் அதிரடியாகத்தான் செயல்படுகிறார். அவரால் வேறுவிதமாக இருக்க முடியாது. ஏனென்றால், மக்களை மகிழ்விப்பதற்காகவே மைதானத்திற்குள் புகும் மாமனிதர்களில் ஒருவர் வீரு.

வீரேந்திர சேவாக்கின் பிறந்தநாள் இன்று!

-பா.உதய்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles