இப்போ வர்ற நாடகங்கள்ல  காமெடி மட்டும்தான் இருக்கு!  சாட்டையைச் சுழற்றும் ஒய்.ஜி. மகேந்திரன் 

Saturday, October 15, 2016

“நான் சொல்ல வர்ற கருத்து, முன் வரிசையில இருக்குற மேல்தட்டு மக்களுக்கும் புரியணும். பின் வரிசையில இருக்குற எளியவர்களும் புரிஞ்சுக்கணும். இதுதான் எங்க நாடகங்களோட நோக்கமே.” நாடகத்தைப் பற்றிய கேள்வியை ‘நாடக உலகின் பிதாமகன்’ ஒய்.ஜி. மகேந்திரனிடம் வைத்தபோது, பளிச்சென்று பதில் வருகிறது. நாடக இயக்குனர், சமூக ஆர்வலர், கல்வியாளர் எனப் பன்முகம் கொண்ட ஆளுமை இவர். பாரத் கலாச்சார் அலுவலகத்தில் இருந்தவரிடம், அவரது நாடக உலகம் பற்றிக் கேட்டோம். மிகவும் எளிமையாகத் தன்னுடைய நாடக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார் ஒய்.ஜி.எம்.

“1952ல இந்த நாடகக் குழுவை, எங்கப்பாதான் தொடங்கி வச்சாரு. அப்போ எனக்கு இரண்டு வயசு. அறுபத்தி நான்கு வருஷமா, இடைவிடாமல் தொடர்ந்து நாடகம் போட்டுட்டு வர்றோம். சில குழுக்களெல்லாம் நடுவுல கொஞ்சம் காணாமல் போய்ட்டு, திடீர்னு ’இது எங்களோட முப்பதாவது ஆண்டு விழா’ன்னு கொண்டாடுவாங்க. நாங்க அப்படியெல்லாம் இல்லை. என்னோட அறுபத்தி ஆறாவது தயாரிப்பா, இப்போ ‘காசேதான் கடவுளடா' நாடகத்தை மேடை ஏற்றியிருக்கேன். அப்படின்னா, ஓவ்வொரு வருஷமும் ஒரு நாடகத்தை தயாரிச்சு அரங்கேற்றி இருக்கேன்” என்று பெருமிதம் பொங்கப் பேசுகிறார். நாடக உலகம் கண்ட மாற்றங்கள் பற்றிய விமர்சனம், அவரது பேச்சின் இடையே சட்டென்று எட்டிப்பார்க்கிறது.

 

நாடக உலகம் சந்தித்த மாற்றம்?

“அந்தக் கால நாடகங்கள்ல 'சப்ஸ்டன்ஸ்’ இருக்கும். அதாவது, காமெடியோட சேர்த்து கருத்தையும் சொல்வாங்க. உதாரணத்துக்குச் சொல்லணும்னா, இப்போ போட்டுட்டு இருக்குற ‘காசேதான்  கடவுளடா’ ஒரிஜினலா நாடகம்தானே. இதுல காமெடி நிறையா இருந்தாலும், அடிப்படையா படாடோபம், வீண் ஈகோ, அளவுக்கு மீறி வாழ்வது போன்றவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பாங்க. அதுதான் கதையும் கூட. அதனால, காமெடி இருந்தாலும் அடிப்படை காரணம்னு ஒண்ணு இருக்கும்.

இப்போ பார்த்தீங்கன்னா, நம்ம வாழ்க்கை ரொம்ப மாறிடுச்சு. மனஅழுத்தங்கள் அதிகரிச்சுடுச்சு. பேப்பர்ல கூட நல்ல செய்திகளைத் தேட வேண்டியதா இருக்கு. அந்த ஸ்ட்ரெஸ்லருந்து வெளிவர, காமெடி டிராமாக்களை எல்லோரும் ரொம்ப விரும்புறாங்க. எப்படியாவது காமெடி மட்டும் இருந்தாப் போதும்னு நினைக்கிறாங்க. 

நாடகம் மட்டுமில்லை கர்நாடக சங்கீதம், நாட்டியம், சினிமா இப்படி எல்லா கலைகளுக்கும் பொற்காலம் முடிஞ்சுடுச்சு. என்னைப் பொறுத்தவரை, கலைகள் அழிந்துபோய்விட்டது என்பது தவறு. எங்களாலேயே, அறுபதுகள்ல போட்ட நாடகம் மாதிரி இப்போ போட முடியாது. இப்போ இருக்குற மக்களோட ரசனையே வேறு. 

இந்த காலகட்டத்துக்கு ஏற்றமாதிரி, கலைகளை வளர்க்கிறவங்க இருக்காங்கன்னு சொல்லுவேன். என்னையே எடுத்துக்குங்க. எங்க குழுதான், இப்போ இந்தியாவிலேயே ரொம்பப் பழமையான, நாடகத்தோட  பாரம்பரியம் மாறாத குழுன்னு சொல்லுவேன்.”

 

சினிமாவின் வருகையினால், நாடகம் அழியும் அபாயம் ஏற்பட்டதே?

“அப்படியெல்லாம் இல்லவே இல்லை. இன்னிக்கி இருக்குற சூழல்ல யாரும் சினிமாவே பார்க்குறது இல்லை. வருஷத்துக்கு தோராயமா எழுபது படங்கள் வருது. ஆனால், ஆறு படங்கள்தான் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டுன்னு கணக்கு சொல்றாங்க. அதுக்காக சினிமாவே அழிஞ்சுடுச்சுன்னு சொல்ல முடியுமா? சினிமாவைத் தவிர இன்னும் பல விஷயங்கள், ஜனங்க கவனத்தை திசைதிருப்புது. அவங்க ஆன்லைன்ல எவ்வளவோ விஷயங்களை பார்த்துத் தெரிஞ்சுக்குறாங்க. பார்க்கப்போனால், எங்க நாடகத்தோட நிலைமை எவ்வளவோ பரவாயில்லை. லாபம் அதிகம் இல்லைன்னாலும், நஷ்டம் வர்றதில்லை.”

 

பல்வேறு துறையில் இருக்கிறீர்கள், நேரத்தை எவ்வாறு நிர்வகிக்கிறீர்கள்?

“ஒருநாளைக்கு இருபத்து நான்கு மணி நேரம் இருக்கு. ஒருத்தர் நேரம் இல்லேன்னு சொல்றாருன்னா, அவரு சோம்பேறின்னுதான் அர்த்தம். அவருக்கு நேரத்தை சரியாக நிர்வாகம் செய்யத் தெரியலை. எந்த வேலையைச் செய்யணும், செய்யக்கூடாதுன்னு பிளான் பண்ணிக்கணும். அதுக்கு ஏற்ற மாதிரி, உங்க நேரத்தை நீங்கதான் பங்கிட்டுக்கணும். தேவையில்லாம, வேலைகளை மேலமேல  போட்டுக்காதீங்க.”

 

நாடகம் அரங்கேற்றுவதற்கு முன் என்ன செய்வீர்கள் ?

“எனக்கு ஒரு நாடகத்தை மேடையேற்ற, அட்லீஸ்ட் மூன்றிலிருந்து நான்கு மாதங்களாவது ஆகும். முதல்ல ஸ்க்ரிப்ட் வரணும். ஒரு எடுத்துக்காட்டுக்கு சொல்லணும்னா, ‘காசேதான் கடவுளடா’ நாடகத்தோட டிராமா ஸ்க்ரிப்ட் வாங்கினேன். அந்த நாடகத்தை ‘சித்ராலயா’ கோபுலுக்கு டெடிகேட் செய்ய விரும்பினேன். அவரு பையனோட டிஸ்கஸ் பண்ணிட்டு, படத்தைப் பார்த்து ரொம்ப முக்கியமான சீன்களை மட்டும் தேர்வு செஞ்சேன். அதுக்குஅப்புறம் ஸ்க்ரிப்ட்  பார்ம் பண்ணேன். 

எல்லோரும் சேர்ந்து, அந்த ஸ்க்ரிப்டை காலத்துக்கு ஏற்றமாதிரி மாத்துனோம். ‘காசேதான் கடவுளடா’வை பழைய நாடகம்னு இன்னிக்கும் யாரும் சொல்ல மாட்டாங்க. ஒத்திகை செய்யறதுக்கு ஒன்றரை மாதங்களாவது தேவைப்படும் எனக்கு. குழுவுல எல்லாருமே வேலைக்குப் போறவங்க. அதனால சாயந்திரம் ஏழரை மணிக்கு மேலதான் ஒத்திகை பார்க்க முடியும். அதோட சனி, ஞாயிறுகள்தான் எங்களுக்கு டைமே . 

பழைய நாடகங்களை திருப்பி மேடையேற்றணும்னா கூட ரிகர்சல் பண்ணுவேன். பிராக்டீஸ் ரொம்ப முக்கியம். எங்க நாடகம் பார்க்குறவங்களுக்கு, ஏ.வி.எம் படம், விஜயா வாஹினி படம் பார்த்த மாதிரி இருக்கும்னு சொல்லுவேன். முக்கியமா, சொல்லவந்த மெசேஜ் ஆடியன்ஸ் எல்லாருக்கும் கன்வே ஆகணும்.

அதேமாதிரி, நாடக மேடையை நான் ஜோக் சொல்லுற மேடையா உபயோகிக்கவே மாட்டேன். நாடகத்துல கருத்து, நடிகர்களோட திறமை, பாத்திரப்படைப்பு இவை எல்லாத்துலயும் கவனம் செலுத்தறேன். கதை நமக்குப் புரியற கதையா இருக்கணும், நமக்கு நடக்குற கதையா இருக்கணும்கறது தெளிவா இருப்பேன். நாடகம் பார்க்குறவங்களுக்கு, ரெண்டு மூணு பாத்திரங்களாவது அவங்களைச் சுற்றி இருக்குறவங்க மாதிரி இருக்கணும். அது அந்த நாடகத்துக்கு கிடைக்குற வெற்றின்னு சொல்லுவேன். ”

 

முதல் மேடை அனுபவம்..?

“அந்த சம்பவம், எனக்கு அவ்வளவா ஞாபகம் இல்லை. ஆனால், நான் மேடைஏறுவதற்குப் பயப்படலை. ஏன்னா, தினம் எங்க வீட்டுலதான் நாடக ஒத்திகை நடக்கும். ரொம்ப பெரிய நடிகர்களான சந்தியா, நம்ம முதலமைச்சர் ஜெயலலிதா, சோ, மௌலி இவங்க எல்லாரும் எங்க அப்பா ஒய்.ஜி. பார்த்தசாரதி ட்ரூப்ல நடிச்சிட்டு இருந்தவங்கதான். எனக்கு கிரிக்கெட் ஆசை இருந்தாலும், நாடக மேடை  ஏறப்போறோம்கிற ஆவல்தான் அதிகமா இருந்துச்சு.”

 

திடீரென்று சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, நாடகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த காரணம் என்ன?

“நான் சினிமாவில் நடிக்கும்போதும், நாடகத்தை விடவே இல்லையே. வருஷத்துக்கு முப்பது சினிமாவும் பண்ணேன், நாடகமும் பண்ணிட்டுதான் இருந்தேன். இல்லேன்னா, அறுபத்து நான்கு வருஷத்துல அறுபத்து எட்டு நாடகம் போட முடியுமா? சினிமாவுல நான் செஞ்சது க்ளாஸிக் காமெடி. அந்த ட்ரெண்ட் மாறிடுச்சு, அவ்வளவுதான்.”

 

எந்தக் கருத்தையும் தைரியமாக வெளிப்படுத்தும் குணத்தை யாரிடம் கற்றுக்கொண்டீர்கள்?

“எங்க அப்பாகிட்டே இருந்துதான். உண்மையைச் சொல்றதுக்கு எப்போதுமே பயப்படத் தேவையில்லை. பொய் சொல்லுறவங்க, திருட்டுத்தனம் பண்ணுறவங்கதான் பயப்படணும். எப்படி ஒரு நாடகம் நல்லாயிருக்குன்னு அப்பா விமர்சிக்கிறாரோ, அதேபோல சொதப்பல்களையும் கிழிச்சுத் தொங்க விட்டுடுவார். ஒருமுறை நாட்டிய அரங்கேற்றத்துக்குத் தலைமை தாங்க, எங்களை அமெரிக்காவுக்கு அழைச்சிருந்தாங்க. அதை ஏற்பாடு செஞ்சவங்க ஒரு டிராபியை எங்ககிட்ட கொடுத்து, அதை நாட்டியம் ஆடுற பெண்கிட்டே கொடுக்கச் சொன்னாங்க. ’என்னடா, இவங்களே பரிசை வாங்கி வச்சிட்டு எங்களை கொடுக்க சொல்லுறாங்களே’ன்னு சந்தேகமாக இருந்தது. ஆனாலும் பரவாயில்லைன்னு, நாங்க டான்ஸை முழுமையா பார்த்தோம். டான்ஸ் மொத்தமும் படு சொதப்பல். “பொண்ணு ரொம்ப அழகா  இருக்காங்க. அவங்களுக்கு டான்ஸ் வேண்டாம். நல்ல இடத்துல திருமணம் செஞ்சு கொடுங்க”ன்னு சொல்லிட்டாரு எங்கப்பா. இந்த வெளிப்படையான பண்புதான், அப்பாகிட்டேயிருந்து எனக்கு வந்திருக்கு”என்று நிறைவு செய்தார் ஒய்.ஜி.மகேந்திரன். நாடகம், குடும்பம், சமூகப்பார்வை என்று எதைப்பற்றிப் பேசினாலும், ஒய்.ஜி.எம்.மின் குரலில் கம்பீரம் தானாகச் சேர்ந்துவிடுகிறது. செறிவான வாழ்க்கை அனுபவம் கொண்டவர்களுக்கே, இது வாய்க்கும். 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles