காமெடி சீன் நிறைய கட் பண்ணியிருக்கோம்! ’ஷாக்’ தரும் எடிட்டர் பிரவீன் கே.எல்.

Tuesday, November 15, 2016

சினிமாவில் எப்போதும் பரபரப்புடன் இருப்பது எடிட்டரின் அறைதான். அதுவும் ஒரு படத்தின் ரிலீஸ் முடிவு செய்யப்பட்டுவிட்டால், அந்தப் படத்தினுடைய எடிட்டரின் கதியைச் சொல்லில் விளக்க முடியாது. அந்தளவுக்கு, ஒரு எடிட்டரின் வாழ்க்கை நொடிமுள்ளின் மீதேறி நிற்கும்.

அப்படியொரு சூழலிலும் சிறப்பாகப் பணிசெய்துவருபவர்கள் தமிழ்சினிமாவில் பலர். அவர்களில் உச்சத்தில் இருப்பவர் எடிட்டர் பிரவீன் கே.எல். ஓராண்டுக்கு பத்துக்கும் மேற்பட்ட நல்ல படங்களை, ரசிகர்கள் விரும்பும் வகையில் படத்தொகுப்பு செய்து வருபவர். ’சென்னை 28’ படம் மூலமாக திரைத்துறையில் கால்பதித்து, இன்று எண்ணற்ற திரைப்பட இயக்குநர்களைத் தன் வசம் வைத்திருப்பவர். 

 

’சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்’ படத்தொகுப்பை முடித்துவிட்ட திருப்தியுடன் இருந்தவரை, நம் மனம் இதழுக்காகப் பிரத்யேகமாகச் சந்தித்தோம்..

 

சென்னை 600028 செகண்ட் இன்னிங்ஸ் குறித்து..?

"சென்னை 600028 பார்ட் 1 படம் எல்லோருக்கும் பிடிச்ச படமா இருந்துச்சு. அதுல வொர்க் பண்றப்பவே, எல்லோரும் என்ஜாய் பண்ணிதான் வொர்க் பண்ணோம். செகண்ட் இன்னிங்ஸ் ஆரம்பிக்கணும்னு வெங்கட் சொன்னதும், நாங்க ரொம்பவே இண்ட்ரஸ்ட் ஆயிட்டோம். கதை கேட்கும்போதே ரொம்ப பிடிச்சிருந்தது. சென்னை 600028 பார்ட் 1யை மையப்படுத்தியே, பார்ட் 2வையும் கொண்டு வந்திருக்காரு இயக்குநர் வெங்கட்பிரபு."

 

படத்தொகுப்பு செய்தவிதத்தில், செகண்ட் இன்னிங்ஸில் இருக்கும் புதுமைகள் என்ன?

"கிரிக்கெட்வை மையப்படுத்துன படமா இருக்குறதுனால, முழுநேரமா கிரிக்கெட் பார்க்குற பீல் இருக்கும். அதை, ஒரு புது பேட்டர்ன் படத்தொகுப்பு மூலமா கொடுத்துருக்கோம். அதே சமயம் காதல், நட்பு சம்பந்தப்பட்ட சீன்களுக்கும் முக்கியத்துவம் இருக்கும்."

 

சென்னை 600028 பார்ட் 1 மற்றும் பார்ட் 2வைப் பொறுத்தவரை, வெங்கட்பிரபுவிடம் தென்படும் வித்தியாசம்..?

"பார்ட் 1ல எப்படி இருந்தாரோ, அப்படியேதான் பார்ட் 2லயும் இருக்காரு. புதுப்புது விஷயங்களைப் படத்துல கொண்டுவர்றதுல இன்வால்வ்மெண்ட்டா இருக்காரு, டெக்னிக்கலா நெறைய கத்துக்கிறாரு."

 

இந்த முறை உங்களைப் படத்தொகுப்பு அறையில் தொந்தரவு செய்தவர் யார்? 

"அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, பிரேம்ஜி எல்லோருமே அடிக்கடி வருவாங்க. ’ஷாட் கட் பண்ணிராதிங்க’ அப்டின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க.
பிரெண்ட்லியா பழகுனதால, அது தொந்தரவா இருக்காது. படம் பார்த்துட்டு, அவங்க என்ன சொல்லுவாங்கன்னு கேட்க வெயிட் பண்ணிட்டு இருக்கேன்."

 

தயாரிப்பாளர் வெங்கட்பிரபு குறித்து..?

"புரொடியூசரா அவரு எந்த ஒரு குறையும் வைக்கலை. கண்டிப்பா, அவருக்குதான் நிறைய டென்ஷன் இருந்திருக்கும். எந்தவொரு பினான்ஸியல் டென்சனையும், அவரு எங்கமேல காட்டவே இல்ல. எங்களைப் பொறுத்தவரை, பாக்கெட்ல இருந்து அவர் பணத்த எடுத்துக் குடுப்பாரு. அவ்ளோதான்!"

 

விரும்பி படத்தொகுப்பு செய்த காட்சிகள் ஏதும், செகண்ட் இன்னிங்ஸில் கட் செய்யப்பட்டுள்ளதா?

"நிறையவே இருக்கு, காமெடி சீன் நிறையவே கட் பண்ணிருக்கோம். அதையெல்லாம் யூடியுப் வெர்சனுக்கு பண்ணனும்னு ஐடியா இருக்கு. முழுப்படத்தையும் பார்க்கனும்னா, நாலுமணி நேரம் படம் பார்க்கலாம்." 

எடிட்டர் பிரவீன் கே எல் சொல்லி முடித்ததும், நமக்குள் ஆச்சர்யம் பிரவாகமெடுத்தது. ’சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்’ தியேட்டரில் மட்டுமல்ல, பல ஆண்டுகள் இணையத்தையும் கலக்குமென்றே தெரிகிறது. 

- பிரியன்.வி பி 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles