சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸின்  'மேன் ஆப் த மேட்ச்' வெங்கட்பிரபு!

Tuesday, November 15, 2016

தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அத்தனை படங்களும் ஏதோ ஒரு வகையில் குறிப்பிட்ட காலகட்டத்தோடு காலாவதியாகிவிடுவது உண்டு. ஆனால், சில படங்கள் மட்டும் காலத்தைத் தாண்டியும் சாகாவரம் பெற்றவையாகத் திரும்பத் திரும்பப் பார்க்கக் கூடியவையாக அமைந்துவிடும். அப்படியான படங்களைப் பட்டியலிட்டால், அதில் நூறு படங்களுக்குள் 'சென்னை 28' இடம்பிடித்துவிடும்! 

பொதுவாக, சென்னை 28 என்றாலே பலரது நினைவிலும் வந்துபோவது "மந்தைவெளி" ஏரியாவின் பின்கோடு நம்பர்தான். ஆனால், இப்போது யாரிடமாவது சென்னை 28 என்று சொன்னால், "அது டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கிய படமாச்சே" என்றுதான் சொல்வார்கள். அந்தளவுக்கு உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் மனங்களில் பசைபோட்டு ஒட்டிக்கொண்ட படம் அது.

 

ஒவ்வொரு பத்தாண்டுக்கும் ஒருமுறை, சினிமா தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். அப்படியாக, எல்லா புதிய தொழில்நுட்பங்களையும் தனக்குள் உள்வாங்கிக் கொள்ளும் சினிமா, புதியவர்களின் முயற்சிகளுக்கு எப்போதுமே ’ராயல் சல்யூட்’ வைக்கத் தயங்கியதில்லை. அந்த வகையில், 'சென்னை 28' திரைப்படம் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் ஒன்று!

 

ஒரு திரைப்படம் சினிமாவில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமெனில், திரைவெளியில் அது சில உடைப்புகளை ஏற்படுத்த வேண்டும். கதை சொல்வதிலோ, தொழில்நுட்பத்திலோ, பாத்திரங்களை உருவாக்கும் முறையிலோ, புதிய யதார்த்தத்தை முன்னெடுப்பதிலோ அந்த மாற்றம் நிகழலாம். ஆனால், இவை அனைத்தையும் அந்தப் படம் உருவாக்கியிருக்க வேண்டும். அப்படித்தான் செந்தமிழ் பேசிக்கொண்டிருந்த சினிமாவை இயல்பு தமிழுக்கு கொண்டுவந்தார் இயக்குநர் ஸ்ரீதர். அவருடைய இயக்கத்தில் பல படங்கள் மெகா ஹிட் அடித்திருந்தாலும், 'காதலிக்க நேரமில்லை' இன்று வரை பலமுறை பார்த்தாலும் அலுக்காத படங்களில் ஒன்று. அதேபோன்று, இயக்குநர் பாரதிராஜா தனது 'பதினாறு வயதினிலே' மூலமாக அரங்கங்களுக்குள் இருந்த சினிமாவை, கிராமங்களுக்குள் எடுத்துச் சென்றார். நவீன நகர வாழ்க்கையை 'மௌன ராகம்’ மூலம் செல்லுலாய்டில் பதிவு செய்தார் மணிரத்னம். 

 

இப்படியாகப் பல இயக்குநர்கள் கோலிவுட்டில் தொடர்ச்சியாக உடைப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருந்த வேளையில், நவீன சென்னையில் வாழும் மிடில் கிளாஸ் இளைஞர்களின் உணர்வுகளை வெளிச்சம் போட்டிக்காட்டியது 'சென்னை 28'. கதையின் மையமாக இருந்த கிரிக்கெட் நகரத்து இளைஞர்களை மட்டுமல்ல, கிராமத்து இளைஞர்களையும் கூட பைத்தியமாக்கியது. ’கிரிக்கெட் போட்டிகள் பல கிராமங்களுக்கு இடையே நடத்தலாம்; அதில் வெற்றிபெற்று ஊரில் கெத்தும் காட்டலாம்’ என்பதற்கு ராஜபாட்டை அமைத்தது.

 

தமிழ் சினிமாவில் பாடகராக, பாடலாசிரியாக, நாயகனாக, குணச்சித்திர நடிகராகப் பல அவதாரங்களை வெங்கட் பிரபு எடுத்திருந்த போதிலும், அவருக்கு சரியாகப் பொருந்தியது இயக்குநர் பிறவிதான். கதையே இல்லாத கதை, யதார்த்த இளைஞர்கள், மாறுபட்ட திரைக்கதை என வி.பி., தனது முதல் படத்திலேயே செஞ்சுரி அடித்தார். அதன்பின் அவரது வாழ்வில் நடந்தவை எல்லாமே அழகான மாற்றங்கள். எப்போதும் ஒரு படத்தின் வெற்றி என்பது அந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மீது மட்டும் வெளிச்சம் பாய்ச்சுவதில்லை. மாறாக, அந்தப் படத்தின் நாயகர்கள், நாயகிகள், துணைக் கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் என அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை பெற்றுத்தரும். அந்தவகையில், 'சென்னை 28' திரைப்படம் கோலிவுட்டில் ஒரு மைல்கல். 

 

அந்தப் படத்தின் மூலமாக அறிமுகமான ஜெய், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, அஜய், நிதின் சத்யா, விஜய் வசந்த், அரவிந்த் ஆகாஷ், இனிகோ பிரபாகர் எனப் பலரும் ஹீரோ அந்தஸ்தைப் பெற்றனர். அதில் சிலர், தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டனர். குறிப்பாக, நடிகர் ஜெய் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராகப் பரிணமித்தார். அவர் நடிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்', 'ராஜா ராணி' உள்ளிட்ட படங்கள், வசூல்ரீதியாக விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் பெயரை பெற்றுத்தந்தது; அவருடைய சம்பள அந்தஸ்தையும் வெகுவாக உயர்த்தியது!

 

நகைச்சுவையை தன்னுடைய நடிப்பின் ஒரு அங்கமாக மாற்றிக்கொண்ட சிவா, அதிகம் கவனிக்கப்படும் நடிகராக மாறிப்போனார். "என்ன கொடுமை சார் இது?" என்ற ஒற்றை வசனத்தால், பெரிய ரசிகர் பட்டாளத்தை தனதாக்கிக்கொண்டார் பிரேம்ஜி. இசையமைப்பிலும் நடிப்பிலும் ஒரு சேரக் கால்பதித்த பிரேம்ஜிக்கு, அவருடைய சகோதரர் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் அதிக முக்கியத்துவம் கிடைத்தது.

 

அதில் அறிமுகமாக விஜயலட்சுமி, தமிழ் பெண்கள் சினிமாவில் தலைகாட்டுவதில்லை என்ற வாதத்தைப் பொய்யாக்கினார். அதன்பிறகு, ’அஞ்சாதே’ உள்ளிட்ட படங்களின் மூலம் சிறந்த நடிப்பை வழங்கினார். இப்படியாகப் பலருக்கு வாழ்வு தந்த 'சென்னை 28' படம் எடுக்கப்பட்டு ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், தற்போது அந்தப் படத்தின் செகண்ட் இன்னிங்ஸ் வெளிவர உள்ளது.

 

ரீயூனியன் என்பது தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிது. ஒரு படத்தில் நடித்தவர்களை, ஒன்பது வருடங்களுக்குப் பிறகு திரும்பவும் ஒன்றுசேர்த்து நடிக்க வைப்பது என்பது ஏழு மலைகளை ஒன்றாகக் கட்டி இழுப்பதற்குச் சமமானது. ஏனெனில், ஒரு நாயகன், நாயகி, வில்லன், துணைக் கதாபாத்திரங்கள் என சிறிய பட்டாளத்தை ரீயூனியன் செய்வதற்குள்ளாகவே, ஒரு இயக்குநருக்கு நாக்கு தள்ளிவிடும். அதிலும், பெரிய பட்டாளமே நட்சத்திர அந்தஸ்து பெற்று பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும்போது, அவர்களை ஒன்றுசேர்ப்பது என்பது உண்மையில் செவ்வாய் கிரக சாதனைதான். அதைத் தனது 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்’ படத்தில் நிகழ்த்திக் காட்டியிருப்பதற்காகவே, இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு இந்தியத் திரையுலகம் தனியொரு விருதை அறிவித்து கௌரவிக்கலாம். 

 

படத்தின் அறிவிப்பு வெளியானதுமே, கிரிக்கெட் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு தீ பற்றிக்கொண்டு விட்டது. கிரிக்கெட் மட்டையும் பந்தும் கையுமாக, மீண்டும் சென்னை நகரத்தின் இண்டுஇடுக்குகளில் உள்ள மைதானங்கள் எல்லாம் வழக்கத்தை மீறி இளைஞர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டன. இதுதான் வி.பி.யின் பலம். ”கிரிக்கெட்டா? அட, அதுவெல்லாம் நம்ம விளையாட்டா இல்லப்பா.." என்று ஒதுங்கியிருந்தோரையும் அழைத்துவந்து ஆடுகளத்தில் ஆடவிட்டது 'சென்னை 28'. அதன் செகண்ட் இன்னிங்ஸ் என்றால் ச்சும்மாவா.. கொண்டாடிட வேண்டாமா? என்பது கிரிக்கெட் ரசிகர்களின் விவாத்தின் ஒரு பகுதியாக மாறிப்போனது!

 

'சென்னை 28' படத்தில் இருந்த இளைஞர்கள் எல்லோரும் அதில் வரும் இளவரசுவை "அங்கிள்..." என்று கூப்பிட்டுக் கடுப்பேற்றுவார்கள். ஆனால் அத்தகைய ஹீரோக்களே, இன்று அங்கிளாகிவிட்டதுதான் செகண்ட் இன்னிங்ஸின் முதல் சுவராஸ்யம். அதுமட்டுமா, முதல் பாகத்தில் சிவா காதலித்த விஜயலட்சுமி, இதில் அவரது கரம்பிடித்திருக்கிறார். அந்தக் காதல் தம்பதியின் வாழ்க்கை இப்போது எப்படியிருக்கிறது? அது மட்டுமில்லை, சிவாவின் நண்பர்களில் பெரும்பாலானோர் படத்தின் கதைப்படி (சிலருக்கு நிஜத்திலும்) குடும்பஸ்தர்களாகிவிட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய மனைவியிடம் எப்படியெல்லாம் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். இந்த ஒன்பது ஆண்டுகளில், வாழ்க்கை அவர்களை எப்படியெல்லாம் புரட்டிப் போட்டிருக்கிறது என்பதையும் தனது நேர்த்தியான திரைக்கதையால் செதுக்கியிருக்கிறார் வெங்கட் பிரபு. இளைஞர்களால் நிரம்பி வழிந்த முதல் பாகம், செகண்ட் இன்னிங்ஸில் சனா அல்தாப், மகேஸ்வரி, அஞ்சனா கிருதி, கிருத்திகா என்று நாயகிகளாலும் நிறைந்திருக்கிறது!

 

பிலிமில் தன்னுடைய முதல் இயக்கத்தை தொடங்கிய வெங்கட் பிரபு, அப்படியே அதே படத்தின் செகண்ட் இன்னிங்ஸில் டிஜிட்டலுக்கு மாறியிருக்கிறார். அதுமட்டுமா, தன்னுடைய பிளாக் டிக்கெட் கம்பெனி மூலமாகத் தயாரிப்பதன் வழியே, ஒரு தயாரிப்பாளராகவும் கோலிவுட்டுக்குள் தடம்பதிக்கிறார். எனவே ரீயூனியன் என்பதில் மட்டுமில்லை; தயாரிப்பாளர் என்கிற வகையிலும் 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்' வெங்கட் பிரபுவுக்கு ரொம்பவே ஸ்பெஷல்.

 

வழக்கம்போல, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தன்னுடைய அதிரடி இசையால் கிரிக்கெட் உள்ளங்களை மீட்டியிருக்கிறார். "சொப்பன சுந்தரி... உன்னை யாரு வைச்சிருக்கா..." பாடல் மூலமாக, பட்டிதொட்டியெல்லாம் சரவெடியைப் பற்ற வைத்துள்ளார். ஒரே நேரத்தில் நான்கு கேமிராவில் படம்பிடித்து எல்லோரையும் புருவம் உயர்த்தியுள்ள ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ், ஷார்ப் அன்ட் ஸ்வீட் எடிட்டிங்கின் மூலம் தெறிக்கவிட்டுள்ள பிரவீன் கே.எல். என தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒவ்வொருவரும் படத்தின் வெற்றிக்கு கூடுதல் வலு சேர்த்திருக்கிறார்கள். படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள் ’யு’ சான்றிதழ் வழங்கியுள்ளதால், அனைத்துத் தரப்பினரும் தியேட்டருக்கு வந்து இதனைத் தாராளமாகப் பார்க்கலாம்.

 

தமிழ் சினிமாவில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு புது முயற்சிக்கும் ரசிகர்கள் ஆதரவு தராமல் போனதில்லை; எனவே, செகண்ட் இன்னிங்ஸிலும் பெருவாரியான ரன்கள் வித்தியாசத்தில் பல செஞ்சுரிகள் அடித்து, இயக்குநர் வெங்கட் பிரபுவை 'மேன் ஆப் த மேட்ச்' ஆக்கி கோலிவுட் ரசிகர்கள் அழகுபார்ப்பார்கள் என்று நம்பலாம்!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles