எங்கப்பாவுக்கு கரகாட்டக்காரன்;  எனக்கு சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்! இயக்குநர் வெங்கட் பிரபு பெருமிதம்!!

Tuesday, November 15, 2016

"சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ் படத்தின் ஒரு அங்கமாகவே மனம் ஆன்லைன் இதழ் மாறியிருக்கிறது. அதற்காக வாசகர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்..” என்றவாறே நமது கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராகிறார் வெங்கட் பிரபு!

சென்னை 28, சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு படங்களுக்குப் பிறகு, இவரது ஏழாவது படைப்பாக வெளியாகப் போகிறது ‘சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்’. 

 

தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் 'சென்னை 28'ம் ஒன்று. அது குறித்துச் சொல்லமுடியுமா?

"தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் செட்டராக இருக்கும் என்று எதிர்பார்த்தெல்லாம், அந்தப் படத்தை எடுக்கல. தயாரிப்பாளர் எஸ்.பி.சரணிடம் "இது ஒரு என்டெர்டெயின்மெண்ட் படமாக இருக்கும்"னு சொல்லித்தான் படத்தை ஆரம்பித்தேன். தியேட்டருக்கு வரக்கூடிய ரசிகர்கள், இந்தப் படத்தைப் பார்த்துட்டு என்ஜாய் பண்ணிட்டுப் போகணும். ஒவ்வொருத்தருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருக்கு. அதனால, அதையெல்லாம் மறக்கிற மாதிரி இந்தப் படம் இருக்கணும்னு யோசித்து, உருவாக்கப்பட்ட படம்தான் அது. ரசிகன் கொடுக்கிற ரூ.120க்கு நேர்மையா ஒரு படம் எடுக்கணும்னு முடிவு பண்ணோம், அவ்ளோதான்!

சின்ன வயசுல எப்போதும் ரோட்டுலதான் கிரிக்கெட் ஆடிக்கிட்டு இருப்போம். எங்கம்மா, "எப்ப பாரு கிரிக்கெட் ஆடிட்டே இருங்க. உருப்படமாத்தான் போகப் போறீங்க"னு சொல்லித் திட்டுவாங்க. கடைசியில, நாங்க அந்த கிரிக்கெட்டையே படமா எடுத்துதான் உருப்பட்டோம். ஆக, எங்கம்மாவுக்கு தான் நன்றி சொல்லணும். என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாங்கிறது ஒரு என்டெர்டெயின்மெண்ட் மீடியம்தான். 

எங்கப்பாவுக்கு ஒரு 'கரகாட்டக்காரன்' மாதிரி, எனக்கொரு 'சென்னை 28'. அந்தப் படத்தை தியேட்டரில் பார்த்ததை விட, நிறைய பேர் டிவியிலதான் அதிகமாக பார்த்திருக்காங்க. சன், கே.டிவியில அடிக்கடி அந்தப் படத்தை டெலிகாஸ்ட் பண்ணினாங்க. 'சென்னை 28' பார்க்கவேயில்லைன்னு யாராவது சொன்னா, நிச்சயமா அவங்க பொய் சொல்றாங்கன்னுதான் அர்த்தம்!

 

சென்னை 28' படத்தின் அடுத்த பாகம் எடுப்பதென்று எப்போது முடிவானது?

"முதல் பாகத்தை எடுக்கும்போதே, அப்படியே இன்னொரு பார்ட்டும் எடுக்கணும்னு முடிவு எடுத்திருந்தேன். பொதுவாக, ஹாலிவுட்டுல ஒரே படத்தோட அடுத்தடுத்த பார்ட் எடுப்பாங்க. அதே மாதிரி 'சென்னை 28' டிரையாலஜி எடுக்கற திட்டமும் எங்கிட்ட இருந்தது. ஆனா, காலப்போக்கில் எல்லோரும் வேறு வேறு திசைகளில் போய்ட்டோம். நானும் தொடர்ச்சியாகப் படங்கள் இயக்க ஆரம்பிச்சிட்டேன். 

'பிளாக் டிக்கெட் கம்பெனி'ஆரம்பிச்சு, அதுல படம் இயக்கணும்னு முடிவானப்போ, ஒரு திருமணத்துக்கு நண்பர்கள் எல்லோரும் போனாங்கன்னா எப்படியிருக்கும்? என்பதை மையமாக வைச்சு கதை பண்ணினேன். அந்தக் கல்யாணத்துக்கு நண்பர்கள் போனா, அந்த இடம் எவ்வளவு சந்தோஷமா இருக்கும். அப்படியிருக்கும்போது ஒரு பிரச்சினை வந்தா, அதை அவங்க எப்படி எதிர்கொண்டு ஜெயிப்பாங்க. இப்படித்தான் அந்தக் கதை ஆரம்பத்துல இருந்தது. பிறகு, அந்த திருமணம் 'சென்னை 28' கேங்ல இருக்கிற ஒரு பையனுக்கு நடந்திருந்தா எப்படியிருக்கும்னு ஒரு ஐடியா வந்துச்சு. அதுதான் 'சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸ்' ஆக மாறியது" 

 

இந்தப் படத்தோட ஸ்பெஷாலிட்டின்னா எதைச் சொல்வீங்க?

" 'சென்னை 28' படத்தோட மேஜர் போர்ஷன் கிரிக்கெட் தான். அதனால, கிரிக்கெட் இந்தப் படத்துலேயும் இருக்கு. 9 வருஷமா கிரிக்கெட் ஆடாத பசங்க, குடும்பம் குட்டினு ஆனதுக்குப் பிறகு கிரிக்கெட் ஆடினா எப்படியிருக்கும்? அதோட, நண்பர்களையும் குடும்பத்தையும் எப்படி ஒவ்வொருத்தரும் பேலன்ஸ் பண்ணிக்கிறாங்க என்பதுதான் சென்னை 28 செகண்ட் இன்னிங்ஸோட ஸ்பெஷாலிட்டி. 'சென்னை 28' படத்தில் என்னவெல்லாம் இருந்ததோ, அதையெல்லாம் இந்தப் படத்திலும் கொடுத்திருக்கிறேன். அதே பீல் வேறொரு காலகட்டத்துல நடக்கும். அவ்வளவுதான்!"

 

பெரிய பட்டாளத்தையே ரீயூனியன் பண்ணிட்டீங்களே?! 

"எல்லா பசங்களும் என்மேல வைத்திருக்கிற அன்புதான், இதுக்குக் காரணும்னு நினைக்கிறேன். ஏன்னா, டேட்ஸ் கேட்டவுடனே எல்லோருமே ஓகே சொல்லிட்டு கால்ஷீட் கொடுத்தாங்க. எங்களுக்குள்ளே இருக்கிற கெமிஸ்ட்ரிதான் காரணம்னு நினைக்கிறேன். பசங்ககிட்டே செகண்ட் இன்னிங்ஸ் பற்றி சொன்னதுமே ரொம்ப ஹாப்பி ஆயிட்டாங்க. அறுபது நாள் ஷூட்டிங்குக்காக, அவங்களோட கால்ஷீட்டை ஒருங்கிணைக்கிறதுலதான் சிரமம் இருந்துச்சு. மற்றபடி எல்லோரும் ஒத்துழைப்பு கொடுத்தாங்க. "இது வேறு யாராலும் சாத்தியம் இல்லை, உங்களால மட்டும்தான் முடியும்"னு எல்லோரும் சொன்னாங்க. அதைக் கேட்டபோது சந்தோஷமா இருந்தது. எங்களைப் பொறுத்தவரைக்கும் டைரக்டர் - ஆர்ட்டிஸ்ட் என்ற இடைவெளி இருக்காது. எல்லோரும் பிரெண்ட்ஸாகத்தான் பழகுவோம். அந்த பிணைப்புதான் இதைச் சாத்தியமாக்கி இருக்கு!"

 

உங்களை வைத்துப் படம் தயாரிக்க நிறைய பேர் இருந்தும், நீங்களே தயாரிப்பில் இறங்கியது ஏன்?

"வேறொரு புரொடக்‌ஷனா இருந்தா, இந்தக் கூட்டணி மறுபடியும் அமைஞ்சிருக்குமான்னு தெரியாது. இந்தப் பசங்க எல்லாம் இதே ஒத்துழைப்பை கொடுத்திருப்பாங்களான்னும் சொல்ல முடியாது. நானே படத்தை தயாரிக்கிறேன் என்பதால்தான், பசங்க எல்லோருமே முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. மற்ற தயாரிப்பா இருந்தா, இந்தப் பட்ஜெட்டுல என்னால பண்ணியிருக்கவே முடியாது. ஏற்கனவே சொன்ன மாதிரி, பசங்க அவங்களோட பேமெண்ட்டை விட்டுக்கொடுத்தது எனக்காக மட்டும்தான். மற்ற புரொடக்‌ஷனில் அது சாத்தியமே இல்லை!"

 

’சென்னை 28’ ஹீரோக்கள் எந்த விதத்தில் உங்களுக்கு உதவியாக இருந்தாங்க?!

"விஜய் வசந்தோட காஸ்ட்லியான காரு, எங்க படத்துக்கு புரொடக்‌ஷன் வேலை பார்த்துக்கிட்டு இருந்துச்சு. அவரு பெட்ரோல், டீசல் கன்வேயன்ஸ் கூட வாங்கிக்கலை. ஜெய் தன்னோட பென்ஸ் காரையே எங்களுக்குக் கொடுத்திட்டாரு. ஒவ்வொருத்தரும் செகண்ட் இன்னிங்ஸுக்கு தங்களால் என்ன செய்ய முடியுமோ, அதையெல்லாம் செஞ்சாங்க. நான் நிறைய கேரவன் கொடுத்தாலும், "வேணாம் சார். ஒண்ணே போதும்"னு சொல்லிட்டு எல்லோரும் ஒரே கேரவனில் இருந்தாங்க. 

மற்ற படங்களில் ஒவ்வொரு ஆர்ட்டிஸ்ட்க்கும் தனி ரூம் கொடுப்பாங்க. ஆனா, எல்லோரும் ரூம்களை ஷேர் பண்ணிக்கிட்டாங்க. சம்பளத்திலிருந்து எதையுமே அவங்க டிமாண்ட் பண்ணலை. எல்லோருக்குமே தனித்தனி மார்க்கெட் இருக்கு. எல்லோருமே பிரெண்ட்ஸ் என்பதால், உடனே ரீயூனியன் ஆயிட்டாங்க. மறுபடியும் இவங்க எல்லோரையும் ஒண்ணுசேர்க்க முடியுமான்னு கேட்டீங்கன்னா, அதற்கு பதில் சொல்லவே எனக்குப் பயமா இருக்கு. ஆனா, எல்லாத்தையும் மீறி இது சாத்தியமாயிருக்கு. இந்த மாதிரி நண்பர்கள் கிடைத்தது கடவுளோட ஆசிர்வாதம்!" என்று தனது டீமை வெகுவாகப் புகழ்ந்தார் வெங்கட்பிரபு. 

அவரிடம் விடைபெற்றுக்கொண்டு, மந்தைவெளி சிவராமன் தெருவில் நடந்துவந்தோம். ஒரு பந்து வேகமாக வர, நமது கேமிராமேன் தாவிப்பிடித்து, அதனைத் திருப்பி ஸ்டம்பை நோக்கி எறிந்தார். அந்தக்கணம், அங்கிருந்த இளைஞர்கள் குதூகலத்துடன் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இதே உற்சாகம், ‘செகண்ட் இன்னிங்ஸ்’ திரையிடப்படும் தியேட்டர்களிலும் கண்டிப்பாக இருக்கும்.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles