தமிழ் சினிமாவின் 'அல்பசினோ' கமல்ஹாசன்!

Monday, November 7, 2016

தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த அரிய கலைஞன் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் இருந்து சபாஷ் நாயுடு வரை பல்வேறு பாத்திரங்களில் சிகரம் தொட்டவர். நடனக்கலைஞர், நடிகர், பாடகர், பாடலாசிரியர், திரைக்கதை ஆசிரியர், இயக்குநர் என அவரின் அவதாரங்கள் அத்தனையும் மெச்சும் ரகம்.

வளரும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்வதில் அவருக்கு நிகர் அவரே. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 1954ல் பிறந்த கமலின் பயணம் பல திருப்புமுனைகளைக் கொண்டது.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குட்டி கமல், தனது முதல் படத்திலேயே அனைத்து ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தார். டி.கே. சண்முகம் நாடக சபாவில் பட்டை தீட்டப்பட்ட அவர், அங்கேயே நடனமும் கற்றுத் தேர்ந்தார். இளைஞனான பிறகு, சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார் கமல். ஆனாலும், பாலசந்தர் இயக்கிய அரங்கேற்றம், அவள் ஒரு தொடர்கதை போன்ற படங்களே, பெரும் வெளிச்சத்தை அவர் மீது பாய்ச்சியது. அதன்பின் நடந்தவை எல்லாமே நாம் அறிந்தவை தான். 

தமிழில் மட்டுமல்ல, கன்னடம், பெங்காலி, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து, தன்னுடைய தனித்துவத்தால் உச்ச நட்சத்திரங்களின் பட்டியலில் இடம்பிடித்தார் கமல். சினிமாவில் பன்முகப் பாத்திரங்களுக்கு உயிரூட்டி வாழ்ந்து வருகிறார். கோலிவுட்டின் மார்லன் பிராண்டோ என நாம் சிவாஜியைக் கொண்டாடினால், அந்த சிவாஜியால் அல்பசினோவாகக் கொண்டாப்பட்ட கலைஞன் கமல்ஹாசன்! 

உலகம் முழுவதும் ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படும்போதெல்லாம், அந்தப் பட்டியலில் தமிழன் தேடும் பெயர் கமல்ஹாசன் என்றால் அது மிகையில்லை. கோலிவுட் ரசிகர்களால் உலக நாயகனாகப் போற்றப்படும் கமல்ஹாசன், தமிழ் இனத்திற்குக் கிடைத்த மாபெரும் கொடை. அவருக்கு வயது 63 என்கிறார்கள்; நம்ப முடியவில்லை. இப்போதும் கட்டுக்குள் அடங்காத இளங்காளையாகவே காட்சி தருகிறார் கமல். அது அப்படியே நீடிக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமும் பிரார்த்தனையும். அந்த சகலகலா வல்லவனை வாழ்த்திப் பாராட்டுவதில், மனம் இதழும் ரசிகர்களைப்போல மகிழ்ச்சிக் கடலில் தத்தளிக்கிறது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles