இப்போ நிறைய பிரச்சனைகளைச் சந்திக்க வேண்டியிருக்கு! தனது பணியின் இயல்பைப் பகிர்கிறார் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் கே.அகமது

Saturday, July 30, 2016

"நிறைய வேலைகள் பார்த்திருக்கேன். அதுல நிறைய சம்பாதிக்கவும் செஞ்சிருக்கேன். ஆனா, சினிமாவைத் தவிர வேறு எந்த வேலையும் எனக்குப் பிடிக்கல. அதுக்கு காரணம் ரஜினி சார் தான். அவரோட ‘பரட்டை’ கேரக்டர்தான். இன்னைக்கு ‘கபாலி’ படத்துல ’மகிழ்ச்சி’ங்கிற வார்த்தை எப்படி பிரபலமா இருக்கோ, அப்படி அன்னைக்கு ’இது எப்டி இருக்கு..?’ வசனம் பிரபலம்.

அப்படி, தலைவரோட ஸ்டைலும் மேனரிஸமும் என்னை சினிமாவுக்குள்ளே இழுத்துக்கிட்டு வந்துச்சு!!” என்று பேசியவாறே, தான் கோலிவுட்டுக்குள் கால் பதித்த வெற்றிக்கதையைப் பகிர்ந்து கொள்கிறார் ‘கபாலி’ பி.ஆர்.ஓ.க்களில் ஒருவரான ரியாஸ் கே. அகமது!

 

“இன்றைக்கு எங்களுக்கு பி.ஆர்.ஓ. என்கிற மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளதற்கும், என்னை நீங்கள் பேட்டி காண்பதற்கும் காரணம், எங்களோட ஆசான் மறைந்த பிலிம் நியூஸ் ஆனந்தன் சார்தான். அவர்தான், முதன்முதலாக மக்கள் தொடர்பாளராக சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர். எம்.ஜி.ஆர். அவர்களால் திரைப்படத்துறைக்குள் பி.ஆர்.ஓ.வாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டவர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு. அந்தவகையில், என்னோட முன்னோடிகள் நெல்லை சுந்தர்ராஜன், கிளாமர் கிருஷ்ணமூர்த்தி, ஏ.எல்.ராகவன் எனப் பல பேரு இருந்திருக்காங்க. பி.ஆர்.ஓ. வேலையை, நான் மறைந்த பெண் பி.ஆர்.ஓ. திருமதி. ராஜீவ்கிட்டதான் கத்துக்கிட்டேன். ‘நல்லவன்’ படத்துக்கு அவங்க மக்கள் தொடர்பாளரா பணியாற்றியபோது, அவங்ககிட்டே உதவி பி.ஆர்.ஓ.வாக சேர்ந்தேன். அதனால எனக்கு ‘சிவா’, ‘ராஜா சின்ன ரோஜா’ ஆகிய படங்களில் பணியாற்றுகிற வாய்ப்பு கிடைச்சுது. 

 

இன்றைக்கு, மக்கள் தொடர்பாளர்கள் சங்கத்துல 64 பேரு உறுப்பினராக இருக்காங்க. பத்திரிகைத்துறை இன்றைக்கு எந்தளவுக்கு வளர்ந்திருக்கிறதோ, அதே அளவுக்கு பி.ஆர்.ஓ.க்களோட எண்ணிக்கையும் அதிகரிச்சிருக்கு. இந்தத் துறைக்கு நாங்க வரும்போது, பிரிண்ட் மீடியா மட்டும்தான் இருந்துச்சு. அதையும் விரல்விட்டு எண்ணிடலாம். டி.வி.ன்னு பார்த்தீங்கன்னா தூர்தர்ஷன்தான். குறைவான மீடியா என்பதால, சைக்கிளை எடுத்துக்கிட்டு ஒவ்வொரு ஆபீஸா போய், சினிமா செய்திகளைக் கொடுத்துட்டு வருவோம். அப்போ, டிராபிக்கும் குறைவா இருந்துச்சு. இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறிடுச்சு. அப்போல்லாம், ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணணும்னா உடனே முடியாது. ஆனா, இன்றைக்கு உட்கார்ந்த இடத்தில் இருந்து இமெயில், வாட்ஸ்அப் மூலமா எல்லாருக்கும் தகவலை அனுப்பிட முடியும். நான்கு மணிக்கு சொன்னீங்கன்னா, அடுத்த இரண்டு மணி நேரத்துல ஒரே இடத்துல செய்தியாளர்களைக் கொண்டு வந்துட முடியும்!

 

முன்னாடியெல்லாம், செய்தியாளர் சந்திப்புக்கு இருபத்தைஞ்சு பேரு வர்றதே அதிகம். ஆனா, இன்றைக்கு 200ல இருந்து 250 பேரு வரை வர்றாங்க. அவங்களை மேனேஜ் பண்றதே பெரிய வேலை. பிரிண்ட், விஷுவல், இணையதளம், எப்.எம். மீடியான்னு நிறைய உருவானதுதான் அதற்குக் காரணம். இணையத்தை பொறுத்தவரைக்கும், என்னோட தொடர்பில மட்டும் தொண்ணூறு பேரு இருக்காங்க. இது இல்லாம, ஆயிரக்கணக்கான இணையதளங்கள் செயல்பட்டு வருது. லேட்டஸ்ட்டா பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்கிராம், வாட்ஸ்அப்னு சோஷியல் மீடியா குரூப்ஸ் உருவாகியிருச்சு. யாரு எப்போ எந்த செய்தியை போடுவாங்கன்னே தெரிய மாட்டேங்குது. 

 

பெரும்பாலும், நள்ளிரவுகளில் செய்தியைப் போட்டுறாங்க. எங்ககிட்டேயும் கேட்க மாட்டாங்கிறாங்க. விடிஞ்சதும், சம்பந்தப்பட்டவங்க போன் மேல போனை போட்டு, எங்களை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க. அந்தச் செய்தியை யாரு, எதுல போட்டிருக்காங்கன்னு கண்டுபிடிச்சு, அவங்களுக்கு போன் பண்ணி பேசணும். “நாங்க போன் போட்டா, நீங்க எடுக்கவே மாட்டேங்கிறீங்க. அதான், எங்களுக்கு கிடைச்சதை வச்சிக்கிட்டு நாங்க போட்டுட்டோம்”னு சொல்லுவாங்க. இன்னும் சிலர் இருக்காங்க. டைரக்டரோட பிரண்ட்ஸ்னு சொல்லிட்டு வருவாங்க. டைரக்டரோட பேசிட்டு வெளியே போகும்போது, சட்டுன்னு ஒரு டுவிட்டரை தட்டிட்டுப் போய்டுவாங்க. ஒரு செய்தியை இந்த நேரத்துல கொண்டு வரலாம்னு, நாங்க ஒரு தேதியை மனசுல வச்சிருப்போம். அதுக்குள்ளே, யாராவது முந்திப்பாங்க. இந்த மாதிரி பிரச்சினைகளை எல்லாம், இப்போ நாங்க அதிகமாக சந்திக்க வேண்டியிருக்கு!

 

அதேமாதிரி, இப்போது எல்லாம் தயாரிப்பாளரும் இயக்குநருமே சேர்ந்து ஸ்டில்களைத் தேர்ந்தெடுத்து, ஒரு சி.டி. போட்டு எங்ககிட்டே கொடுத்துர்றாங்க. அதை,  ஒரே  நேரத்துல இன்றைக்கு இருக்கிற தொழில்நுட்பத்தின் உதவியோட, பத்திரிகையாளர்கள் எல்லோருக்கும் அனுப்பி வச்சிடுறோம். இந்த வேலைகள் ஒரே நிமிஷத்துல முடிஞ்சிடும். ஆனா, நாங்க கொடுத்த செய்தியை யார் யாரு போட்டிருக்காங்கன்னு கண்காணிக்கிறதுக்குதான் அதிகமா நேரம் செலவாகுது. அதனால இப்போ மக்கள் தொடர்பாளர்களுடைய நிலைமை எப்படி இருக்குன்னா, தூங்கும்போது கூட கண்ணைத் திறந்துகிட்டுதான் தூங்க வேண்டியிருக்கு. சின்ன ’பீப்’ சப்தம் வந்தா கூட, யாரு என்ன டுவீட் பண்ணியிருக்காங்கன்னு, மொபைலை எடுத்துப் பார்த்துட்டுதான் படுக்க வேண்டியிருக்கு. அதனால, இப்போ மக்கள் தொடர்பாளரான நாங்க நடக்கிறதுக்குப் பதிலாக பறந்துக்கிட்டு இருக்கோம்!” என்றார். 

 

காலத்திற்கேற்ப மாற்றிக்கொள்ளும் கட்டாயம், எல்லோருக்கும் ஏற்படும். அப்படியொரு மாற்றத்தைச் சந்தித்து வெற்றிகொண்ட பெருமிதத்துடன் நம்மிடமிருந்து விடைபெற்றார் ரியாஸ் அகமது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles