தொடர்ந்து 5 மணி நேரம் கச்சேரி செய்ய ஆசை! மனம் இதழுக்காக.. மனம் திறக்கும் நித்யஸ்ரீ மகாதேவன்..

Friday, July 29, 2016

சங்கீத பாரம்பர்யமிக்க இசைக்குடும்பப் பின்னணி. டி.கே.பட்டம்மாள் என்ற இசைக்கடலிலிருந்து கடைந்து எடுத்த அமிர்தம். கர்நாடக சங்கீதத்தை பாமரர்களிடம் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவர்களில் இவரும் ஒருவர். மேடைக் கச்சேரியில்,  தொடர்ந்து உச்சஸ்தாயில் துளியும் பிசிறில்லாமல் பாடுவதில் வல்லவர் நித்யஸ்ரீ மகாதேவன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் மனம் இதழுக்காகப் பேச ஆரம்பித்தார்.

“எங்க வீட்டுல கர்நாடக சங்கீதம்  எப்போதுமே ஒலிச்சுக்கிட்டே இருக்கும். இசை ஜாம்பவான்கள் நிறைய பேர், எங்க வீட்டுக்கு வந்து பாடுவாங்க. நானும் அவங்களோட சேர்ந்து பாட ஆரம்பிச்சேன். ‘பாவம் ரொம்ப  நல்லாயிருக்கு. இவளுக்கு பாட்டு சொல்லிக் கொடுங்க’ ன்னு அவங்க சொன்னாங்க. எங்க அம்மா லலிதா சிவகுமார், எனக்கு இசை மேல ஈர்ப்பு இருந்ததைப் புரிஞ்சிக்கிட்டாங்க.  எனக்கு முறையாக இசைப் பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்கு அப்புறம், என்னோட பாட்டி  பட்டம்மாளும்  பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க. 
 
என்னோட முதல் இசை விமர்சகர்னா. எங்க அப்பா சிவகுமாரைத்தான்  சொல்லுவேன். 13 வயது பெண்ணாக இருக்கும்போது, ஒரு கர்நாடக சங்கீத போட்டியில கலந்துக்கிட்டு பாடினேன். காம்படீஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், ‘நீ நல்லாவே பாடலை. உன்னால நம்ம குடும்பத்துக்கே அவமானம்’ன்னு எங்க அப்பா கோபப்பட்டார். எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. உடனே என் பாட்டிதான், ‘நீ நல்லாத்தான் பாடினே! கண்டிப்பாக உனக்கு பரிசு கிடைக்கும்’ ன்னு சொன்னாங்க. கொஞ்ச நாள் கழிச்சு ரிசல்ட் வந்தப்ப, எனக்கு பரிசு கிடைச்சது. அது ரொம்ப சந்தோஷமாயிருந்தது. 
 
இதுக்குப்பிறகு, நான் நல்ல பயிற்சி எடுத்து மேடைக்கச்சேரிகள் செய்ய ஆரம்பிச்சேன். அப்போல்லாம், காரசாரமா நிறைய விமர்சனங்கள் வரும். பட்டம்மா பேத்தி நல்லாவே பாடலை, ரொம்ப கத்துறாங்கனெல்லாம் சொல்லியிருக்காங்க. அதைப் படிச்சிட்டு, எனக்கு ரொம்ப கஷ்டமாகிப் போச்சு. பட்டம்மா பாட்டிகிட்ட சொல்லி, ஒருமுறை ரொம்ப அழுதுட்டேன். உடனே, ‘இப்போ இருக்குற  விமர்சகர்கள் எல்லாம், 15 வயசு பட்டம்மா பாடி கேட்டதில்லை. அவா கேக்குறது 75 வயசு பட்டம்மா பாடுறதுதான்.  இந்த 75 வயசு வரைக்கும் பாடியிருக்கேன்னா, அதுக்கு நான் எவ்ளோ  சாதகம் பண்ணியிருப்பேன். எத்தனை பாட்டு பாடியிருப்பேன்னு யோசிச்சுப்பாரு. என்னோட அனுபவம் வேற, உன் அனுபவம் வேற. நீயோ 15 வயசு குழந்தை.  உன்கிட்டே எப்படி, 75 வயசு  சாரீரத்தை அவா எதிர்பார்க்க முடியும். நீ கரெக்டாதான் பாடிண்டு வர்ற. வருத்தப்படாதே’ன்னு எனக்கு ஆறுதல் சொன்னாங்க. பாட்டி கடுமையாகக் கூட பேச மாட்டாங்க. இசை உலகத்துல அவர்கள் எவ்வளவு பெரிய மனுஷியோ, தனி மனுஷியா அதைவிட இன்னும் ஒருபடி மேலேன்னுதான் சொல்லுவேன். அவங்க சொன்ன மாதிரி, தொடர்ந்து பிராக்டீஸ் செஞ்சேன். அதுக்கப்புறம், ரசிகர்கள் மத்தியில எனக்கு நல்ல ஒரு ரீச் கிடைச்சுது.
 
முன்னெல்லாம் சங்கீத கச்சேரிகள் தொடர்ந்து நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை இருக்கும். அப்படி தொடர்ச்சியா பாடணும்னுதான் எனக்கும் ஆசை. இப்போல்லாம், கச்சேரிகள்ல தொடர்ச்சியா இரண்டு மணி நேரத்துக்கு மேல பாடினாலே எழுந்து போக ஆரம்பிச்சுடுறாங்க. இது எனக்கு ரொம்ப கஷ்டமாஇருக்கும். அப்புறமாத்தான், ஒரு ரசிகையா அவங்க இடத்துல இருந்து யோசிக்க ஆரம்பிச்சேன். வீட்டுலேருந்து கிளம்பி கச்சேரி வர்றதுக்குள்ள, எவ்ளோ டிராபிக். அப்புறம், குழந்தைங்களுக்கு ஹோம் வொர்க் சொல்லித்தரணும். அடுத்த நாள் அவங்க ஸ்கூல் போக, நாம வேண்டியதைத் தயார் பண்ணனும். இதுக்கெல்லாம் நேரத்தை ஒதுக்கியாகணும். இதையெல்லாம் நினைச்சுப் பார்த்துதான், ஆடியன்ஸோட கஷ்டத்தையும் புரிஞ்சிக்கிட்டேன். 
 
கச்சேரிக்கு வர்ற எல்லா ஆடியன்ஸையும், நான் திருப்திப்படுத்தணும்னு நினைப்பேன். சில பேர் கல்யாணி ராகத்தை விரும்பிக் கேட்பாங்க. சிலர் தோடி கேக்கணும் போல இருக்கேன்னு சொல்லுவாங்க. சிலரோ, ராகம்-தானம்-பல்லவி கேட்டு ரொம்ப நாளாச்சேன்னு சொல்லுவாங்க. சக்கரவாகமெல்லாம் இப்ப யாருமே பாடுறதில்லயேன்னு ஏங்குறவங்களும் இருக்காங்க. இவங்க அத்தனை பேரையும் நான் திருப்திப்படுத்தணும். அதுக்கு ஏத்த மாதிரிதான், நான் பாடப்போகிற பாடல்களை தயார் பண்ணுவேன். ஆனால் கச்சேரியில பாட ஆரம்பிச்சதும், நான் என்னையே மறந்துருவேன். கடவுளோட ஆசீர்வாதத்தால, கச்சேரி பிசிறில்லாம அமையும்” என்று இசை தன்னுள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் குறித்து சிலாகித்துப் பேசினார் நித்யஸ்ரீ.
 
இசைக்குடும்பத்தின் தொடர்ச்சியாக, அடுத்த தலைமுறையும் இசையைச் சீராட்டுமா என்ற கேள்வியைக் கேட்டதும், தயக்கம் ஏதுமில்லாமல் பதில் சொன்னார் இந்த ஹைபிட்ச் குரலினி. “இப்போ இருக்குற பசங்க ரொம்ப சுட்டியா இருக்காங்க. எல்லாத்தையும் எளிதாக கிரகிச்சுக்கறாங்க. அவங்களோட அறிவுத்திறனைப் பார்த்தால், ரொம்ப வியப்பாக இருக்கும். என் குழந்தைகளும், இப்போ  என்னோட  கச்சேரிகளுக்கு வர்றாங்க. அவங்களை நான் எப்போதும் வற்புறுத்தறது இல்லை. அவங்களுக்கா பிடிச்சு, மியூசிக்கை கேரியரா எடுத்துக்கிட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷம்”, மிகத் தெளிவாகத் தன்னுடைய உள்ளத்தின் குரலை வெளிப்படுத்தினார் நித்யஸ்ரீ மகாதேவன். நமது வேண்டுகோளுக்காக, மனம் இதழ் பற்றிய தனது எண்ணத்தை இசைக்குரலாகத் தந்தார். மகிழ்ந்தோம், இயல்பை மறந்தோம்!!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles