இளைஞர்களின் கொண்டாட்டமான வாழ்க்கைதான் ‘பறந்து செல்ல வா’ - இயக்குநர் தனபால் பத்மநாபன்

Friday, July 29, 2016

மில் தொழிலாளர்களின் வாழ்வியலை ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ படத்தில் பதிவு செய்தவர் இயக்குநர் தனபால் பத்மநாபன். ஒரு சிறிய இடைவெளிக்குப் பின் கலகலப்பான கமர்ஷியல் கதைக்களனோடு ‘பறந்து செல்ல வா’ படத்தை இயக்கியிருக்கிறார். நடிகர் நாசரின் மகன் லுத்புதின் பாஷா, ஐஸ்வர்யா, சீன நடிகை நரேல் கெங், ஆர்.ஜே பாலாஜி, சதீஷ், கருணாகரன் என பல நட்சத்திரங்கள் இந்தப்  படத்தில் நடித்திருக்கின்றனர்.
 
 

‘‘படத்தை முழுக்க முழுக்க சிங்கப்பூர்ல ஷூட் பண்ணினோம்’’ என்று பூரிப்புடன் பேசத் தொடங்கினார் தனபால் பத்மனாபன். “தொழில் நிமித்தமாவும் வேறு சில காரணங்களுக்காகவும் அடிக்கடி சிங்கப்பூருக்கு போயிட்டு வருவேன். அப்படிப் போய்வரும்போதெல்லாம், அந்த ஊரு எனக்கு ரொமான்டிக் சிட்டியா தெரியும். அங்க இருக்கிறவங்களுக்கு, அப்படித் தெரிஞ்சிருக்குமான்னு எனக்குத் தெரியலை.

 

இன்னொரு விஷயத்தையும் சிங்கப்பூர்ல நாம கவனிக்கலாம். அங்க பெண்களுக்கு கட்டற்ற சுதந்திரம் உண்டு. எங்கே பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்குதோ, அங்கே அன்பும் மகிழ்ச்சியும் நிறைய இருக்கும் என்பது என்னோட நம்பிக்கை. அப்படி சிங்கப்பூர் மக்களோட வாழ்க்கையைப் பார்க்கும்போதெல்லாம், இங்கே ஒரு அழகான காதல் கதையை எழுதலாமேன்னு எனக்குள்ளே ஒரு ஒன்லைன் ஓடிக்கிட்டே இருக்கும். அப்படித்தான் ‘பறந்து செல்ல வா’ படத்துக்கான விதை எனக்குள்ளே விழுந்தது. இப்போ உங்க முன்னாடி கிளைகள் விரித்த ஆலமரமா நிக்குது. 

 

தமிழ்நாட்டுல இருக்கிற சிறிய கிராமம் மற்றும் நகரங்கள்ல இருந்து புறப்பட்டு, சிங்கப்பூர் உட்பட உலகம் முழுக்க உள்ள நாடுகளுக்கு வேலைதேடிப் போயிருக்காங்க நம்ம இளைஞர்கள். அந்த இளைஞர்களுக்கு, அங்கே ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கைக்குள்ளே ஒரு கொண்டாட்டம் இருக்கு. அதோட ஒரு பகுதிதான், இந்தப் படத்தோட கதை. 

 

சிங்கப்பூரைக் கதைக்களமா தேர்ந்தெடுக்கக் காரணம், அந்த நாட்டுக்காரங்க தமிழுக்கு கொடுக்கிற  மரியாதைதான். தாய்மொழியிலதான் குழந்தைகள் படிக்கணும்கிறது சிங்கப்பூர் உருவாகக் காரணமாயிருந்த லீ குவான் யூ- வின் கனவு. அப்படித் தாய்மொழியில படிக்கும்போதுதான், ஒரு விஷயத்தைச் சரியாக உள்வாங்கிக்கொள்ள முடியும் என்பது அவரோட நம்பிக்கை. அதனாலதான், ஏறக்குறைய 300 பள்ளிகள்ல தமிழ் மொழியைப் பாடமா வெச்சிருக்காங்க. 

 

நம்மைவிட அழகா, சிங்கப்பூர்காரங்க தமிழ் பேசுறாங்க. ஏப்ரல் மாதம் முழுக்க பல்வேறு விழாக்கள் எடுத்து, தமிழைக் கொண்டாடுறாங்க. அதையெல்லாம் அடிக்கடி பார்த்ததால, எனக்கு சிங்கப்பூர் மேலே ஒரு பெரிய ஈர்ப்பு உருவாகிடுச்சு. அதனாலதான் ‘பறந்து செல்ல வா’ படத்தை, முழுக்க அங்கேயே எடுத்தேன். படப்பிடிப்பு நடந்தப்போ, அந்த நாட்டோட மக்களும் அரசும் முழு ஒத்துழைப்பு கொடுத்தாங்க. சிங்கப்பூர்ல படமாக்கிய அனுபவம் எனக்குள்ளே ஒரு அழகான கனவா மாறிடுச்சு. 

 

இந்தப் படம் முக்கோண காதல் கதை இல்லை(சொல்லிவிட்டுச் சிரிக்கிறார்). இது ஆறுகோணம், ஏழு கோணம் கொண்ட காதல் கதைன்னுகூட சொல்லலாம். காதலைத் தேடிக்கிட்டே இருக்கிற ஒரு இளைஞன், அதை எப்படிக் கண்டடைகிறான் என்பதுதான் கதையே. இது வழக்கமான கதைதானேனு தோணலாம். ஆனா, அந்த இளைஞனோட பயணம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். அதைத் தாண்டியும் சில விஷயங்கள் இந்தப் படத்துல இருக்கு. எந்தவொரு விஷயத்தையும் என்டர்டெயினிங்கா சொன்னா, ஆடியன்ஸ் அதை நிச்சயமா வரவேற்பாங்க. 

 

வேற வேற இன மக்களோட வாழ்கிற ஒரு இளைஞனுக்கு, காதல் மட்டும் தன்னோட மதம், ஜாதி, இனம் சார்ந்த பொண்ணோட வரணும்னு நினைக்கிறது முட்டாள்தனமான விஷயம். இதைப் படத்துல சொல்லியிருக்கேன். இதுல சீன நடிகை நரேல் கெங், ரெண்டாவது ஹீரோயினா நடிச்சிருக்காங்க. படத்துல நடிகை ஐஸ்வர்யாவுக்கும் இவங்களுக்கும் ஒரு கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆகியிருக்கு. இது ஹீரோ & -
ஹீரோயின் கெமிஸ்ட்ரி இல்ல; ஸ்கீரின் ப்ரஸ்சன்ஸ். நிச்சயமா, தியேட்டர்ல அதை ஆடியன்ஸ் என்ஜாய் பண்ணுவாங்கனு நம்புறேன். 

 

சீரியஸான விஷயமோ, மொழி சார்ந்த கதையோ இந்தப் படத்துல இல்ல. இது ஒரு ஜாலியான படம். இதை இங்கே அழுத்தமா பதிவு செய்யணும்னு நினைக்கிறேன். நம்ம இளைஞர்களுக்கு, ஒரு கொண்டாட்டமான படமா இது இருக்கும். அதை அவங்க விரும்புகிற மாதிரி திரையில சொல்லியிருக்கேன். மொத்தக் குடும்பத்துக்கும் பிடித்த படமா இருக்கும்.

 

நம்மூர் மாணவர்களுக்கு வெளிநாடு போய்ப் படிக்கணும், செட்டில் ஆகணும்கிற ஒரு மயக்கம் இருக்கு. அந்த மயக்கத்துக்குத் தீனி போடுற படமாகவும் என் படம் இருக்கும். சரியா சொல்லணும்னா, வாழ்க்கையை தொடங்குகிற ஒரு இளைஞனோட இனிமையான பயணம்தான் ‘பறந்து செல்ல வா’!” தனபால் பத்மனாபனின் மனதிலும் வார்த்தையிலும் நம்பிக்கை தெறிக்கிறது. வானம் வசப்பட வாழ்த்துகள்! 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles