‘‘நூறு கலைஞர்களை உருவாக்குறதுதான் ஆரிமுகத்தோட கனவு!’’ - நடிகர் ஆரி

Friday, July 29, 2016

“என்னைவிடத் திறமையுள்ள எத்தனையோ இளைஞர்கள் இந்த நகரத்தின் தெருக்கள்ல சுத்திக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்குத் தேவை ஒரேயொரு அறிமுகம். அதற்கான துவக்கப்புள்ளியா என்னோட ‘ஆரிமுகம்’ இருக்கும் என்கிற நம்பிக்கையிலதான் இந்த நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கேன். இன்னைக்கு உங்க முன்னாடி நடிகனா நிற்கிறேன்னா, அது பல கரங்களோட முயற்சிதான். அதற்கான நன்றி உணர்ச்சிதான் இந்த முயற்சி” என்று தெளிவாகப் பேசுகிறார் நடிகர் ஆரி.
 

மெல்ல மெல்ல தனக்கான அடையாளத்தை தமிழ் திரையுலகில் உருவாக்கிவரும் இவர், தன்னுடைய ‘ஆரிமுகம்’ நிறுவனம் மூலம் உதவி இயக்குநர்களுக்கு திரைப்படப் பயிற்சி அளிப்பதோடு, படம் இயக்கும் வாய்ப்பையும் அளிக்க உள்ளார். அதற்கான முனைப்பில் இருந்தவரை விரட்டிப் பிடித்தோம்.

 

‘‘ ‘ரெட்டச்சுழி’, ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘நெடுஞ்சாலை’, ‘மாயா’ என ஒவ்வொரு படத்தையும் தேர்ந்தெடுத்து நடிக்கிறீர்களே?’’

‘‘அதுவா அமைஞ்சதுனுதான் சொல்லணும். சினிமாவுல கெரியரை ஆரம்பிச்சப்போ, எனக்கு வித்தியாசமான கதைக் களங்கள் கிடைச்சது. அதுபோல, காம்பினேஷனும் நல்லா அமைஞ்சது. நான் நடிச்ச முதல்படம் ‘ஆடும்கூத்து’. அது திரைக்கு வரலை. ஆனா, அந்தப் படம் தேசிய விருது வாங்கினது. அந்தப் படத்தை மலையாள இயக்குநர் டி.வி.சந்திரன் இயக்கியிருந்தார். அதுக்கு ஒளிப்பதிவு மது அம்பாட். சேரன், நவ்யா நாயர், பிரகாஷ்ராஜ்னு பெரிய ஆளுமைகள் நடிச்சிருந்தாங்க. அதனால, முதல் படமே எனக்குப் பெரிய டானிக்கா இருந்துச்சு. தமிழ் சினிமாவின் இருபெரும் ஜாம்பவான்களான இயக்குநர்கள் பாலசந்தர், பாரதிராஜா இவங்க ரெண்டு பேரோடவும் நடிச்ச படம் ‘ரெட்டச்சுழி’. இப்போ பாலசந்தர் சார் நம்மோட இல்ல. ஆனா, அந்தப் படத்தை என்னோட கெரியர்ல ஒரு பொக்கிஷமாத்தான் பார்க்கிறேன். அந்தப் படத்தை தயாரிச்சது டைரக்டர் ஷங்கர், படத்தோட பாடலை வெளியிட்டது நடிகை ஐஸ்வர்யா ராய்னு இப்படிப் பல சுவாரஸ்யமான விஷயங்கள் என்னோட வாழ்க்கையில நடந்திருக்கு. அதே மாதிரி, ‘மாலைப் பொழுதின் மயக்கத்திலே’ படம் எனக்கு வாழ்க்கைத் துணை கிடைக்கிறதுக்குக் காரணமா இருந்தது. ஆரி என்கிற நடிகனை, மக்களுக்கு என்னை இந்தப் படம்தான் கொண்டுபோய் சேர்த்தது. ‘மாயா’ வெளிவந்த பிறகு, இதுக்கு முன்னால் நான் நடிச்ச எல்லாப் படங்களும் ஆடியன்ஸுக்கு தெரியவந்தது. அதோட, பிற மொழிகளுக்கும் நான் போய்ச் சேர்ந்தேன். அப்படித்தான் இப்பவும் எனக்கு படங்கள் கிடைச்சிருக்கு. ஒரேயொரு விஷயத்தை மட்டும்தான் நான் கடைப்பிடிக்கிறேன்... ரெப்படிஷன் இல்லாம பார்த்துக்கணும். மற்றபடி, தேர்ந்தெடுத்து படங்கள்ல நான் நடிக்கிறதில்ல!’’ 

 

‘‘கூத்துப்பட்டறையில் இருந்து வந்தவர் நீங்கள். தமிழ் சினிமாவில் உங்களுக்கான இடம் கிடைத்திருக்கிறதா?’’ 

‘‘ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புறேன். நான் கூத்துப்பட்டறையில இருந்து வரலை. கூத்துப்பட்டறையில இருந்தவங்ககிட்டே பயிற்சி எடுத்துக்கிட்டேன். ஜெயக்குமார், குமரவேல், என்.எஸ்.டி. பாலான்னு மூணு பேருதான் என்னோட குரு. அவங்ககிட்ட பயிற்சி எடுத்துக்கிட்டுதான் நாடகத்துறையில பயணிச்சேன். கூத்துப்பட்டறையில சேர்றதுக்கு வாய்ப்பு கிடைச்சாலும், என்னோட பொருளாதாரப் பிரச்னைகள் அதுக்கு இடம் கொடுக்கல.சினிமாவில எனக்கான இடம் கிடைச்சிருக்கான்னு கேட்டீங்கன்னா, உங்க முன்னாடி உட்கார்ந்து பேட்டி கொடுக்கிறதே அதற்கான அங்கீகாரம்னுதான் நினைக்கிறேன்.’’

 

‘‘ஒரு நடிகனுக்கு ஃபிட்னஸ் எந்தளவுக்கு முக்கியம்?’’

‘‘நடிகனுக்கு மட்டுமில்ல, பொதுவா எல்லோருக்குமே உடல் ஆரோக்கியம் என்பது மிகப் பெரிய தேவை. திரைக்கு முன்னாடி வர்றதுனால, நடிகர்கள் ஃபிட்னஸ்ல கூடுதல் கவனம் செலுத்துறோம். ஏன்னா, நடிகனை நம்பித்தான் சினிமாவுல பெரிய முதலீடு போடுறாங்க. அதனால, உடல் ஆரோக்கியத்தோடு படப்பிடிப்புத் தளத்துல போய் நிக்கணும். இது எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பொருந்தும்.
உங்களை நம்பி ஒரு வீடும் அலுவலகமும் இருக்கு. நீங்க ஃபிட்னஸோட இருந்தாதான், உங்க வேலையைச் சிறப்பா செய்ய முடியும். ஆக, உடல் ஆரோக்கியம் என்பது சினிமா நடிகனுக்கு மட்டுமில்ல, ஒவ்வொருத்தருக்குமே முக்கியம்தான்.’’ 

 

‘‘உணவு உபசரிப்புக்கு பெயர்போன தமிழகம், தற்போது உணவுக் கட்டுப்பாடு விஷயத்தில் விலகிச் செல்கிறதே?’’ 

‘‘வாழ்வதற்காக சாப்பிடணுமா, இல்ல சாப்பிடறதுக்காக வாழணுமாங்கிற கேள்விதான் இது. ‘இருக்கிற வரைக்கும் சாப்பிட்டுட்டு போவோமே’ன்னு சில பேரு சொல்வாங்க. இன்னும் சிலர், ‘வாழ்க்கையைத் திட்டமிட்டு, ஒவ்வொரு நொடியா வாழணும்’னு சொல்வாங்க. உணவும் அப்படித்தான். இன்றைக்கு சமூகத்துல இவ்வளவு பிரச்னைகள், கொலைகள், ஊழல்கள் நடக்கிறதுக்குப் பின்னாடி இருக்கிறது சரியான உணவுப் பழக்கம் இல்லாததுதான். முன்னாடியெல்லாம் ஊருவிட்டு ஊரு போனோம்னா, விருந்தினர்களை உபசரிக்கிற பாரம்பர்யம் இருந்துச்சு. இன்னைக்கு அதை நாம தொலைச்சிட்டோம். நகர்ப்புற வாழ்க்கை நமக்கு சுயநலமா வாழக் கத்துக்கொடுத்திருக்குது. அதே மாதிரி, உணவு பற்றிய புரிதலும் இன்றைய சமூகத்துல குறைவா இருக்கு. பெரிய கடைகளில் போய் சாப்பிடுறதுதான் ஸ்டேட்டஸ்னு மாத்திட்டோம். அந்தச் சாப்பாடு ஆரோக்கியமா என்பதை நாம பார்க்கிறதில்ல. இன்றைய உணவு சந்தையால, நம்மோட பாரம்பர்யம் அழிஞ்சிகிட்டே வருது. இயற்கை வேளாண்மையை நோக்கி எவ்வளவு வேகமா போறோமோ, அப்போ எல்லாம் சரியாயிடும். விவசாயத்தை மீட்டெடுக்க நிறைய பேரு முயற்சி பண்றாங்க. அதுல நானும் ஒருத்தனா இருக்கேங்கிறது சந்தோஷம்!’’ 

 

‘‘உங்களது ‘ஆரிமுகம்’ நிறுவனம் மூலம், உதவி இயக்குநர்களுக்கு பட வாய்ப்பு தருவீர்களா?’’ 

‘‘நான் சினிமாவை நோக்கி வரும்போது, எனக்கு எந்தப் பின்னணியும் இல்லை.வெறும் மஞ்சைப் பையை தூக்கிக்கிட்டுதான் சென்னை வந்தேன். வழக்கமா, நம்மபெற்றோர்களுக்கு நம்மை பற்றிய கனவு இருக்கும். எங்க வீட்டுலஒவ்வொருத்தரும் ஒவ்வொரு புரொஃபஷன்ல இருக்காங்க. ஆனா, நான் பத்தாம்வகுப்பு வரைக்கும்தான் படிச்சேன். அப்போ, ‘வாழ்க்கையில நீ என்னவா ஆகப்போறஎன்பதை நீதான் முடிவு செய்யணும். அதே நேரத்துல நீ என்னவா இந்த சமூகத்துல வாழப்போறேன்னும் யோசிச்சிக்கோ’னு எங்கப்பா சொன்னார். அந்த ஒரு விஷயம்தான், நான் இன்னைக்கு ஒரு நடிகனா இருக்கறதுக்கும் உதவி
இயக்குநர்களுக்கு உதவறதுக்கும் காரணம். கோலிவுட்டுல ஒரு நடிகனா என்னை நிலைநிறுத்திக்க, நான் பட்ட கஷ்டங்களும் வலிகளும் நிறைய. அதேமாதிரியான கஷ்டம் அடுத்த தலைமுறைக்கு வந்துடக் கூடாதுங்கிறதுக்காக, ‘ஆரிமுகம்’ நிறுவனத்தை ஆரம்பிச்சிருக்கேன். இந்த நிறுவனம் மூலமா உதவி இயக்குநர்களுக்கு படம் இயக்குற வாய்ப்பு கிடைக்கும். இதுல என்னோட சுயநலமும் இருக்கு. குறைஞ்சது நூறு கலைஞர்களை உருவாக்கணும்கிறதுதான் ‘ஆரிமுகத்’தோட கனவு. நல்ல கனவுகள் நிச்சயம் பலிக்கும்னு சொல்லுவாங்க. பார்க்கலாம் பிரதர்..!” ஆரியின் கண்களில் மின்னுகிறது நம்பிக்கை!

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles