நெடுந்தூரப் பயணத்துக்கு  நல்ல தோழமை வேண்டும்! எழுத்தாளர் மகுடேஸ்வரன்

Saturday, December 31, 2016

தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் மகுடேஸ்வரன். உயிர்ப்பான கவிதைகளைத் தாண்டி, தமிழ் மொழியின் சிறப்புகளை, இலக்கணத்தை, புதிய சொற்களை நாள்தோறும் தேடித்தேடி கண்டடைந்து அவற்றை முகநூல் வழியே உலகுக்கு அளித்து வருபவர். நவீன தமிழ் மொழிக்குக் கிடைத்த மகுடம் மகுடேஸ்வரன். அவரது எழுத்து மற்றும் பயணம் குறித்துப் பேசினோம். 

"ஒரு கவிஞன் என்பவர் பேரறிஞர் என்றே நான் கருதுகிறேன். தன்னுடைய எல்லைக்கு உட்பட்ட எந்தப் பொருள் குறித்தும் அவர் அறிமுக அளவிலேனும் அறிந்து வைத்திருக்க வேண்டும். அறிதலுக்கு அளவேயில்லை. தினம் ஒன்றை கற்றுக்கொண்டால் அது தரும் பரவசமே வேறு. நீங்கள் பலவற்றைக் கற்கும்போது பேரறிஞனாக மாறிவிடுகிறீர்கள். அப்போது ஒரு கவிஞனாக ஒரு பொருளை பார்க்கும்போது அது குறித்து எழுதும் கவிதை இன்னும் மேலானது, வலுவானது. அப்படியொருவராக இருக்க வேண்டுமென தான் நான் நினைத்தேன். கவிஞன் என்கிற இடம், என்னுடைய மொழி ஆளுமை, சிந்தனைத் திறன், கற்பனை ஆற்றல் இவற்றுக்கு வடிகாலாக இருக்கிற ஒரு துறை என்றால், பிற அனைத்துத் துறைகளின் மீதும் எனக்கு ஆர்வம் அதிகம். 

வரலாறு, அறிவியல், தொன்ம இடங்கள் என எல்லாவற்றையும் குறித்து ஆழ்ந்த ஈடுபாடு உண்டு. இவை அனைத்தைப் பற்றியும், விரிவாக இல்லையென்றாலும் அறிமுக அளவிலேனும் அவற்றோடு எனக்கொரு பரிச்சயம் உண்டு!" என்று அழகான தமிழில் பேசியவரிடம், ’சமகால நிகழ்வுகள் பற்றி வெளிப்படையாக எழுதி வருகிறீர்கள். குறிப்பாக, கடந்த ஆண்டு பெரு வெள்ளத்தின்போது முகநூலில் நீங்கள் எழுதிய நீர்வழித்தடங்கள் குறித்த பதிவு பெரிய அளவில் விவாதிக்கப்பட்டதே?’ என்ற கேள்வியை முன்வைத்தோம். 

"டிசம்பர் 2015 பெருவெள்ளம் குறித்து எழுதிய நீர்வழித்தடங்கள் கட்டுரை என்பது அடிப்படை புவியியல் சார்ந்தது. மகிழுந்து ஓட்டுபவன் என்கிற முறையில், நான் நீண்ட பயணங்களை மேற்கொள்பவன். அப்படிப் பல்வேறு நிலப்பரப்புகளை கடக்கும்போது, இயல்பாகவே நிலம் பற்றிய ஒரு வரைபடம் என் மனசுக்குள் என்னையும் அறியாமலேயே வந்துவிடுகிறது. 

சென்னை போன்ற நகரங்கள் பெருத்த நிலப்பரப்பு கொண்டது. ஏராளமான மக்கள் இந்த நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்துள்ளார்கள். இதனால் என்ன நடந்தது என்றால், நிலத்தை முழுவதுமாகப் பூசி மெழுகிவிட்டோம். நிலத்தினுடைய மண்ணே இப்போது கிடையாது. மண்ணின் பரப்பு எங்குமேயில்லை. எல்லாவற்றையும் கலவை கொண்டு மூடிவிட்டோம். பெய்யும் மழை நிலத்தில் இறங்க வழியில்லை. இதனால், அது தனக்கான வழியைத் தேடி அலையும்போது, பள்ளத்தை நோக்கிப் பாய்கிறது. இருக்கிற இரண்டு ஆற்றுத்தடங்களின் வழியே மட்டும் பெருவெள்ளம் கடலை நோக்கிச் செல்வது சாத்தியமல்ல. 

நமது ஆற்றுப் படுகை எப்படியிருக்கிறது என்பது அடுத்த ஆராய்ச்சி. சென்னை விமானநிலையத்துக்குப் பின்னால் உள்ள பொழிச்சலூர் பகுதியில் இருந்து ஆற்றினுடைய படுகை மட்டம் என்பது கடலுக்கு நிகராகிவிடுகிறது. கடல் மட்டத்தில் இருந்து ஒரு 8 அடி அல்லது 12 அடி அளவில்தான் ஆற்றுப் படுகையின் உயரம் இருக்கிறது. இதனால், இந்த ஆற்றுத் தடத்துக்கு பள்ளமே இல்லை என்பது தெரிய வருகிறது. இதுமட்டுமில்லாமல் கட்டிட ஆக்கிரமிப்புகள், குப்பைக் கூளங்கள் என நீர்வழித்தடம் முழுக்கவே தடைபட்டு, பெருவெள்ளம் ஊருக்குள் புகுந்துவிட்டது. அது ஒரு மறக்க முடியாத தீங்காக அமைந்துவிட்டது. இந்தக் கண்ணோட்டத்தில் நான் எழுதியதால், அது பலரையும் போய் சேர்ந்திருக்கிறது என்றே கருதுகிறேன்!" என்று விளக்கமாக விவரித்தார் மகுடேஸ்வரன். 

"தொடர்ந்து பயணம் செய்வதில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?" என்றதும், அவர் உற்சாகமாகப் பேச்சைத் தொடர்ந்தார். "நெடுநாள் அல்லது நெடுந்தூரப் பயணத்துக்கு நல்ல தோழமை அமைய வேண்டும். தற்செயலாகவோ அல்லது நற்பெயராகவோ எனக்கு அப்படி அமைந்திருக்கிறார்கள். அப்படித் திட்டமிடும்போது, பயணத்தை வெளிமாநிலங்களில்தான் அமைப்போம். இயற்கை எழில் கொஞ்சும் நிலக்காட்சிகள், தொன்மையான இடங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என தேர்ந்தெடுத்துப் பார்ப்போம். 

பொதுவாக கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா பகுதிகளில் பயணம் செய்திருக்கிறோம். இப்போது மகாராஷ்டிரா போய் வந்தோம். அப்படிப் போக முடிவெடுத்தபோது, காவிரி பிரச்சனைக்காக கர்நாடகம் வழியே செல்ல முடியாத சூழல் வந்தது. ஆனாலும், நடந்தாவது சென்றுவிட வேண்டும் என்பது எங்கள் திட்டம். எத்தகைய இடர்பாடுகள் வந்தாலும் பயணத்தைத் தவிர்க்கக் கூடாது என்று முடிவெடுத்தோம். 

பயணத்தைத் தொடங்குகிற அந்த நிமிடம் வரை, பல்வேறு பிரச்சினைகள் உங்களை நோக்கி வரும். அதையெல்லாம் கடந்தால் தான் நீங்கள் பயணப்பட முடியும். எனவே ஆந்திரா வழியாக சென்றோம். மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா, எல்லோரா போன்ற பகுதிகளுக்குப் போனோம். அருமையான பயணம் அது. அப்படிப் பயணித்தபோது, சில இடங்களில் சுமார் எழுபது கிலோ மீட்டருக்கு எந்த வீடுகளும் இல்லை. மேய்ச்சல் நிலங்களாகவோ அல்லது கைவிடப்பட்ட நிலங்களாகவோ தான் இருக்கும். அந்த பரந்த நிலப்பரப்புகள் உங்களுக்கு ஏற்படுத்தும் மனவெழுச்சியை, நீங்கள் ஒருமுறையேனும் அடையணும்!" 

அதே பரவசத்தோடு பேச்சை நிறைவுசெய்தார் கவிஞர் மகுடேசுவரன். அவரது விவரிப்புகள், கவிதையெனும் வாழ்வை மனக்கண் முன் நிழலாட வைத்தது. ‘நாமும் நிறைய பயணிக்க வேண்டும்’ என்ற குரல் உள்ளுக்குள் ஒலித்தது!

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles