எல்லா நாடகத்தையும் விமர்சனம் செய்யணும்! சாய் ராம் க்ரியேஷன்ஸ்  ராஜாராம்

Saturday, December 31, 2016

“இயக்குனர் கே.பாலச்சந்தர் ஒருமுறை மேடையில் பேசும்பொழுது, நல்ல திரைக்கதை எழுதி படம் வெளியிட்டாலும் என்னுடைய கணிப்பு பொய்த்துப் போகிறது. மாதுவை மையமாக வைத்து ‘எதிர்நீச்சலை' எழுதினேன். பேசப்பட்டது என்னவோ, பட்டு மாமி கிட்டு மாமாதான். ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் என்ன செய்தாலும், அது ஹிட் அடிக்கிறது. அவர் ரிக்‌ஷாகாரன் எடுத்தால், அந்த பாத்திரம் தான் பேசப்படுகிறது. ஆடியன்ஸோட பல்ஸ் தெரிந்தவர் அவர்தான்" என்று பழைய நினைவுகளை அசைபோடுகிறார் ‘சாய் ராம் க்ரியேஷன்ஸ்’ இயக்குனர் ராஜாராம். மேடை நாடகங்கள் மற்றும் நாடகத்துறையில் வலம்வந்த ஜாம்பவான்கள் பற்றிய பல அனுபவங்கள் இவரது நினைவடுக்குகளில் தேங்கியிருக்கிறது.

சிரத்தையோடு செய்யும் எந்த வேலையும் வெற்றியைக் கொடுக்கும் என்று சொல்லும் இவர், தன்னுடைய அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். 

“சென்னை விவேகானந்தா கல்லூரியில பி.ஏ படிச்சிட்டு, நாடகத்துறைக்கு வந்தேன். ஏன்னா, ’படிச்சு முடிச்சிட்டு தான் நீ நடிக்கப் போகணும்’னு கண்டிப்போட சொல்லிட்டாங்க எங்க அம்மா. 1969 ஆம் ஆண்டு முதன்முதலாக‘அலைகள் ஓய்வதில்லை’ என்ற நாடகத்துல நடிச்சேன். அதை எழுதி இயக்கியவர் மெரினா. அந்த நாடகத்தை கிருஷ்ண கான சபாவுலதான் மேடை ஏற்றினோம். ரசிகர்கள்கிட்ட இருந்து நல்ல வரவேற்பு" என்று சிலிர்க்கிறார் ராஜாராம்.

தொடர்ந்து பல நாடகங்களில் நடித்த இவர், கடந்த 1978ம் ஆண்டு ‘கீத் மாலிகா’ என்ற நாடகக் குழுவைத் தொடங்கினார். இதுபற்றிய கேள்விகளுக்கு, மிக சரளமாகப் பதிலளித்தார் ராஜாராம்.

நாடகங்களை இயக்கி நடித்த அனுபவம் திருப்தியைத் தருகிறதா?
முதன்முதலாக, குரியகோஸ் ரங்கா எழுதிய ‘உறவாடும் ராகங்கள்' என்ற கதையை இயக்கினேன். அந்த நாடகத்தை 150 தடவை மேடை ஏற்றினோம். அதுக்குப்பிறகு, தொடர்ச்சியாக நாடகம் இயக்க ஆரம்பிச்சேன். பூவை மணி எழுதி, நான் இயக்கிய  ‘சபையிலே மௌனம்', ‘எங்கள் வீடு கோகுலம்' மற்றும் ‘மௌனமான நேரம்' போன்ற நாடகங்கள்  நாடக உலகத்துல திருப்புமுனையை ஏற்படுத்தியது. கஜேந்திர குமார் போன்ற நகைச்சுவை கதாசிரியர் எழுதிய நாடகங்களைக் கூட இயக்கி இருக்கேன்.

1996 ஆம் ஆண்டு வி.கோபாலகிருஷ்ணன் அறிமுகமானார். அவரோட மறைவு வரைக்கும், அவர் குழுவுல தான் இயங்கிட்டு வந்தேன். அவர் தயாரிச்ச மூன்று நாடகங்களை, நான் இயக்கியும் இருக்கிறேன்.

வெளிநாடுகள்ல ‘டெய்லி தியேட்டர்’னு இருக்கும். அதாவது, அங்க தினம் நாடகங்கள் அரங்கேறிட்டே இருக்கும். மக்கள் டிக்கெட் வாங்கிட்டு, எப்போ வேணும்னாலும் அந்த நாடகங்களை பார்ப்பாங்க. அதே மாதிரி இந்தியாவிலயும் செய்யணும்னு ரொம்ப ஆசையாக இருந்தது. 1993ல ‘ஒரு மாற்றம் வரும்’னு நாடகத்தை, தொடர்ந்து முப்பது நாட்கள் பாரதிய வித்யாபவன்ல அரங்கேற்றினேன். கடைசி நாளன்னிக்கி நடிகர் கமல்ஹாசன் வந்து கவுரவிச்சது, எங்களுக்குப் பெருமையாக இருந்தது. ‘அன்றும் இன்றும் என்றும்'னு ஒரு நாடகத்தை, 1994ஆம் ஆண்டு ராணி சீதை ஹால்ல தொடர்ந்து 30 நாட்கள் மேடை ஏத்தினோம். கடைசி நாள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எங்களைக் கவுரவப்படுத்தினார். 

இப்படிப் போய்க்கிட்டிருந்த பயணத்துல, இரண்டு வருஷம் முன்னாடி கதாசிரியர் பாரதி வாசனைச் சந்திச்சேன். நாங்க இரண்டு பெரும் இணைந்து, ‘காட்சிகள் மாறும்' என்கிற நாடகத்தை அரங்கேற்றினோம். அதுக்கு நல்ல வரவேற்பு.

இப்போ ‘பட்டாபிஷேகம்’னு ஒரு நாடகத்தை அரங்கேற்றிட்டு இருக்கோம். ஒரு திரைப்படத்துக்கு திரைக்கதை எவ்வளவு முக்கியமோ, அதே போல ஒரு நாடகத்துக்கு சினேரியோன்னு சொல்லுவாங்க. அதாவது காட்சிகளின் தொடர்ச்சி ரொம்ப முக்கியம். என்னோட நாடகங்கள்ல அது கட்டாயம் இருக்கும். கதை - வசனம் பாரதிவாசன்னு சொல்லிட்டு, இயக்கம் - சினேரியோ ராஜராம்னு தான் அனௌன்ஸ் பண்ணுவாங்க.

எங்க நாடகம், எப்போதுமே நல்ல கருத்துகளைத்தான் வலியுறுத்தும். ‘பட்டாபிஷேகம்’ நாடகத்தை, எங்க குழுவுல இருக்குற சத்யா என்ற இளைஞர் திரைப்படமே இயக்க முடிவு செஞ்சிருக்கார். நான் இதுவரைக்கும் ஐந்து கதாசிரியரை அறிமுகப்படுத்தியிருக்கேன். அதோட, இதுவரைக்கும் ஆயிரம் தடவை நாடகங்களை மேடை ஏற்றி இருக்கிறேன்.”

 

சமீப காலங்கள்ல நாடகத்துக்கான வரவேற்பு எப்படி இருக்கிறது?

“நாடகம் என்கிற துறை இப்போ நலிஞ்சுகிட்டே வருது. ஏன்னா, டிவி மீடியா அதை சாப்பிட்டிருச்சு. அந்தக் காலத்துல நாடகம் நடத்தினோம்னா, கட்டாயம் இடைவேளை கொடுப்போம். இப்போ அப்படி இல்லை. ஒரு நாடகத்தையே ஒன்றரை மணிநேரத்துல நாங்க முடிச்சிடனும். அதுக்கு மேல ரசிகர்கள் பார்க்க மாட்டாங்க. அந்தக் காலத்துல ஒய்.ஜிமகேந்திரன், எஸ்.வி.சேகர்னு நட்சத்திர குழுக்கள் இயங்கிட்டு இருந்தது. அவங்களுக்கு நடுவுல, அமெச்சூர் ஆர்ட்டிஸ்டுகளை வைத்து நாடகங்களை குறைந்தபட்சம் ஐம்பது தடவை அரங்கேற்றியது எங்களது சாதனை. 

இன்னிக்கி இருக்குற இளைஞர்களுக்கு நாடகத்தின் மேல் ஈடுபாடு இல்லை. எந்நேரமும் அவங்க கைபேசியைத்தான் பார்த்திட்டு இருக்காங்க. அவங்களுக்கு கண்டிப்பா நாடகத்தோட அருமை புரியும். அதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். எல்லா இடத்துலயும் மாற்றம் என்பது கட்டாயம் நிகழும். காலச்சக்கரம் ஒரே மாதிரி சுற்றாது. அதனால, நாடகம் மறுமலர்ச்சி அடையும். அவ்வளவு எளிதில அழியாது.”

 

சாய்ராம் கிரியேஷன்ஸுக்கென்று தனி பாணி இருக்கிறதா?

“யதார்த்தம்தான் எங்களோட பாணி. சொல்ல வர்ற கருத்துக்களை நம்ம வாழ்க்கையில நடக்குற விஷயங்களோடு ஒப்பிட்டு, அதை எங்க கதாபாத்திரங்கள் மூலமாக பேச வைப்போம். ஒரேடியாக கருத்து சொல்வதிலோ அல்லது பிழிய பிழிய அழவைப்பதிலோ எங்களுக்கு உடன்பாடில்லை. 

உதாரணத்துக்கு சொல்லணும்னா, எங்க ‘பட்டாபிஷேகம்' நாடகத்துல ஒரு காட்சி உண்டு. பெற்றோர் தங்களோட பிள்ளைக்கு வரன் தேடுகிறார்கள். அவன் நன்றாகப் படித்து லட்சம் லட்சமாக சம்பாதிப்பவன். திருமணத்தைப் பற்றி கேட்டதும், ’என்னை படிக்க வைத்த உங்களுக்கு பெண் பார்க்கத் தெரியாதா?’ என்று மரியாதையாகக் கூறுவான் அந்த மகன். இதன் மூலமாக நாங்கள் சொல்ல விரும்புவது என்னவென்றால், படித்துப் பட்டம் வாங்கி நன்றாகச் சம்பாதிக்கும் ஒரு மகன் பெற்றோர்களிடம் நல்ல மதிப்புடன் இருக்கிறான் என்பதே. இதுபோல, எங்கள் கருத்துக்களை நாங்கள் கூறுகிறோம்.”  

 

உங்களது எதிர்கால நோக்கம் என்ன?

என்னோட ஆசை என்னன்னா, கதாசிரியர்கள் நிறைய வரணும். நடிகர், நடிகைகள் பலர் நாடகத் துறைக்கு வரணும். நல்லி குப்புசாமி செட்டியார் போன்றவர்கள் எல்லாருக்கும் ஸ்பான்சர் செய்யுறாங்க. நாடகங்களைப் பொறுத்தவரை, எங்களுக்கு அது போதவில்லை. நாங்க, எங்க கைக்காசை போடுறோம். ரிகர்சல் எல்லாத்துக்கும் நாற்பதாயிரம் வரை செலவாகுது. அது எங்களுக்குக் கட்டுப்படியாகலை. 

அது மட்டுமில்லாம, எல்லா நாடகத்தையும் பத்திரிகை விமர்சனம் செஞ்சாங்கன்னா நல்லா இருக்கும். நாளைக்கும் நாடகத்துறை ஆரோக்கியமாக இருக்கும்” என்று வேண்டிக்கொண்டு கனத்த மனதோடு விடை பெற்றார் ராஜாராம். 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles