படத்தொகுப்பாளர் பீ.லெனின் இயக்கத்தில்  ’கண்டதை சொல்கிறேன்’!

Thursday, December 22, 2016

பிரபல படத்தொகுப்பாளர் பீ.லெனின், தேசிய விருது பல பெற்ற பிலிம் எடிட்டர் என்பது அனைவரும் அறிந்ததே. ’ஊருக்கு நூறு பேர்’ உட்பட தேசிய விருது பெற்ற பல படைப்புகளை உருவாக்கியவர். சமூகம் சார்ந்த கதைக் கருக்களை மையமாகக் கொண்டது இவரது இயக்கத்தில் வெளியான திரைப்படங்கள். அந்த வகையில் அவர் இயக்கியுள்ள படம்தான் 'கண்டதை சொல்லுகிறேன்’. குறிப்பிட்ட ஒரு பிரிவினரது கலை, கலாசாரத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். அதோடு, அந்த மக்களின் இன்ப துன்பங்களையும், அன்பையும், அவர்களின் குடும்ப உறவுகள் தொடர்பான விஷயங்களையும் விளக்கும் வகையில் தயாராகி இருக்கிறது. 

இக்கதையின் முக்கியக் கதாபாத்திரம் மாசானம். முன்னோரால் தனக்கு வழங்கப்பட்ட இசைக்கருவியான பறை முழக்கத்துக்கு, இந்த சமூகம் உரிய மரியாதை அளிக்காததால் விரக்தி அடைகிறார் மாசானம். வாழ்க்கையில் பிடிப்பற்றுப் போய். குடும்பத்தைக் கவனிக்காமல் குடிக்கு அடிமையாகிறார். மாசனத்தின் மகன் சுடலை பறை இசைப்பதில் கெட்டிக்காரன். பாரம்பரியமான அந்த இசைக்கருவியை வாசிப்பதில் சில மாற்றங்களைச் செய்து, அதை மற்றவர்களுக்குக் கற்பிக்கிறான். சுடலையின் இந்த நடவடிக்கை, மாசானத்தின் மனதில் ஆரம்பத்தில் பெரிய ஈடுபாடு எதையும் ஏற்படுத்தவில்லை. 

நகரத்து இளைஞனான சித்தார்த், இசைக்கலைஞனாக முயற்சி செய்பவன். இவனது பெற்றோரைப் பொறுத்தவரை, இசை என்பது பணப்பால் சுரக்கும் ஒரு பசு. இதற்கு எதிரான எண்ணம் கொண்டவன் சித்தார்த். 

சுடலை வசிக்கும் கிராமத்துக்கு வரும் சித்தார்த், பறையிசையைக் கற்றுக்கொள்கிறான். சுடலையின் திறமை, சித்தார்த்தைக் கவர்கிறது. பழைய தலைமுறையின் சிதைந்த, பணத்தையே குறியாகக்கொண்ட மனநிலையிலிருந்து மாறுபடுகின்றனர் இருவரும். சுடலையும் சித்தார்த்தும் சேர்ந்து இசைத்துறையைச் செழுமைப்படுத்துகின்றனர் என்பதோடு படம் நிறைவடைகிறது. 

இந்தப் படத்தில் மாசானமாக ‘பூ’ ராமு நடித்துள்ளார். மேலும் பல புதுமுகங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். இதனை புளூ ஓஷன் எண்டர்டெய்ன்மென்ட், ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் கோ. தனஞ்ஜெயன் - ஜே. சதீஷ் குமார் ஆகியோர் கூட்டாகத் தயாரித்துள்ளனர். இப்படத்தைப் பார்த்து பாராட்டிய தணிக்கைக் குழுவினர், 'யு' சான்றிதழ் அளித்துள்ளனர். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles