கவிதை என்பது சோம்பேறிகளுக்கான இடம்! எழுத்தாளர் உமாசக்தி

Friday, December 16, 2016

"இயக்குநர் மணிரத்னம் சாரோட மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் சுமார் பத்து வருடம் வேலை பார்த்த அனுபவமும் உண்டு. அதேபோல நண்பர் பாஸ்கர் சக்தி வசனம் எழுதுகிற படங்களுக்கு, அவரோட அஸிஸ்டென்ட்டா வொர்க் பண்ணியிருக்கேன். இதெல்லாம் சேர்ந்துதான் இப்போ மணிரத்னம் சாரோட அஸிஸ்டென்ட் பிஜோய் நம்பியார் இயக்கும் படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்பு கிடைச்சிருக்கு.

சீக்கிரமே படம் குறித்த செய்திகள் வெளியாகும்." கண்களில் உற்சாகம் கொப்பளிக்கப் பேசுகிறார் எழுத்தாளர் உமாசக்தி. இலக்கியம், சினிமா, பத்திரிகை என பன்முக அனுபவம் கொண்ட ஆளுமையுடன் பேசினோம்.. 

 

நவீன இலக்கியத்துறைக்குள் கவிதாயினியாக நுழைந்தது பற்றி சொல்லுங்களேன்?

"எங்க வீட்டுல எல்லோருக்கும் வாசிப்பு அனுபவம் உண்டு. சின்ன வயசுல, என்னையும் சிறுவர் நூல்களை வாசிக்க பயிற்றுவித்தாங்க. அப்படிதான் நூலகங்களுக்குள்ளேயும் என்னை கொண்டு போனாங்க. அங்கே எனக்கான புத்தகங்களைத் தாண்டி, என்னை கவர்ந்தது எழுத்தாளர் தமிழ்வாணனுடைய படைப்புகள் தான். அவருடைய தொப்பியும், கண்ணாடியும்தான் என்னை முதலில் வசீகரித்தது. 'துப்பறியும் சங்கர்லால்' போன்ற புத்தகங்களை வாசித்தபோது, அதேபோல பின்னாட்களில் நாமும் எழுத வேண்டும் என்கிற உந்துதல் ஏற்பட்டது! 

எனக்குள் தோன்றுகிற விஷயங்களை டைரியில் ஆங்காங்கே எழுதி வைப்பேன். அப்படி, எட்டாவது படிக்கும்போது தமிழ், ஆங்கிலம் ரெண்டு மேலேயும் எனக்கு ஈடுபாடும் ஆர்வமும் வந்தது. அப்போ எங்கள் பள்ளியில் ஒரு சிற்றிதழ் கொண்டு வந்தாங்க. அதற்கு மாணவர்களிடம் இருந்து படைப்புகளை கேட்கும்போது, நான் நான்கு கவிதைகளை எழுதிக் கொடுத்தேன். ஏற்கனவே எங்களுடைய பள்ளிக்கு எழுத்தாளர் ஈரோடு தமிழன்பன் வந்திருந்தாரு. அவருடைய வருகையும் என்னுடைய கவிதை ஆர்வத்தை அதிகப்படுத்தியது. இப்படியாக எனது பள்ளி சிற்றிதழில் வெளியான பசி, அகிம்சை உள்ளிட்ட தலைப்புகளில் வெளியான அந்தக் கவிதைகள்தான் இலக்கியத்துறைக்குள்ளே வருவதற்கான என்னுடைய ஆரம்ப விதை! 

 

பத்திரிகையாளராகவும் கால்பதித்தது எப்படி?

"பதினொன்றாவது படிக்கும்போது, எனக்கு பத்திரிகையாளராக ஆகணும்கிற ஆசை உருவானது. அதற்குக் காரணம், என்னுடைய வீட்டு பக்கத்திலேயே பிரபலமான ஒரு வார இதழினுடைய அலுவலகம் இருந்ததுதான். அந்தப் பத்திரிகை அலுவலகம் இருக்கிற பக்கமாகத்தான், தினமும் பள்ளிக்கு போய்வருவேன். அந்தச் சாலையை கடக்கும்போதெல்லாம், ஒருநாள் இங்கே நாம வேலை பார்க்கணும்னு நினைச்சுப்பேன். பின்னாட்களில் எம்.ஏ. ஜர்னலிசம் முடிச்சுட்டு, அந்தப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கிருந்து என்னுடைய மீடியா பயணமும் ஆரம்பித்துவிட்டது!"

 

'வேட்கையின் நிறம்' நூலுக்கு வரவேற்பு எப்படியிருந்தது?

"நிரந்தரமான வேலை கிடைக்கிறதுக்கு முன்னாடி பத்திரிகைகளுக்கு ப்ரீலேன்சராக வேலை பார்த்தேன். அதனால, நிறைய சிறுகதைகள் எழுதுவதற்கான தளம் கிடைச்சது. பிறகுதான் கவிதைப் பக்கம் திரும்பினேன். என்னைப் பொறுத்தவரை, கவிதை என்பது சோம்பேறிகளுக்கான இடம். பல்வேறு இதழ்களில் என்னுடைய கவிதைகள் வெளியானது. அவற்றையெல்லாம் தொகுத்துதான் "வேட்கையின் நிறம்" என்கிற கவிதைத் தொகுதியை கொண்டுவந்தேன். அது பரவலாக பலரின் பாராட்டையும் கவனத்தையும் பெற்றது!" 

 

சக்தி பாரதி-உமா சக்தியாக மாறியது எப்படி?

"என்னுடைய முதல் புனைபெயரே சக்தி பாரதிதான். அந்தப் பெயரில்தான் கவிதைகள் எழுதிக்கொண்டிருந்தேன். பிறகு, பத்திரிகையாளராக மாறியபோதும் கூட சக்தி என்றுதான் எழுதினேன். என்னுடைய இயற்பெயர் உமா. அதனால உமா சக்தின்னு பெயரை மாத்திக்கிட்டு, எழுதிட்டு வர்றேன்." 

 

சமகாலத்தில் உங்களுக்கு நெருக்கமான கவிஞர்கள் பற்றி..?

"சமகாலத்தில் என்னோடு எழுதிக்கொண்டிருக்கிற நிறைய பேரை பிடிக்கும். குறிப்பாக கார்த்திகா, செ.பிருந்தா, மனுஷி, கு.உமாதேவி உள்ளிட்டோரின் கவிதைகளில் ஈடுபாடு உண்டு. மனுஷ்யபுத்திரன், தேவதேவன் என்னோட பேவரைட் கவிகள். அவர்களுடைய கவிதைகளை அதிகம் விரும்பி வாசிப்பேன். சில நேரங்களில் ஏதோ ஒரு கவிதை, அன்றைய நாளையே அழகாக்கிடும். அந்தக் கவிதைக்குள்ளேயே அமிழ்ந்து கிடக்கிற தருணங்களும் உண்டு!"

 

சீரியலுக்கு எழுதிய அனுபவம் உண்டா?

"நாதஸ்வரம்" தொலைக்காட்சி நெடுந்தொடரை இயக்குநர் திருமுருகன் இயக்கினார். அந்தத் தொடரின் திரைக்கதை வசனத்தை பாஸ்கர் சக்திதான் எழுதினார். சீரியலுக்கான காட்சிகளை எழுதுவதற்கு ஒரு டீமை அமைத்திருந்தார்கள். அதில் நான், சீனு, சரவணன் என்று மூன்று பேர் இருந்தோம். திருமுருகன் சார் ஸ்டோரி லைனை சொல்லுவாரு. அதைக் காட்சிகளாக பிரித்து, நாங்கள் எழுதுவோம். அந்தத் தொடருக்கான படப்பிடிப்பு முழுவதும் காரைக்குடியில்தான் நடந்தது. எல்லோருக்கும் ஓட்டலில் அறைகள் ஒதுக்கிக் கொடுத்திருந்தார்கள். ஒரு கவிதை, சிறுகதை, நாவல் எழுதுவது மாதிரியானது அல்ல சீரியலுக்கு எழுதுவது என்பது. அது ஒரு இமாலய வேலைன்னு தான் சொல்லுவேன். எழுதுகிற எல்லா காட்சிகளும் ஓகே ஆயிடாது. இருபத்தைந்து பக்கங்கள் எழுதினா, அதில் இரண்டு பக்கம் தான் ஓகே ஆகும். சீரியலுக்கு எழுதியது என்பது ஒரு குறுகிய காலம்தான். ஆனால், அந்த டீமோடு வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம்!"

 

இயக்குநர் மணிரத்னத்திடம் கிடைத்த பாராட்டு பற்றி..?

"இயக்குநர் மணிரத்னம் சாரோட மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் எல்லோரும் சினிமாவுக்காக உழைத்துக் கொண்டிருக்கும்போது, அப்படியே அதற்கு எதிர்பக்கத்தில் நான் வேலை பார்த்துட்டு இருப்பேன். இந்தியாவினுடைய மொத்த மீடியாவும் அண்ணாந்து பார்க்கிற அலுவலகம் அது என்பதால, எப்பவும் அங்கே பாஸிட்டிவ் வைபரேஷன் இருக்கும். அங்கிருந்து வெளியே வந்த பிறகு "திரைவழிப் பயணம் "என்கிற என்னுடைய உலக சினிமா குறித்த புத்தகத்தை எடுத்துட்டுப் போய் மணி சாரை பார்த்தேன். "வாழ்த்துகள்"னு சொன்னார். அதுதான் இப்போ வரைக்கும் எனக்கு உற்சாக டானிக்!" 

வெவ்வேறு தளங்களில் உற்சாகமாகத் தொடர்கிறது படைப்பாளி உமா சக்தியின் பயணம். அதன் இடைவெளியில் எடுக்கப்பட்ட பேட்டி இது என்பதை உணர்த்துகிறது அவரது வார்த்தைகள்..

 - கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles