கவிதைகள் சொல்லவா! கவிஞர் மகுடேசுவரன்

Thursday, December 1, 2016

தந்தையைப்போல்வர்

நவீன தமிழ் இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிஞர்களில் மகுடேசுவரனும் ஒருவர். தமிழின் பெருமை பேசும் இவரிடம் இருந்து 11 கவிதைத் தொகுதிகள், 5 கட்டுரைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. திருப்பூரில் வசிக்கும் இவர், ஆடை ஏற்றுமதி ஆலோசனை நிறுவனத்தை நடத்தி வருகிறார். 

'வாழ்க்கையை அதன் அத்தனை கசப்போடும் இனிப்போடும் எதிர்கொண்டவன். அவற்றில் பலவற்றைக் கவிதைகளின் வழியே கடந்தவன். சிலவற்றைக் கடக்கவே முடியாமல் தவித்திருப்பவன். சொந்த ரசனைகளின் உணர்கொம்புகள் கூர்மையடைந்ததால் இன்னும் உயிர்த்திருப்பவன். முழுமையை நோக்கி என்றும் முடிவடையாத யாத்திரையில் சென்றுகொண்டிருப்பவன்’ என்றே தனது வலைப்பூ பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் மகுடேசுவரன். 

இவரது ’புலிப்பறழ்’ எனும் கவிதைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது 'தந்தையைப்போல்வர்' எனும் தலைப்பிலான கவிதை. பெருவாரியான வாசகர்களை ஈர்த்த கவிதை இது.. 

என் தந்தையைப் பிரிந்து
வெகுநாள் இருந்தபடியால்
என்னை ஒரு பழக்கம் தொற்றிற்று.

எதிர்ப்படுவோரில்
எந்தையைப் போல்வர் யாரேனும் என்றால்
பார்த்து இன்புறுவது.

பிறகொரு கோடையில்
எந்தையின் சாவுச் செய்தியும்
வந்து சேர்ந்தது.

குடும்பத்தைப் பிரிந்து
வைராக்கியமாய் வாழ்ந்தவர்
மயங்கிச் சரிந்து இறந்தார்.

ஈமக் கடன்கள் முடித்துத்
திரும்பி வந்தோம்.

ஏற்கனவே பிரிந்திருந்த பிதா என்பதால்
அவர் மரணத்தின்பின்னும்
வேறொரிடத்தில் வதிகின்றார் என்றே
என் மனம் பழகியிருந்தது.
அத்துயர் கடக்க
அந்தப் பழக்கம் போதுமானதாயிருந்தது.

எதிர்ப்படுவோரில்
எந்தையைப் போல்வர் யாரெனத் தேடும்
விந்தைப் பழக்கம் அதன்பின் தீவிரமாயிற்று.

நகரப் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர்
அவர்போல் இருந்தார்
தந்தையைப்போலொரு
முகத்தினர் கண்டேன் என்று
இறும்பூது எய்தியிருக்குங்கால்
அவ்வோட்டுநர்
இருக்கையிலிருந்து இறங்கிக் குதித்தார்.
அப்போதுதான் கவனித்தேன்,
என் தந்தையைவிடவும்
ஒன்றரையடி உயரந்தாழ்ந்து இருந்தார்.
முகக்கம்பீரத்திற்குப் பொருந்தாத சிற்றுரு.
ஏமாற்றத்தோடு 
மீண்டும் என் தேடல் தொடர்ந்தது.

கட்டடச் சிறுவேலைக்கு
வந்த கொத்தனார்
எந்தையைப்போன்றே இருந்தார்.
மிரட்டும் அதே கண்கள்
அடங்காது பிரிந்த மீசை.
அவர் கீச்சுக்குரல்
எந்தையைப் போலில்லை என்பதால்
அம்மகிழ்ச்சியும் அன்றே தீர்ந்தது.

பின்னொரு நாள்
எரிநெய்ச் சாவடியொன்றில்
எரிநெய் நிரப்புங்கால்
அருகொருவர் வண்டியில் வந்தார்.

வெள்ளைச் சட்டை
வெள்ளை வேட்டி.
முன்தலை முடியுதிர்வு.
சாராயப்போதையில்
என் தந்தை எப்படியிருப்பாரோ
அதே தோற்றம்.

கண்டேன் கண்டேன்
எந்தையைப்போல் இன்றொருவர் கண்டேன் என்று
மனத்தில் களித்தேன் குதித்தேன்.

அவரையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்ததை
அவரும் கவனித்தார்.
அவர்பின்னேயே சென்றும் பார்த்தேன்.
என் தந்தையைப்போன்றே
வண்டியை விரைந்து செலுத்தினார்.
என்னால் விரட்ட முடியவில்லை.
எங்கோ சென்று மறைந்தார்
என் தந்தையைப் போன்றவர்.

பிறகு
நாள்தோறும் அதே நேரம்
அச்சாலைவழி சென்றேன்.
எதிர்பார்த்ததுபோலவே
என் தந்தையைப் போல்வர்
எதிர்ப்பட்டார்.
அவரை மனங்குளிரப் பார்த்தபடி 
கடந்து போவேன்.

இப்படியொருவரைக் கண்டேனென்று
தாயாரிடம் சொன்னேன்.
கேட்க கேட்க
அவர் கண்கள் ஈரமாயின.
'நானும் அவரைப் பார்க்க வேண்டும்.
என்னையும் அழைத்துச் சென்று
அவரைக் காட்டு' என்றார்.

தந்தைபோல்வரைத்
தாய்க்கு அடையாளம் காட்டும் நிகழ்வு.
ஒப்புக்கொண்டேன்.

அவர் வரும் நேரத்தில் 
அந்தச் சாலையில்
ஒரு மரத்தடியில் நின்றுகொண்டோம்.
என் தந்தையைப்போன்றவர் வந்தார்.

இதுநாள்வரை பேதுற்றவன்போல்
தன்னைப் பார்த்துச் செல்லும் இளைஞன்
இன்றோர் அம்மையுடன்
வந்து நிற்கின்றானே என்பதுபோல்
அவர் பார்வை இருந்தது. 

அவரும் என் தாயாரைப் பார்த்தார்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
பயந்தவர்போல் வண்டியை
விரைந்து செலுத்திச் சென்றுவிட்டார்.

தாயாரும் நானும் திரும்பினோம்.
'ஆமாம்டா உங்கப்பாவேதான்' என்றார்.
நான் ஒன்றும் சொல்லவில்லை.

அதற்கடுத்த நாள்முதல்
என் தந்தையைப்போன்றவரை
எங்கும் காணவில்லை.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles