வெங்கட் பிரபுவோட வெற்றி, எங்களோட வெற்றி! பெருமை பொங்கச் சொல்லும் டைரக்‌ஷன் டீம்!!

Thursday, December 1, 2016

நடிகர்களுக்கு மட்டுமல்ல; தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நெருக்கமான ஒரு இயக்குனர் வாய்ப்பது அரிதினும் அரிது. தமிழ் சினிமா உலகில் அப்படிப்பட்ட கல்யாண குணங்களோடு நடமாடும் சில இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அப்படிப்பட்டவருக்கு உதவிகரமாக இருப்பவர்களிடம், சில கேள்விகளை முன்வைத்தோம். 'எங்க டைரக்டர் மாதிரி வராது.' எந்தக் கேள்வியாக இருந்தாலும், வெங்கட் பிரபுவின் உதவியாளர்கள் சொல்லும் பதில்கள் இப்படித்தான் தொடங்குகிறது. 

"உதவியாளர்கள் மட்டுமல்ல, படத்துல பணியாற்றும் ஒவ்வொருத்தரும் இதைக் கட்டாயம் சொல்லுவாங்க" என்கிறார் வெங்கடேஷ். இவரது பேச்சில் சென்னை 28 இரண்டாவது இன்னிங்ஸ் அனுபவங்களை விட, வெங்கட்பிரபுவைப் பற்றிய விஷயங்களே அதிகமிருக்கிறது. ‘நளனும் நந்தினியும்' படத்தை இயக்கியிருக்கும் இவர், மீண்டும் வெங்கட்பிரபுவின் உதவி இயக்குனராக இந்தப் படத்தில் பணிபுரிகிறார். இது இவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறதா அல்லது வெங்கட் பிரபுவின் அரவணைப்புத் தன்மையைக் காட்டுகிறதா? அவரிடமே இந்தக் கேள்வியைக் கேட்டோம்.. 

 

“‘சரோஜா’ படம் மூலமாகத்தான் வெங்கட் பிரபுகிட்டே உதவி இயக்குநரா பணியாற்ற ஆரம்பிச்சேன். எப்போதும், எனக்கு சென்னை 28ல ஒர்க் பண்ணலைங்கற  வருத்தம் இருக்கும். அதை வெங்கட் பிரபுகிட்டே சொல்லும்போதெல்லாம், அவரு சிரிச்சிட்டு விட்டுடுவாரு. அதுக்கப்புறம் ‘நளனும்  நந்தினியும்’ படத்தை இயக்குற வாய்ப்பு கிடைச்சது. படம் இயக்கிட்டு, மறுபடியும் வி.பி.கிட்ட உதவியாளராகச் சேர்ந்துட்டேன். அப்போதான், சென்னை 28 இன்னிங்ஸ் 2 படத்தை இயக்க பிளான் பண்ணார். 

 

அவரு கூட சேர்ந்தபிறகு, திரும்பவும் எனக்கு பாசிட்டிவ் வைப்ரேஷன் கிடைச்சதுன்னு தான் சொல்லுவேன். அவருகிட்ட இருக்குற பாசிட்டிவிட்டி, கூட இருக்குற எல்லாருக்கும் கிடைச்சுடும். 'வெங்கட்பிரபு டீமா ரொம்ப ஜாலியா படம் எடுப்பாங்களே'ன்னு சினிமா வட்டாரத்துல எளிமையா சொல்லிட்டு போய்டுவாங்க. உண்மையில அப்படி இல்லை. எங்க டைரக்டர், எப்போதுமே யார் மனசும் கோணாம நடந்துக்கத்தான் பார்ப்பார். 

 

உதாரணத்துக்கு, இப்போ ஒரு லொகேஷன் ரெடி பண்றோம் அதுக்கு, அட்லீஸ்ட் மூன்று நாலு லட்சம் செலவு செஞ்சுருப்போம். கடைசி நேரத்துல ஆர்ட்டிஸ்ட் வரமுடியலைன்னு சொல்லிட்டாங்கன்னா, அவர் டென்ஷன் ஆக மாட்டார். அப்படி ஒரு சிச்சுவேஷன்ல யாராக இருந்தாலும் கோபப்படுவாங்க. ஆனால், ‘அந்த லொகேஷன்ல வேற யாரை வச்சு ஷாட் எடுக்கலாம், போட்ட காசை வீணாக்காம என்ன செய்ய முடியும்’னு உடனே பிளான் போட்டு முடிச்சுடுவாரு. அதனால, நாங்க ஜாலியாவே இருக்குற மாதிரி உங்களுக்குத் தெரியும்.

 

எங்களை மாதிரி உதவி இயக்குனர்களுக்கு, வெங்கட் பிரபு நல்ல ஸ்பேஸ் கொடுப்பாரு. தவறே செஞ்சாலும், ரொம்ப பெருசுபடுத்தமாட்டாரு. அதனாலேயே, தப்பில்லாம வேலை பார்க்கணும்னு எங்களுக்குத் தோணும். 

 

வெங்கட் பிரபு பற்றி ஒரு சுவாரசியமான விஷயம். நாளைக்கு எடுக்கப்போற ஷாட் பத்தி, முதல்நாள் தான் எங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணுவாரு. அப்போ, அதை எப்படி எடுக்கலாம்னு யோசிச்சு நல்ல மெருகேற்றுவாரு. அப்புறம் ஸ்பாட்டுக்கு போவோம். 'அந்த ஷாட்டை எடுக்க மூணு நாளாகும்'னு நினைப்போம்; ஆனால் அரை நாள்ல எடுத்து முடிச்சுடுவாரு. அவ்ளோ திறமையா பிளான் பண்ணுவாரு, எங்களுக்கெல்லாம் வியப்பா இருக்கும். 

 

இயக்குனரா ஒரு படத்துல பணிபுரிஞ்சிட்டு, திரும்பி நானேதான் வெங்கட் பிரபுகிட்ட உதவியாளரா சேர்ந்திருக்கேன். இதுக்கு, என்னோட சுயநலமும் ஒரு காரணம்னு சொல்லுவேன். ஏன்னா, அவரோட இருந்தா நான் பாஸிட்டிவா பீல் பண்ணுவேன். எப்படி ‘சரோஜா','கோவா', ‘மங்காத்தா’ வேலை பண்ணேனோ, அதே மாதிரி இதுலயும் கூடுதலா பொறுப்பேற்று பணியாற்றி இருக்கேன். 

 

எல்லாரையும் அரவணைச்சிட்டுப் போறதுனாலதான், வெங்கட் பிரபுவால இவ்ளோ பெரிய டீமை கட்டி மேய்க்க முடியுது. மற்ற இயக்குனர்கள் அவங்களுக்குன்னு ஒரு வட்டத்தை ஏற்படுத்திக்குவாங்க, அவங்களை நாம நெருங்கவே முடியாது. ஆனால் இவரு அப்படி இல்லை. அவரோட உதவியாளர்களாக, நாங்க இப்படி அட்ஜஸ்ட் செஞ்சுக்குறதைத்தான் பாடமா கத்துக்கறோம். 

 

வெங்கட் பிரபுவோட வெற்றி தான் எங்களுக்கு ஒரு அடையாளம். அப்போதான், எங்களுக்கு ஹீரோஸ்கிட்ட கதை சொல்லி படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கும். அவரோட வெற்றியை, நாங்க எங்களுக்குக் கிடைக்குற வெற்றியாகத்தான் பார்ப்பேன். சொந்த படம் கமிட் ஆகியிருந்தாலும், அவருக்கு உதவியா என்னைக் கூப்பிட்டாருன்னா, உடனே ஓடி வந்துடுவேன். ஏன்னா, அவரு கூட பணியாற்றுவதுன்னா எனக்கு அவ்ளோ பிடிக்கும்” என்று வார்த்தைக்கு வார்த்தை தன்னுடைய குருநாதர் வெங்கட் பிரபு பற்றி சிலாகிக்கிறார் வெங்கடேஷ்.

 

வெங்கடேஷைத் தொடர்ந்து, நம்மிடம் பேச ஆரம்பித்தார் உதவி இயக்குனர் சசிகுமார் பரமசிவம்.

“சென்னை 28 இன்னிங்ஸ் 2 கிரிக்கெட் கிரவுண்ட் சீக்வன்ஸை, தேனியில மழைபொழிய வச்சு எடுத்தா நல்லா இருக்கும்னு பிளான் பண்ணோம். திடீர்னு அந்த இடத்துல காத்து பிச்சிகிட்டு வர்ற ஆரம்பிச்சுடுச்சு; அதனால, படப்பிடிப்பை மதியம்  இரண்டு மணியோட நிறுத்திட்டோம். கொஞ்ச நேரம் கழிச்சு நல்ல மழை வந்து, படப்பிடிப்பு பிளான் செஞ்ச மாதிரி நடந்தது. இயற்கையே வழி வகுத்து எங்களை ஆசீர்வாதம் செஞ்ச மாதிரி நினைச்சுக்கிட்டோம்" என்றவாறே சில நாட்களுக்கு முன் நிகழ்ந்ததை அசைபோடுகிறார் சசிகுமார். படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை, மெதுவாக நம்மிடம் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார். 

 

”இந்த நேர்காணல் மூலமா, முதல்ல எங்க டைரக்டர் வெங்கட் பிரபுவுக்கு நன்றிசொல்ல கடமைப்பட்டிருக்கேன். ரசிகர்கள் மாதிரியே, உதவி இயக்குனர்கள் டீமும் டிசம்பர் 9க்காக ஆவலா காத்துட்டு இருக்கோம். ஏன்னா, சென்னை 28 எப்படி ப்ரென்ட்லியான படமோ, அதே மாதிரி எங்க குழுவும் ரொம்ப ஒற்றுமையா இருப்போம். எல்லாரோட வேலைகளும், குழுவில் இருக்குற எல்லாருக்கும் தெரியும். காஸ்ட்யூம்ல ஏதாவது சந்தேகம் வந்தா, நாங்க ஆர்ட் டைரக்டர்கிட்ட கூட கேட்டுப்போம். அப்படி, நாங்க எல்லாரும் எல்லா வேலைகளையும் பகிர்ந்துப்போம். 

 

என்னோட சொந்த ஊரு தென்காசியிலதான் படப்பிடிப்பு நடந்தது. முதல்ல, தேனியில ஒரு இடத்தைப் பார்த்தோம். அது, டைரக்டருக்கு அவ்வளவா பிடிக்கலை. கதை என்னான்னு எனக்குத் தெரியும், எந்த மாதிரியான இடம் அவரு எதிர்பார்க்குறாருன்னு புரிஞ்சிக்க முடிஞ்சது. நான் பிறந்து வளர்ந்த ஊர் தென்காசிங்கிறதால, சில இடங்களைக் காட்டினேன். அவருக்கு, அது ரொம்பப் பிடிச்சது. உடனே படப்பிடிப்பைத் தொடங்கிட்டோம். நாங்க ஷூட்டிங் எடுத்த இடத்துல, புலிகள் நடமாட்டம் நிறையா இருக்குன்னு பயமுறுத்தினாங்க. ஆனால், அங்கே வச்சிருக்கிற போர்டுலதான் புலியைப் பார்த்தோம். 

 

இந்தப்படத்துல, நான் காஸ்ட்யூம் டிபார்ட்மென்ட் பார்த்துகிட்டேன். எந்த சீனுக்கு, யாருக்கு என்ன காஸ்ட்யூம்னு, வாசுகி முன்கூட்டியே வெங்கட் பிரபுகிட்ட கேட்டு சொல்லிடுவாங்க. சென்னை 28 இரண்டாவது இன்னிங்ஸ்ல நடிகர், நடிகைகள் ரொம்ப நிறையா. அதனால, கன்டின்யூட்டி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கும். எங்க டீம்லயே, ப்ரேம்ஜிதான் ரொம்ப நல்லா ஞாபகம் வச்சிருப்பாரு. எந்த ஷாட்ல, என்ன காஸ்ட்யூம் போடுறாரோ, அதை நல்லா ஞாபகம் வச்சிருப்பார். ரீஷூட் போனாலோ அல்லது வேற ஒரு நாள் எடுத்தாலோ, அதை நல்லா ஞாபகம் வச்சிருப்பாரு. அது ரொம்ப ஹெல்ப்புல்லா இருக்கும். அதேபோல, டப்பிங்ல தன்னோட டயலாக்கை ஞாபகம் வச்சு பேசுறவரும் பிரேம்ஜி மட்டும்தான். 

 

இந்தப் படத்துல, நான் உதவி இயக்குனரா மட்டும் இல்லாம, நடிகராகவும் பணியாற்றி இருக்கேன். ஆமா, பதினோரு பசங்கள்ல நானும் ஒருத்தன். என்கிட்ட காஸ்ட்யூம் கேட்டிருப்பார் டைரக்டர். அதை எடுத்துட்டு வர போயிருப்பேன். அப்போ, ‘ஷாட் ரெடி, எங்கடா போறே’ன்னு கூப்பிடுவாங்க. அதனால, முழுக்க ஒரே ஓட்டமா இருக்கும்.

 

படத்துல வேலை பார்த்த எல்லோரும் ரொம்ப நட்போட இருந்தாங்க. பெரிய ஹீரோ அல்லது ஹீரோயின்னு, ஒரு ஆட்டிட்யூட் காட்டலை. இந்த சீனுக்கு இதுதான் காஸ்ட்யூம்னு கொடுத்துட்டா, ஷாட் நேரத்துல மேக்அப்போட ரெடியா வந்துடுவாங்க. அதனால, எங்களோட வேலை பெரிய சிரமமா தெரியலை.

 

படத்துல நடிச்ச நடிகர்கள் எல்லாரும், என்னை ஒரு உதவி இயக்குனரா பார்க்கலை; ஒரு நடிகராகத்தான் பார்த்தாங்க. நான் டைரக்டரோட  மானிட்டர் பார்த்திட்டு இருப்பேன். 'பீல்டி காலியாக இருக்கு, போய் நில்லுடா’ன்னு டைரக்டர் சொல்வாரு. எடிட்டிங் முடிஞ்சப்போ, ’என்னடா, படத்துல பீல்டிங் முழுக்க நீயே இருக்கே’ன்னு கலாய்ச்சாரு.

 

நான் காலேஜ்ல படிக்கும்போதுதான் ’சென்னை 28 பார்ட் 1’ வந்தது. அதுல நடிச்சவங்க எல்லாருக்கும், இன்னிங்ஸ் 2வில கல்யாணம் ஆகிடுச்சு. அவங்க வாழ்க்கையில நடக்குற சம்பவங்கள் தான் சென்னை 28 பார்ட் 2 கதை. இப்போ, எனக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. இந்தப் படத்தை, என் வாழ்க்கையோட கனெக்ட் செஞ்சு பார்க்கிறேன். அதேமாதிரி தான் ஆடியன்ஸும் தங்களோட வாழ்க்கையோட ரிலேட் செஞ்சு பார்ப்பாங்க. படம் கண்டிப்பா வெற்றியடையும்” என்று நம்பிக்கையோடு பேசுகிறார் உதவி இயக்குனர் சசிகுமார் பரமசிவன்.

 

வெங்கடேஷ், சசிகுமார் வரிசையில் இணைந்தார் இணை இயக்குனர் ஆர். திருநாவுக்கரசு. வெங்கட் பிரபுவோடு சேர்ந்து பயணிக்கும் இவர், ஒருகாலத்தில் கங்கை அமரனின் உதவியாளராக இருந்தவராம். இதைக் கேட்டவுடன், நமது ஆச்சர்யம் விண்ணைத் தொட்டது. கேள்வியைக் கேட்கும் முன்னரே பேசத் தொடங்கினார் திருநாவுக்கரசு. 

 

“தேனியில சென்னை 28 இரண்டாவது இன்னிங்ஸ் படப்பிடிப்பு நடந்திட்டு இருக்கும்போது, திடீர்னு எனக்கு நெஞ்சு வலி வந்திருச்சு. உடனே, பக்கத்துல இருக்குற ஆஸ்பத்திரியில என்னைக் கொண்டுபோய் சேர்த்துவிட்டாரு. டாக்டர்கள் உடனே ஆபரேஷன் செய்யணும்னு சொல்லிட்டாங்க. எதைப் பற்றியும் யோசிக்காம, அந்த ஆஸ்பத்திரியில பணம் கட்டி ஆபரேஷன் செய்ய ஏற்பாடு செஞ்சாரு வெங்கட் பிரபு. அதோட இரண்டு மாதம் லீவ் கொடுத்து, நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு வந்திடுங்கன்னு சொன்னாரு. இப்படி ஒரு நல்ல மனசு யாருக்குமே வராது. அதுக்காக, நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்” என்று மிகவும் நெகிழ்ச்சியோடு பேசத் தொடங்குகிறார் சென்னை 28 இன்னிங்ஸ் 2 படத்தின் இணை இயக்குனர் ஆர்.திருநாவுக்கரசு. கரகாட்டக்காரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பூசாரியாக நடித்தவர் இவர்தான். 

 

“1977ல சினிமாத்துறைக்குள்ள  நுழைஞ்சேன். அப்போ, நான் ஒரு இயக்குனர்கிட்ட உதவியாளராக வேலை பார்த்துட்டு இருந்தேன். அவரு ரொம்ப கண்டிப்பானவர். ஆனா, உதவியாளர்களைச் சரியா நடத்த மாட்டாரு. எனக்கு ரொம்ப மனஉளைச்சலா இருக்கும். அந்த இயக்குனரை விட்டு வெளில வரவும் முடியல. ஏன்னா, இவரை விட இன்னும் மோசமானவங்ககிட்ட மாட்டிக்கிட்டா என்ன செய்றதுன்னு பயந்துட்டு இருந்தேன். என்னோட நல்ல நேரம், 'கங்கை அமரன் படம் இயக்கப் போறாரு; ஆட்கள் எடுக்குறாரு'ன்னு சொன்னாங்க. சரி, அவருகிட்ட போய் சேரலாம்னு போனேன். அவருகூடதான், நான் இப்போவரைக்கும் பயணிச்சிட்டு இருக்கேன். ரொம்ப தங்கமான மனுஷன். அவரோட கோபத்தின் அதிகபட்சம், ‘என்னடா இது?’ன்னு சொல்லுறதுதான். அதுக்குமேல, உதவியாளர்களை மட்டமா பேசமாட்டார். கங்கை அமரனோட அந்த மனசுதான் வெங்கட் பிரபுவுக்கும் வந்திருக்கு.

 

வெங்கட் பிரபு தன்னோட உதவியாளர்களை, சக மனிதர்களாகத்தான் நடத்துவார். உதாரணத்துக்கு ஒரு சம்பவம் சொல்றேன். எங்க குழுவுல மணிவண்ணன்னு ஒரு உதவி இயக்குனர் இருக்காரு. சென்னை 28 ஷூட்டிங் ஸ்பாட்ல ஏதோ தவறு நடந்திடுச்சு. அதனால, அவரு ரொம்பவே பயந்துட்டாரு. அதோட மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. இது வெங்கட் பிரபு மேல இருக்குற பயம்னாலே இல்லை, அவரு மேல இருக்குற மரியாதை. டைரக்டர் நமக்கு நல்ல சுதந்திரம் கொடுத்திருக்காரு, அவரு மனசு கோணுற மாதிரி நடந்துக்கிட்டோமேன்னு நினைச்சு அவரு மயங்கிட்டாரு. அப்படி ஒரு நல்ல மனிதர் வெங்கட்பிரபு. 

 

சின்ன வயசுலேருந்து அவரைப் பார்த்துட்டு இருக்கேன். அவரோட இந்த நல்ல பண்புக்கான  காரணம், கங்கை அமரனோட வளர்ப்புதான். கங்கை அமரனுக்கு தெரியாத ஒரு விஷயம் வெங்கட் பிரபுகிட்ட ஒண்ணு இருக்கு, அது என்னன்னா, வெங்கட் பிரபு ரொம்ப நல்ல நடிகர். எங்க கத்துக்கிட்டாரு, எப்படி கத்துக்கிட்டாருன்னு தெரியாது. ஆனால் பிரமாதமா நடிப்பாரு.

 

வெங்கட் பிரபு படத்துல நடிக்கிறவங்க, அவரு சொல்லிக்கொடுக்குறதைத் திருப்பி செஞ்சுட்டாலே போதும். 'அவரு படத்துல நடிக்குறது ரொம்ப கஷ்டம். என்னால அந்த அளவுக்கு பர்பார்ம்  செய்ய முடியல'ன்னு பெரிய நடிகர்கள் எல்லாம் சொல்லி இருக்காங்க,

 

இதுல நடிச்சிருக்கிற ஜெய், வைபவ், விஜய் வசந்த், அஜய் மாஸ்டர்னு எல்லாருமே ரொம்ப அருமையா பெர்பார்ம் செஞ்சிருப்பாங்க. புதுமுகம் சனா, வெங்கட் சொல்லிக் கொடுக்குறதை உள்வாங்கிட்டு நடிச்சிருக்காங்க. கொடுக்குற டயலாக்கைத் தாண்டி, நிறையா பக்கம் பக்கமா பேசுவாரு சிவா. அதைக் கைதட்டி ரசிச்சு சிரிப்பாரு வெங்கட் பிரபு; அதோட பாராட்டவும் செய்வாரு. 

 

பிரேம்ஜி பத்தி சொல்லியே ஆகணும். சின்ன வயசுலேருந்தே, நான் அவரை பார்க்குறேன், இயல்பிலேயே அவரு ரொம்ப அமைதி. அவரு காமெடியா நடிக்குறப்போ, எனக்கே ஆச்சரியமா இருக்கும். இந்தத் தம்பியா இப்படி பேசுறாருன்னு. நடிப்புன்னு வந்துட்டா, அவரு அண்ணனுக்கு மேல.. பின்னிடுவாரு. வேலை விஷயத்துல ரொம்ப சின்சியர்.

 

நல்ல இயக்குநரோட ஸ்பெஷாலிட்டியே, சொல்ல வந்த விஷயத்தை போரடிக்காம சுவாரசியமா சொல்லணும். அந்தத் திறமை, வி.பி.கிட்ட அதிகமா இருக்கு. சமீபத்துல சில காலேஜ் பசங்கள ’மீட்’ பண்ணேன். அவங்ககிட்ட, ’உங்களுக்குப் பிடித்த இயக்குனர் யாரு’ன்னு கேட்டேன். எல்லோரும் கோரஸா, ’வெங்கட் பிரபுதான்’னு சொன்னாங்க. காரணம் கேட்டதுக்கு, ’அவரு படங்கள் எல்லாம் ரொம்ப எளிமையாகவும் ஜாலியாகவும் இருக்கும்’னு சொன்னாங்க. 

 

சென்னை 28 பார்ட் 1 ல நடிச்ச அதே நடிகர்கள், மற்றும் கூடுதலான நடிகர்களை, பார்ட் 2 வில கட்டி இழுத்துட்டு வந்திருக்காரு. இதுல எந்த ஒரு நடிகரையோ, அல்லது டெக்னீஷியன்ஸையோ வி.பி. விட்டுக்கொடுக்கவே இல்லை. இன்னும் சொல்லப்போனால், இன்னிக்கி நான் உங்க முன்னால உயிரோடு உட்கார்ந்து பேட்டியை கொடுக்குறதுக்கு முக்கியமான காரணமே வெங்கட் பிரபுதான்.”  

 

பேச்சை முடிக்கும் முன்னரே, அடுத்தடுத்த வார்த்தைகள் வெளிவராமல் தடுமாறினார் திருநாவுக்கரசு. அந்தக் கணத்தில், வெங்கட் பிரபு மீதான அவரது மரியாதையும் நன்றியும் வெளிப்பட்டது. இதுமாதிரியான மனிதர்கள் பக்கபலமாக இருக்கும்போது, எங்கும் எப்போதும் வெற்றியே கிட்டும். ஒரு இயக்குனராக, அந்த வரம் வெங்கட்பிரபுவுக்கு வாய்த்திருக்கிறது. 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles