கலைஞர்களான நாங்க, இங்கே பெருசா சம்பாதிக்க முடியாது! - நடிகை பூஜா தேவரியா

Thursday, December 1, 2016

கோலிவுட்டின் திறமையான நடிகைகளில் இவரும் ஒருவர். சினிமா நடிப்பு மட்டுமல்லாமல், நாடகக்கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், பல மொழி பேச்சாளர் என்று பல திறமைகள் கொண்டவர். ராஸ்கல்பாபா யூடியூப் சேனல் மூலம் பல புதிய முயற்சிகளை மேற்கொள்பவர். இந்தப் பெருமைகளுக்கு உரிமையாளர், நடிகை பூஜா தேவரியா. ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தனது நாடக அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார். 

“சென்னையில நிறைய நாடகக் குழுக்களோட பணியாற்றி இருக்கேன். ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதத்துல இயங்கிட்டு வருது. அதாவது, அதுக்குன்னு ஒரு தனி ஸ்டைல் இருக்கு. என்கூட வேலை பார்க்குறவங்க எல்லாரும், முழு நேர வேலையா நாடகத்துறைக்கு வர்றது இல்லை. வேறுவேறு துறைகள்ல இருந்துதான் வர்றாங்க. ஏன்னா, கலைஞர்களான நாங்க  இங்கே பெருசா சம்பாதிக்க முடியாது. எங்களுக்கெல்லாம் அவ்ளோ சுலபமா நிதி உதவி கிடைக்கிறது இல்லை. ஆனாலும், நாங்க மனப்பூர்வமா ஒண்ணா வேலை பார்க்குறோம். எங்க குழுவில  இருக்குறவங்க, அவங்க ஆபீஸ் வேலைகளையெல்லாம் முடிச்சிட்டு ’ரிஹர்ஸ்’ செய்ய வருவாங்க. எங்களுக்கு, ’காலையில ஒன்பது மணியிலிருந்து மாலை நான்கு மணிவரைக்கும்’னு நேரம்லாம் கிடையாது. ஒவ்வொரு நொடியும் நாடகத்தைப் பற்றிதான் சிந்திப்போம். அதுக்காக உழைப்போம்.”

 

மேடை நாடகங்களில் ஏதேனும் தவறு ஏற்பட்டால், எப்படிச் சமாளிப்பீர்கள்?  

“ஒரு நாடகத்தை மேடையேற்றுவதற்கு முன், பலதடவை ஒத்திகை பார்ப்போம். இரண்டு மாதத்திலிருந்து 6 மாதம் வரைக்கும் பிராக்டீஸ் நடக்கும். இத்தனைக்கு அப்புறம் கூட, மேடை நாடகத்தில் தவறுகள் நடக்கத்தான் செய்யும். எங்களுக்குள்ள சில சங்கேத வார்த்தைகள் இருக்கும். அதை டயலாக் மறந்தவங்க, மேடையில சொல்லுவாங்க. நடிக்குறவங்க அதைப் புரிஞ்சிகிட்டு, அந்த சிச்சுவேஷனை சமாளிப்போம். நாங்க சமாளிக்குறதும் ஆடியன்ஸுக்கு தெரியாது. அதனால தவறுகளை பெருசா எடுத்துக்குறது கிடையாது.”

 

எந்த மொழிகளில் நாடகம் நடத்துகிறீர்கள்?

“நாங்க மேடையேத்துற நாடகத்தோட கருத்துக்களை ‘க்லோக்கல்’னு சொல்லுவோம். அதாவது, குளோபல் ஆடியன்ஸுக்கு லோக்கல் கருத்துக்களை  சுலபமாக எடுத்துச் சொல்லுவோம். சினிமா, அரசியல் போன்ற விஷயங்களை இளைஞர்களுக்குக் கொண்டு செல்வோம். சமீபத்துல ஒரு நாடகம் போட்டோம், அதுல ஆங்கிலம், தமிழ், கன்னடம், தெலுங்கு இப்படி எல்லா மொழிகளும் இருந்தது. அதுக்கு நல்ல வரவேற்பும் கிடைச்சது.”

 

பார்வையாளர்கள், உங்கள் நாடகங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?

“எங்களுக்கு பாசிட்டிவான ரியாக்‌ஷன்தான் கிடைச்சிருக்கு. உதாரணத்துக்கு, இன்டர்நேஷனல் புரொடக்‌ஷன் நம்ம நாட்டுல நாடகம் போடுறாங்கன்னா, ’வித்தியாசமா இருக்கே, என்னன்னு பார்க்கலாம்’னு சொல்லமாட்டோமா? அதேமாதிரிதான் நம்மளோட கலாச்சாரம் வெளிநாட்டில் இருக்குறவங்களை ஈர்க்குது. நமக்கு நல்ல வரவேற்பும் கிடைக்குது.”

 

நமது கலாச்சாரத்தை வெளிநாட்டினர் எவ்வாறு புரிந்து கொள்கிறார்கள் ?

“கலை என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு மொழி! எல்லாவிதமான மக்களுக்கும், நாம சொல்ல வந்ததை எளிதாகக் கொண்டுசேர்க்கலாம். உதாரணமா, காக்கா வடை திருடிட்டுப்போன கதை நம்ம ஊர்ல எல்லாருக்கும் தெரியும். வெளிநாட்டுல வடைக்குப் பதிலா டோனட்னு வச்சு, இந்தக் கதையை சொல்லுவாங்க. எல்லா நாடுகள்லயும் எல்லா பாட்டிகளும் தன்னோட பேரப்பசங்களுக்கு இந்தக் கதையைத்தான் சொல்லியிருக்காங்க. அதனால, எல்லா மக்களுக்கும் மொழி வேறயா இருந்தாலும் பீலிங் ஒண்ணுதான். அதனால நாம சொல்ல வந்த கருத்துக்களை அவங்க புரிஞ்சுக்குறாங்க.”

 

மறக்க முடியாத அனுபவம்...

“ ‘மை நேம் இஸ் சினிமா’ன்னு என்னோட முதல் நாடகம், அதுக்காக மிருதங்கம் ஏற்பாடு செஞ்சிருந்தோம். என்னோட டயலாக் தான், மிருதங்கம் வாசிக்குறவங்களுக்கு க்யூ. ஆனால் நான் முதல் இரண்டு பக்க டயலாக்கை மறந்துட்டேன். அது யாருக்குமே தெரியலை. இன்னும் சொல்லப்போனால், இந்த நாடகம் நிறைய விருதுகளை குவிச்சிருக்கு.”

 

நாடகங்களில் உங்களுக்குப் பிடித்த வகை?

“எனக்கு நாட்டிய நாடகம் ரொம்ப பிடிக்கும்.”

 

சினிமா வருகைக்குப் பிறகு நாடகங்களுக்கான மவுசு எப்படி இருக்கிறது? 

“எப்படி இரண்டு விளையாட்டுகளை கம்பேர் செய்யக்கூடாதோ, அதே மாதிரி சினிமாவையும் நாடகங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கவே கூடாது. என்னோட கண்ணோட்டத்தில, இரண்டுமே வெவ்வேற ஊடகங்கள். சினிமாவைப் பொறுத்தவரை எடிட்டிங், சவுண்ட் இப்படி பல லேயர்கள் இருக்கு. நாடகம் அப்படி இல்லை, நேரடியான பர்பார்மன்ஸ்தான். அங்கே நீங்க எந்த மாதிரியான எமோஷனை வெளிப்படுத்தறீங்களோ, அதுதான் நிக்கும். எனக்கு ஒரு சமயம் தொடர்ந்து 22 நாள் நடிக்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு நாளும் ப்ரெஷ்ஷா தான் ’பீல்’ பண்ணேன். சினிமா, நாடகம் ரெண்டுமே அந்த வழியில வளர்ந்திட்டுதான் இருக்கு.”

 

நாடகங்களில் நடிப்பது, சினிமாவில் நடிப்பதற்கு உதவியாக இருக்கிறதா? 

“இருக்குங்க! ஆனால் ரெண்டுமே வெவ்வேற நடிப்புதான். எப்போதுமே, அதை ஒப்பிட்டுப் பார்க்க மாட்டேன். நாடகத்துல நடிக்கும்பொழுது, நான் ஒரு சினிமா ஸ்டார் அப்படிங்கிறதை மறந்துடுவேன். அதேமாதிரி, ஷூட்டிங்ல என்னோட ஸ்டேஜை மறந்துடுவேன். எனக்கு என்ன  பாத்திரம் கொடுத்தாங்களோ, அதுவா மாறி என்னோட முழு நடிப்பையும் செலுத்த ஆரம்பிச்சுடுவேன்.”

 

நாடகத்துறைக்கு வர விரும்புபவர்களுக்கு, நீங்க சொல்லும் ஆலோசனை என்ன?

“நாடகம்னு எடுத்துக்கிட்டா, அதுல நிறைய விதங்கள் இருக்கு. அதாவது நடிப்பு, ஸ்க்ரிப்ட்னு பல வகை. எல்லாத்தையும் முயற்சி செஞ்சு பாருங்க. உங்களுக்கு எது சரின்னு தெரியும். அதையே முடிவு பண்ணிக்கங்க. முயற்சி செய்யாம, இது நல்லாயிருக்கு அது நல்லாயில்லைன்னு முடிவு செய்யாதீங்க” என்ற வேண்டுகோளோடு தன் பதிலை முடித்துக்கொண்டார் பூஜா. தெளிந்த நீரோடை போல, பூஜாவின் அனுபவத்தில் இருந்து வெளியாகும் பதில்கள் பாய்ந்தோடுகின்றன. அவர் நாடகத்திலும் சினிமாவிலும் மேலும் பல உயரம் தொட, வாழ்த்திவிட்டு விடைபெற்றோம்!!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles