கவிதைகள் சொல்லவா - கவிஞர் பச்சியப்பன்

Wednesday, August 31, 2016

திருவண்ணாமலை மாவட்டம் பெரிய அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர், கவிஞர் பச்சியப்பன். ‘உனக்குப் பிறகான நாட்கள்’, ‘கல்லாலமரம்’, ‘மழைப் பூத்த முந்தாணை’, ‘தும்பிகள் மரணமுறும் காலம்’, (கிராமிய உன்னதங்கள் சிதையுறும் காலத்தின் மனப்பதிவு ) ‘தம்பி நான் ஏது செய்தேனடா’ (பாரதி குறித்து பாரதிபுத்திரனுடன் ஒரு நேர்காணல்) உள்ளிட்டவை அவர் எழுதிய படைப்புகள். இவருடைய ‘ஏரி’, ‘பூ’, ‘மலை’, ‘பனை’ உள்ளிட்ட கவிதைகள், பிரபல தொலைக்காட்சியில் குறும்படங்களாகத் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகியுள்ளது.

சிறந்த கவிதைகளுக்கான ‘கவிஞர் சிற்பி விருது’, ‘எஸ்.பி.ஐ. விருது’, ‘திருப்பூர் தமிழ்ச்சங்க விருது’, ‘கவிதை உறவு விருது’ உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார் பச்சியப்பன். சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில், தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார் இவர். கிராமியத்தின் அழகியலையும் அம் மக்களின் வாழ்க்கையையும், ரத்தமும் சதையுமாகத் தன் கவிதையின் வழியே வெளிப்படுத்தியதன் காரணமாக, கவிஞர் பச்சியப்பன் நவீன இலக்கியத்தில் முக்கிய கவி ஆளுமையாக அறியப்படுகிறார்!

 

கையோடு வராத கடல்

கூடடையும் பறவை போல
நீயடையும் கடற்கரையில்
உனைச் சந்தித்தேன்
ஒரு மாலைப்பொழுதில்

 

வழிகள் பல கடந்த
விடரில் யானும்
கரையேறிய மரக்கலம்போல
இளைப்பாறும் நீயும்
இருள் விரிந்து
குளிர் மணக்கும்
மாலைப்பொழுதுமாய்
மிக அழகானது இப்பூமி

 

இக்கடற்கரை
எதுவரை முடிகிறது என்கிறேன்
காற்றிலலையும் கூந்தலொதுக்கி
என் கண்ணில் தொடங்கி
உன் கண்ணில் முடிகிறது
என்கிறாய்

 

கடலெரியும் தீக்கொழுந்து
அலையெனத் தகிக்கிறது கண்ணே
நீயோ
எவரோ விட்டுப்போன
கொண்டை ஊசியையும்
உதிர்ந்து கிடக்கும் டிசம்பர் பூக்களையும்
புறமொதுக்கி
மென்சிரிப்பு சிரிக்கிறாய்

 

மணலாடும் நண்டொன்று
நம்மிடையே கடக்கிறது
தள்ளுவண்டிக்காரன் எழுப்பும்
மணிச்சத்தம்
மணல்வெளியை நெளிக்கிறது
தூர இருட்டின் அடர்வனத்தில்
ஒரு பூவையும் காணோம்

 

கடற்பறவையின் சிறகொலி
நியான் வெளிச்சத்தை அசைக்கிறது

 

தூரக்கப்பலின் காத்திருப்பு
மனதில் இறக்க இறக்க
கணக்கிறது

 

மணலில் செய்த
பூஞ்சிற்பம் காட்டி
உற்சாகமடைகிறான் மணிக்குழந்தை

 

காற்றின் ஈரம் கூடக்கூட
உன் இமை விளிம்பில்
கிளிஞ்சல் பொறுக்குகிறேன் நான்

 

கடல்தோன்றி
மணல் சேர்த்த காலம்தொட்டு
பதிந்த எல்லாச்சுவடுகளையும் கலைத்து
புதிதாய் எழுதினோம்
நம் சுவடுகளை

 

கடல்கடைந்த அமுதம்
இதழ்களில்பொங்க
ஐந்துதலை வாசுகிமீது
புரண்டு படுக்கிறது
என் ஜென்மம்

 

கையிறறுந்த வாளியாய்
கரம் பிரித்து விடைபெற்றோம்

 

உடனைழைத்துச் செல்லாமல்
தனைவிட்டுப்போவதாய்
கடல் அரற்றுவதை
தாங்க இயலவில்லை சகி

 

கைகளில் ஒட்டிய
மணல்துகளை
தட்டுவதற்கு மனம் பதறுகிறதடி

 

கடலிலிருந்து பிரிந்துபோகும்
காற்று போலவும்
காற்றுவழியேகும்
மேகம்போலவும்
மேகமிடை நகரும்
நிலவு போலவும்
நிலவொளியில்
நிழல் நகர்த்திப்போகும் நம்மைப்போலவும்
பிரிதலுக்காகவே படைக்கப்பட்டதோ
இந்தக்கடல்..

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles