இது விஜய் சேதுபதிக்காக எழுதிய திரைக்கதை! - ‘பயம் ஒரு பயணம்’ இயக்குனர் மணி ஷர்மா 

Wednesday, August 31, 2016

தற்போது கோலிவுட்டை ஆட்டிப்படைக்கும் பேய்ஜுரம் நம்மை இன்னும் துரத்திக்கொண்டுதான் இருக்கிறது. இப்பொழுது வெற்றிகரமாகத் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் ‘பயம் ஒரு பயணம்’ அதற்கு விதிவிலக்கல்ல. ’இந்தப் படம் உருவானதன் பின்னணியில் திகில் அனுபவங்கள் ஏதாவது இருக்கிறதா’ என்று இயக்குனர் மணி ஷர்மாவிடம் கேட்டதற்கு, ”என்னோட குழுவை கூட்டிட்டு வரேன். மொத்தமா கேளுங்க பாஸ்” என்றார். அவர் சொன்னது போலவே, படத்தில் பணியாற்றிய அத்தனை பேருமே வெவ்வேறு ஆளுமை உடையவர்கள்.

படத்தின் நாயகன் டாக்டர் பரத் ரெட்டி, தலைசிறந்த இதய சிகிச்சை நிபுணர். பன்மொழி பேசும் வல்லவர். மருத்துவர், நடிகர் மட்டுமல்லாது, அவர் ஒரு சிறந்த தொகுப்பாளரும் கூட என்பதை, ‘பயம் ஒரு பயணம்’ காணொளியில் காணலாம். 

 

படத்தைப் பற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார் டாக்டர் பரத். ”பயம் ஒரு பயணம் படப்பிடிப்பின்போது, ஒரு டெக்னீஷியன் மாரடைப்பால இறந்துட்டார். அந்த சம்பவம், எங்க எல்லோரையும் மனஅழுத்தத்துல தள்ளுச்சு. அதை நினைச்சாலே, இன்னிக்கும் எங்க எல்லாருக்கும் திகிலாயிருக்கும். படப்பிடிப்பு மூணார்ல நடந்துச்சு. அங்கே எப்போ மழை பெய்யும், எப்போ சாதாரணமாக இருக்கும்னு சொல்லவே முடியாது. அதோட, அங்க ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். இதனால அட்டைபூச்சிங்க தொல்லை ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். இதையெல்லாம் கடந்துதான், நாங்க இந்தப் படப்பிடிப்பை நடத்தினோம். படத்தோட பெயருக்கு ஏற்ற மாதிரி, எங்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திகிலான அனுபவம் காத்திட்டு இருந்தது. 

 

இதுவரைக்கும், நான் சின்னச்சின்ன ரோல்ல தான் நடிச்சிட்டிருந்தேன். இந்தப் படத்துல, என்னை நம்பி ’லீட் ரோல்’ கொடுத்திருக்கார் இயக்குனர். நியாயமா, இதுல விஜய் சேதுபதி நடிச்சிருக்கணும். என்னோட அதிர்ஷ்டம், எனக்கு இந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. படத்துல, டைரக்டர் சொன்னபடி செஞ்சிருக்கேன். நல்ல ரிவ்யூசும் வந்திருக்கு. அடிப்படையில, நான் ஒரு கார்டியாலஜிஸ்ட். எங்க அம்மாவுக்கு, என்னை டாக்டர் ஆக்கணும்னு ஆசை. எனக்கு நடிப்புலதான் ஆர்வம். அதனால, அவங்க ஆசைக்காக மருத்துவம் படிச்சு டாக்டராகிட்டேன். இப்போ படங்கள்ல நடிச்சு, என் ஆசையையும் நிறைவேத்திக்கிறேன்” என்றவரிடம், ’அப்போ, நீங்க பேய் இருக்குன்னு  நம்புறீங்களா?’ என்றோம். “பேய் மீது நம்பிக்கை இல்லைங்க. ஆனால் எனக்கும் மேல சூப்பர் பவர் ஒண்ணு இருக்குன்னு நம்புறவன் நான்” என்று பரத்ரெட்டி பேச, அவரையே திகிலோடு வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் நாயகி மீனாட்சி தீக்‌ஷித்.

 

‘பயம் ஒரு பயணம்ல நீங்க என்ன ரோல் பண்ணியிருக்கீங்க’ என்றதும், மடைதிறந்த வெள்ளம் போல வாய்திறந்தார் மீனாட்சி. “பயம் ஒரு பயணம்ல, நான் பரத்துக்கு மனைவியாக நடிச்சிருக்கேன். இந்தப் படத்துல, என் கேரக்டர் பெயர் அனு. இதுல நடிக்கும்போது, என் குடும்பத்தை ரொம்ப மிஸ் பண்ணேன். ஏன்னா, இதுல ஒரு இல்லத்தரசியாக நடிச்சிருக்கேன். சில சீன்கள்ல நடிச்சப்போ, சின்ன வயசு ஞாபகம் வந்தது. எங்கம்மா என்னவெல்லாம் சொல்லுவாங்க, நான் எப்படி இருந்தேன் என்று பல நினைவுகள் வந்துபோகும். இதுவரைக்கும், நான் கல்லூரி செல்லும் மாணவியாகத்தான் நடிச்சிருக்கேன். இந்தப் படம் எனக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருக்கு. 

 

படத்தோட க்ளைமாக்ஸ் சீன்ல, முகத்துல ரத்தமெல்லாம் வடியுற மாதிரி மேக்கப் போட்டு ரெடியாயிருப்போம். டைரக்டர் ’ஷாட் ரெடி’ன்னு சொன்னதும், திடீர்னு மழை கொட்டும். மேக்கப்பெல்லாம் கலைஞ்சுடும். மறுபடியும் மேக்கப் போடுவோம், நல்லா ஷூட் போய்ட்டு இருக்கும்போது, திரும்பவும் மழை வந்துடும். க்ளைமாக்ஸ் ஷாட் எடுக்கிறதுக்குள்ள யூனிட்டே ஒரு வழியாகிட்டோம்” என்று மீனாட்சி சொல்லிமுடிக்கும் முன்னே, படத்தின் இசையமைப்பாளர் பிரசாத் தன்னுடைய அனுபவங்களைக் கொட்டினார். 

 

“இந்தப் படத்துல மொத்தம் நாலு பாடல்கள். ஓவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம். இதுக்காக ட்யூன் போட்டு வச்சிருந்தப்போ, சென்னையில பெரிய வெள்ளம் வந்துருச்சு. என்னோட ரிக்கார்டிங் ஸ்டூடியோவே மூழ்கிப்போச்சு. அப்புறம், என்னோட சித்தப்பா இசையமைப்பாளர் மணிஷர்மாதான் உதவி செஞ்சார். அவரோட ரிக்கார்டிங் தியேட்டர்லதான், நான் ட்யூன்ஸை ரெடி பண்ணேன். அப்போ எனக்கு மோட்டிவேஷனே, இந்தப் படத்தோட டைரக்டர் மணிஷர்மாதான். எப்போ நான் உடைஞ்சு போனாலும், அவருக்கு போன் போட்டு பேசுவேன். அவரு சொல்ற வார்த்தைகள் எனக்கு ஊக்கமளிக்கும். அப்புறம் ப்ரெஷ் ஆயிடுவேன்” என்று முடித்துக் கொண்டார். 

 

’ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயம் சொல்லி பயமுறுத்தறாங்களே’ என்றவாறே, இயக்குனர் மணிஷர்மாவிடம் கேட்டோம். ”கருவிலே உருவானதுமே, நம்ம பயணத்தைத் தொடங்கிடுறோம். எல்லோருக்கும், வாழ்க்கையிலே பயம்னு ஒண்ணு வரும். அந்தப் பயத்தை, நாம எப்படிக் கடந்து போறோம்கிற ஐடியாவுல உதிச்சதுதான் இந்தக் கதை”என்றவரிடம், ’உங்களது குடும்பக்கதை சொல்லுங்க’ என்றோம். 

 

“எனக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்காங்க. இதுவரைக்கும், சினிமாவுல எந்த பிரேக்கும் கிடைக்கல. ஒரு கட்டத்துல, அவங்களுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட முடியாம இருந்திருக்கேன். அவ்ளோ திகிலான பயணத்தை, நான் கடந்திருக்கேன். சினிமாவில பதினைந்து வருஷமா இருக்கேன். ‘பயம் ஒரு பயணம்’ ஸ்க்ரிப்ட் எழுதி அஞ்சு வருஷமாகிடுச்சு. விஜய் சேதுபதியை மனசுல வச்சுதான், இந்தக் கதையை ரெடி பண்ணேன். ஆனால், அவரோட டேட்ஸ் கிடைக்கல. அதனால பரத்தை அப்ரோச் பண்ணி, இந்தக் கதையைச் சொன்னேன். அவரும் ’ஓகே’ பண்ணிட்டார். படமும் இப்போ வெற்றிகரமா ஓடிட்டிருக்கு” என்று மகிழ்ச்சியானார் மணிஷர்மா. இந்தப் படத்தில் பேயாக நம்மை மிரட்டியிருப்பவர் நடிகை விசாகாசிங். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில், தமிழ்ரசிகர்களை ஜொள்ள வைத்தவர்.  

 

’ஹோம்லியா இருக்கீங்க, எதுக்குங்க இந்த பேய் கெட்டப்?’ என்றதும், பட்டென்று விசாகாவிடமிருந்து பதில் வருகிறது. “ஏன், நான் பேய் மாதிரி பயமுறுத்த முடியாதா? எப்போ நடிக்க வந்துட்டோமோ, அப்பவே எல்லாவிதமான ரோல்கள்ல நடிக்கத் தயாரா இருக்கணும். நவரசத்தை காட்டுறதுதான் நடிப்புன்னு சொல்லுவாங்க. இந்த மாதிரி சவாலான கேரக்டர்கள்ல நடிக்கணும்னுதான் ஆசைப்படுறேன்” என்றவரிடம், ’படத் தயாரிப்புகள்ல குதிச்சிட்டீங்க, மார்க்கெட் வேல்யூ பார்த்துதான் படத்தைத் தேர்ந்தெடுத்தீங்களா?’ என்றோம். 

 

“அப்படிச் சொல்ல முடியாது. ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்துல, நான் கெஸ்ட் ரோல் பண்ணேன். அப்பவே, என்கிட்டே நிறைய பேர் சொன்னாங்க. ஹீரோயினா நடிச்சிட்டு, எதுக்கு இப்படி ஒரு ரோல்ல நடிக்குறேன்னாங்க. நான் அதெல்லாம் கேட்கலை. ஒரு தயாரிப்பாளராக, மார்க்கெட்டை ’ஸ்டடி’ பண்ணுவேன். கொஞ்சமா பணத்தை போட்டு ஓரளவு லாபம் எடுக்குற சப்ஜெக்டா இருந்துச்சுன்னா, தயாரிப்புல இறங்குவேன். ரொம்பப் பெரிய படமெல்லாம் நான் தயாரிக்கலை” என்று பேய்த்தனமாகச் சினிமா தயாரிப்பு பற்றிப் பேசினார் விசாகா. அவர் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தபோதே, ‘பயம் ஒரு பயணம்’ எவ்வளவு திகிலுடன் தயாராகியிருக்கும் என்பது புரிந்தது. இவங்க அனுபவத்தை ஒண்ணா சேர்த்தாலே, இன்னொரு திகில் படம் தயார் செஞ்சிரலாம் போலிருக்கே!

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles