முதலிடத்தில் பாகிஸ்தான் அணி! - மினுமினுக்கும் மிஸ்பாவின் புகழ்!!

Wednesday, August 24, 2016

கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகப் பார்க்கும் வழக்கம், நம்மில் பெரும்பாலானவர்களுக்குக் கிடையாது. பாகிஸ்தானும் இந்தியாவும் ஆடும் ஆட்டங்களில், இது நன்றாகத் தெரியவரும். பாகிஸ்தான் அணியைச் சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும், நம்மூர் ரசிகர்களின் சாபங்களில் இருந்து தப்ப முடியாது. அதிலிருந்து தப்பிக்கும் வீரர்கள் ஒரு சிலரே. அதில் முக்கியமானவர் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் கேப்டன் மிஸ்பா உல் ஹக். காரணம், அவரது பின்னணியும் களத்தில் வெளிப்படும் அவரது உடல்மொழியும். வெற்றியோ, தோல்வியோ எதுவாக இருந்தாலும், மிஸ்பாவின் ரியாக்‌ஷன் பெரும்பாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்.

 ’எதற்கும் அலட்டிக்கொள்ளாத அவரது குணம், வெகு விரைவில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் இருந்து அவரை ஓய்வு பெறச்செய்யும்’ என்றே சர்வதேசப் பார்வையாளர்கள் நினைத்தனர். அதனை மீறி, இன்றும் பாகிஸ்தான் அணியில் நீடித்து வருகிறார் மிஸ்பா. சர்வதேச ரசிகர்களின் பார்வையில் இருந்து பாகிஸ்தான் அணி விடுபட்டுப் போகாமல் இருக்க, தனது அசகாய உழைப்பையும் தந்து வருகிறார். அதற்குக் கிடைத்திருக்கும் பரிசுகளில் ஒன்று, டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தான் அணி பெற்றிருக்கும் நம்பர் 1 அந்தஸ்து. 

 

கடந்த 2001ம் ஆண்டு மார்ச் மாதம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார் மிஸ்பா உல் ஹக். ஷேக்லைன் முஷ்டாக், வக்கார் யூனிஸ், முஷ்டாக் அகமது, யூசுப் யோஹனா என்று பாகிஸ்தான் முன்னணி வீரர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. எந்தவித தடத்தையும் உருவாக்காத வகையிலேயே, மிஸ்பாவின் ஆரம்பகால ஆட்டம் இருந்தது. ஆனால், மெதுமெதுவாக அதனை மாற்றினார் அவர். ஒருகட்டத்தில் பாகிஸ்தான் அணியின் தவிர்க்க முடியாத வீரராக மாறிப்போனார். 

 

கடந்த 2007 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியின்போது, பாகிஸ்தானின் வெற்றி கைநழுவிப்போனது. மிஸ்பா அவுட்டான கணமே, அது நிகழ்ந்தது. அது பற்றிய கேள்விகள் எழும்போதெல்லாம், மிஸ்பா உணர்ச்சிகரமாகப் பதிலளிப்பார். அதுதான் அவரது இயல்பு. மற்ற நேரங்களில், தன்னைப் பற்றிய சிறு விமர்சனத்தையும் கூட வெளிப்படுத்த மாட்டார். தேவையற்ற எந்த விஷயமும், அவரது வாயில் இருந்து வெளிவராது. அப்ரிடி, சோயிப் மாலிக் உட்பட அரை டஜன் வீரர்களின் கைகளுக்குத் தாவிய கேப்டன் பதவி, மிஸ்பாவைத் தேடி வந்ததற்கு இதுவே காரணம். 

 

சமீபகாலமாக பாகிஸ்தான் அணியில் விளையாடும் வீரர்கள் முதல் அதனுடன் தொடர்புடைய பணியாளர்கள் வரை, யாரும் தங்களுக்கென்று ஒரு இடத்தைத் தக்கவைக்கவில்லை. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பே டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெற்றுவிட்டார் மிஸ்பா. அதன்பிறகு, அவரது முழுக்கவனமும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இருந்தது. 

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பலமே, அதன் பந்துவீச்சுதான். அதற்கேற்றவாறு, கடந்த பத்தாண்டுகளில் அந்த அணியைத் தாங்கி வந்திருக்கின்றனர் அதன் பந்துவீச்சாளர்கள். முகம்மது ஹபீஸ், சயீத் அஜ்மல் போன்ற சுழற்பந்துவீச்சாளர்கள் முதல் மீண்டும் அணிக்குத் திரும்பிய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது அமீர் வரை, பல வீரர்கள் தங்களது பங்களிப்பைச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர். ஆனால், அதுபோன்ற வலிமையைப் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசையில் காண முடியவில்லை. வக்கார் யூனிசுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்துவரும் மிக்கி ஆர்தர் இதனை நன்கு உணர்ந்திருந்தார். அதற்கேற்றாற் போலவே, தற்போது நடந்து முடிந்திருக்கும் இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் முடிவடைந்திருக்கிறது. 

 

2-2 என்ற கணக்கில் தொடரைச் சமன்செய்த கையோடு, டெஸ்ட் அணிகளில் நம்பர் 1 என்ற அந்தஸ்தையும் பெற்றிருக்கிறது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. யூனிஸ்கான், முகம்மது அமீர் உட்பட அணியில் விளையாடிவரும் ஒவ்வொருவருக்கும் இதில் பங்கிருக்கிறது. ஆனால், இந்தக் கணத்தை எதிர்கொள்வதற்காகப் பல ஆண்டுகளாகப் போராடிவரும் மிஸ்பாவின் உழைப்பே அதில் முதன்மையானது. 

 

மூத்த வீரர்களைக் கையாளுவது, இளம் வீரர்களுடன் சகஜமாகப் பழகுவது, உள்நாட்டில் விளையாட முடியாதது, குறைவான போட்டிகளில் விளையாட வேண்டிய நிர்ப்பந்தம் என்று அவர் எதிர்கொண்ட பிரச்சனைகள் ஏராளம். முக்கியமாக, 2009ம் ஆண்டு இலங்கை வீரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானில் எந்த கிரிக்கெட் போட்டியும் நடத்தப்படவில்லை. அதன்பிறகு, அங்கு நடக்க வேண்டிய போட்டிகள் எல்லாமே ஐக்கிய அரபு அமீரகத்தில் தான் நடந்து வருகிறது. இந்த நிலையில்தான், உலக அரங்கில் தனது விளையாட்டைத் தொடர்ந்து வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. இந்தக் காரணமே, மிஸ்பா உல் ஹக்கிற்கு புகழைப் பெற்றுத் தந்திருக்கிறது. இதற்காகவே, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் உட்படப் பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள் தெரிவித்திருக்கின்றனர். 

 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது போட்டி மழை காரணமாகத் தடைபட்டது. இதன் காரணமாக, முதலிடத்தைக் கோட்டை விட்டிருக்கிறது இந்திய அணி. இதனால் பாகிஸ்தான் அணி முதலிடம் பிடிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. இனிவரும் நாட்களில், இந்த நிலைமை மாறலாம். இதனை உணர்ந்தே, ‘இந்த இடத்தைப் பிடித்ததை விட, நாங்கள் அதைத் தக்கவைக்கக் கடினமாகப் போராட வேண்டியிருக்கும்’ என்றிருக்கிறார் மிஸ்பா உல் ஹக். தற்போது, இவருக்கு 42 வயதாகிறது. ‘இன்னும் 8 ஆண்டுகள் வரை விளையாடுவேன் என்று நினைக்கிறேன்’ என்று பேசியிருக்கிறார் மிஸ்பா. இந்த நம்பிக்கையே, அவரது பலம். 

 

எதிர்காலத்தில் இந்தப் பெருமை கைநழுவிப்போனாலும், மிஸ்பாவின் தலைமையில் பாகிஸ்தான் அணி நம்பர் 1 இடத்தைப் பெற்றிருந்தது என்பது வரலாற்றில் இருந்து மறையாது. பல தடைகளைத் தாண்டி அதனைச் செயல்படுத்தியிருக்கும் மிஸ்பா என்ற செயல்புயலை, அதற்காகவே எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!

-ஜென்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles