நம்ம ஊரு.. நம்ம கெத்து..!! ஆரம்பமாகுது தமிழ்நாடு பிரீமியர் லீக்!

Wednesday, August 24, 2016

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐ.பி.எல்.ல இல்லைன்ன உடனே, நண்டு சிண்டுகள் கூட டிவி முன்னால உட்காரலை. ’விளையாடுறதோட நமக்கும் கிரிக்கெட்டுக்குமான பந்தம் முடிஞ்சுபோச்சு’ன்னு இருந்தாங்க பல பேர். அவங்களோட வைராக்கியத்தை கைவிட வைக்கப்போகுது ‘தமிழ்நாடு பிரீமியர் லீக்’. இதோட தொடக்க விழா, சமீபத்துல சென்னையில நடந்துச்சு.

மகேந்திரசிங் தோனி உட்படப் பல பிரபலங்கள், இதுல கலந்துகிட்டாங்க. அவங்க எல்லோருமே சொன்னது ஒரு விஷயம்தான். ‘இந்த தொடர் மூலமா, சில வீரர்கள் இந்திய அணிக்குக் கிடைக்கணும்’, இதுதான் அவங்க பேசுனதுல முக்கியமானது. வீரேந்திர சேவாக், மேத்யூ ஹெய்டன், மைக்கேல் பெவன், ஹேமங் பதானின்னு சர்வதேச கிரிக்கெட்ல இருந்த பல பேரு, தமிழ்நாடு பிரிமியர் லீக்கோட இணைஞ்சிருக்காங்க. இந்த தொடரோட முதல் போட்டி, இன்னும் சில மணி நேரத்துல தொடங்கப்போகுது.

 

சென்னை, திருவள்ளூர், மதுரை, காரைக்குடி, தூத்துக்குடி, கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல்னு மொத்தம் எட்டு அணிகள் இதுல விளையாடப் போகுது. ஆகஸ்ட் 24ம் தேதியில இருந்து செப்டம்பர் 18ம் தேதி வரைக்கும் மொத்தம் 31 போட்டிகள் (28 லீக் போட்டிகள், 2 அரை இறுதி, 1 இறுதி போட்டி) நடக்கப்போகுது.

 

சென்னை, திண்டுக்கல் (நத்தம்), திருநெல்வேலினு மூன்று ஊர்கள்ல கிரிக்கெட் விளையாடப் போறாங்க.  ரவிச்சந்திரன் அஸ்வின், தினேஷ் கார்த்திக், முரளி விஜய்னு இந்திய அணியில் இடம்பிடித்த வீரர்கள் இதுல தலைகாட்டப் போறாங்க. ’இவங்களோட விளையாடுறப்போ, புதிய அனுபவம் கிடைக்கும். அது மூலமா, புதிய வாய்ப்புகளும் தேடி வரும்’, இந்தப் போட்டிக்குத் தேர்வாகியிருக்கிற வீரர்களோட மனசுல இருக்கறது இதுதான்.

 

உள்ளூர் வீரர்களுக்குன்னு இருக்குற தனித்தன்மை, இது மூலமா உலகத்துக்குத் தெரிய வரும். இந்த ஒரு விஷயத்துக்காகவே, தமிழ்நாடு பிரிமியர் லீக்கைப் பார்க்கத் தயாராகி வர்றாங்க கிரிக்கெட் ரசிகர்கள். இந்தப் போட்டியில ஜெயிக்குற அணிக்கு 1 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 60 இலட்சம் ரூபாயும் பரிசாகத் தரப்போறாங்க.

 

ஒவ்வொரு டீமுக்கும் தனித்தனி தீம் சாங், லோகோன்னு களை கட்டியிருக்குது இந்த திருவிழா. தமிழ்நாடு முழுக்கவே கிரிக்கெட் திறமை பரவியிருக்குதுன்னு காட்டுறதுக்கான வாய்ப்பு இது. அதனாலேயே, இதைப்பத்தி பேஸ்புக், டிவிட்டர்ல விளம்பரப்படுத்தறதுக்காகச் சில பேர் தீவிரமா வேலை செய்றாங்க. முதல் ஆட்டத்துல களம் காணப்போறாங்க தூத்துக்குடி டியூட்டி பேட்ரியாட்ஸ் மற்றும் சென்னை சேப்பாக் கில்லீஸ் அணிகள். இந்திய கிரிக்கெட் அணிக்கு நிறைய நல்ல வீரர்களைக் கொடுத்திருக்கு ஐ.பி.எல். போட்டிகள். அது மாதிரி, இதுவும் நல்லது பண்ணனும்னு நம்பலாம்.

 

தீபாவளி, பொங்கலை விட, உள்ளூர் கோவில் திருவிழாக்களுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. அது மாதிரி ஒரு அனுபவத்தைத் தரப்போகுது தமிழ்நாடு பிரிமியர் லீக். என்ன, பார்க்கப் போகலாமா?

-ரஞ்சித்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles