கேப்டன் இஸ் பேக்.. - பத்திரிகையுலக ஜாம்பவான்களைச் சந்தித்த விஜயகாந்த்!!

Wednesday, August 24, 2016

கோலிவுட் நடிகர்களில் விஜயகாந்த் எப்போதும் தனி ரகம். அவரைப் பற்றி வெளியாகும் தகவல்களும், அது மாதிரிதான் இருக்கும். காரணம், விஜயகாந்தின் தனித்துவமான குணம். தன்னைத் தேடி வரும் ரசிகர்களையும் பத்திரிகையாளர்களையும் வெறும் வயிற்றுடன் அனுப்பும் பழக்கம், விஜயகாந்த் ஹிஸ்டரியில் கிடையாது. நடிப்பில் இருந்து அரசியலுக்குள் கால் வைத்த பிறகும், வந்தோரை உபசரிக்கும் பழக்கம் மட்டும் அவரிடம் இன்னும் மாறவில்லை. அப்படியாக, அவரிடம் இன்னொரு பழக்கமும் மாறாமல் தொடர்ந்து வருகிறது.

அது, ஒவ்வொரு வருடமும் தன் திரையுலக வாழ்க்கைக்கு அடித்தளமிட்ட பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடுவதுதான். அப்படியானதொரு சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது, வழக்கமான துள்ளலுடன் கலந்து கொண்டாராம் கேப்டன். அந்தச் சந்திப்பில், 1970 மற்றும் எண்பதுகளில் பத்திரிகைதுறை ஜாம்பவான்கள் கலந்து கொண்டனர். மூத்த பத்திரிகையாளர்கள் மேஜர்தாசன், பாரி வள்ளல், சிங்காரவேலு, ஜெயசந்திரன், தேவிமணி, மதுரை தங்கம் உள்ளிட்டோரும், மக்கள் தொடர்பாளர்கள் ரியாஸ் கே. அகமது, மௌனம் ரவி உள்ளிட்டோர் அதில் பங்கேற்றனர். அவர்களோடு தன் நிமிடங்களைப் பகிர்ந்து கொண்டார் கேப்டன் விஜயகாந்த்.

 

இந்நிகழ்வில் பங்கேற்ற ‘பேசும் படம்’ இதழின் முன்னாள் பொறுப்பாசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான மதுரை தங்கத்திடம் பேசினோம். “வழக்கமாக வருடத்துக்கு ஓரிருமுறை, கேப்டன் விஜயகாந்த் தனது வெற்றிப் பயணத்துக்குக் காரணமான பத்திரிகையாளர்களைச் சந்திப்பது வழக்கம். அந்தவகையில்தான் இந்தச் சந்திப்பும் நடந்தது. விஜயகாந்த் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாகப் பேசினார். அவர்களது குடும்பம், வேலை, உடல் நலன் குறித்தும் கேட்டறிந்தார். அந்தவகையில் என்னிடமும் பேசினார். என்னுடைய குழந்தைகள் படித்து, நல்ல வேலையில் இருப்பதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். 

 

இங்கே உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். கோலிவுட்டுக்குள் விஜயகாந்த் நுழைந்து, சில படங்களில் நடித்து, வெற்றி நாயகனாக வலம் வந்துகொண்டிருந்தபோது, ஏனோ சில படங்கள் எதிர்பாராத தோல்வியை தழுவின. அந்தச் சமயத்தில், 1983ல் விஜயகாந்தை நாயகனாக்கி ‘சாட்சி’ என்ற படத்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கினார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. 

 

அந்தப் படம் குறித்து, பேசும்படம் இதழில் ‘மீண்டும் விஜயகாந்த்’ என்ற பெயரில் நான்கு பக்கத்திற்கு செய்தி வெளியிட்டேன். அதைப் பார்த்துவிட்டு, தொலைபேசியில் என்னை அழைத்து நன்றி தெரிவித்தார் விஜயகாந்த். இந்தச் செய்தியை படித்த எஸ்.ஏ.சி., “எனக்கும் இந்த மாதிரி செய்தி போடமாட்டீங்களா?” என்று என்னிடம் கேட்டார். அப்போது, “நிச்சயமாக உங்களுக்கும் அப்படி எழுதுவேன்” என்றேன். 

 

அந்த நேரத்தில் பேசும் படம் இதழின் நிர்வாக ஆசிரியர் டி.வி.ராமநாத் என்னை கூப்பிட்டார். “விஜயகாந்த் கட்டுரை மட்டும், இதழில் தனித்து சிறப்பாக தெரிகிறதே?” என்று கேட்டார். “நானும் மதுரைக்காரன்தான் சார்..” என அவரிடம் பதில் சொன்னேன். அவர் மறுப்பேதும் சொல்லவில்லை. அப்படியாக, விஜயகாந்தின் வெற்றியில் பத்திரிகையாளர்களாகிய எங்கள் எல்லோருக்கும் பங்கு உண்டு. அதேபோல, அவரும் இன்றுவரை எங்கள் மீது மரியாதையும் தனித்த பாசமும் வைத்திருக்கிறார்” என்று, தொடர்ந்து வரும் இந்தச் சந்திப்பிற்கான காரணத்தைச் சொன்னார் மதுரை தங்கம். 

கேப்டன்னா ச்சும்மாவா..?

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles