பிரச்சினைக்குச் சரியான தீர்வு ’புரிதல்’தான்!

Monday, August 22, 2016

தகுதிக்குக் குறைவான வேலையில் இருந்து கொண்டிருக்கிறீர்கள் என்று, நீங்கள் எண்ணியது உண்டா? திறமை இருந்தாலும், இன்னும் என்னால் ஏன் உயர்ந்த பதவியை அடைய முடியவில்லை என்று யோசித்திருக்கிறீர்களா? யோசிப்பது மட்டுமே தீர்வைத் தந்துவிடாது. கடந்துவந்த பாதையில் என்னென்ன வழிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை, முதலில் பட்டியலிடுங்கள்.  உங்களை நீங்களே ‘செல்ஃப் ஸ்டடி’ பண்ணுங்கள். 

உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம், இதுகுறித்து விவாதியுங்கள். அவர்கள் சொல்லும் கருத்துக்களை, நீங்கள் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை. அவர்கள் சொல்வதை உள்வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால் உங்களுக்கு தேவையானது என்னவென்பதை, நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். ஒருமுறையோடு இது நின்றுவிடக்கூடாது. அடிக்கடி, உங்களைப் பற்றி நீங்களே உணர்ந்து கொள்ளுதல் மிகவும் அவசியம். உங்களைப் பற்றிய சில ஆய்வுகளை, நீங்களே செய்துகொள்ளுங்கள். எங்கு, என்ன தடை இருக்கிறது என்பதை, நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

 

எனக்குத் தெரிந்த ஒரு பள்ளி மாணவன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், மிகவும் கடினமான உழைப்பைச் செலுத்தி, தன் பள்ளி நாட்களில் அந்த படிப்புக்கான பயிற்சியை மேற்கொண்டார். ஆனால், மருத்துவத்துறை தேர்வு ஆணையம் நியமித்த மதிப்பெண்களை விட, அவரது மதிப்பெண் சற்று குறைந்து விட்டது. அவரது குடும்பத்தால், மருத்துவ சீட்டை வாங்கும் அளவுக்கு பணத்தைத் திரட்ட முடியவில்லை. அந்த மாணவன் துவண்டு விட்டான். இந்த மாதிரியான நேரத்தில், மாணவப் பருவத்தில் இருப்பவர்களிடம் கோபம் காட்டக்கூடாது. அந்த மாணவனை அமைதிப்படுத்தி, மருத்துவத்தைத் தாண்டி இன்னும் பல நல்ல துறைகள் இருக்கிறது என்று தெளியவைத்தனர் அவனது நலம்விரும்பிகள். எது சரியான வழி என்பதை, அவன் மனம் நோகாமல் புரியவைத்தனர். 

 

இதுபோன்ற இக்கட்டில் சிக்கிக்கொள்ளும் மாணவர்களிடம், ”உனக்காக நான் எவ்வளவு பணம் செலவு செய்தேன், சக்திக்கு மீறி உழைத்தேன்! பலன் இல்லையே” என்பது போன்ற பேச்சுகளை, அவர்களது பெற்றோர் தவிர்க்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்குச் சரியான பாதையைக் காட்ட வேண்டும். இதுவே, அவர்களின் ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழிகாட்டுதலாக அமையும்.

 

எந்த ஒரு பிரச்சினைக்கும், புரிதல் என்பதே முதல் தீர்வாக அமையும். எதையும் சுலபமாகப் புரிந்துகொள்பவர்களால் மட்டுமே, பிரச்சினையிலிருந்து எளிதாக வெளிவர முடியும். ஏனெனில், அவர்களால் மட்டுமே ஒரு சம்பவத்தின் அடி ஆழத்திலிருக்கும் வேரை ஆராய்ந்து சரிசெய்ய இயலும். இந்தத் தகுதி வெறும் அலுவலகம் செல்பவர்களுக்கு மட்டும்தான் என்று எண்ணுதல் கூடாது. நம் எல்லோருக்கும் தான்.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles