நாடகத்தை எப்படி பயிற்றுவிக்க முடியும்? - கேள்வியோடு பதிலையும் சொல்லும் கருணா பிரசாத்

Saturday, August 13, 2016

நவீன தமிழ் நாடக உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், அது குறித்த கனவுகளோடும் பெருமிதங்களோடும் தனித்துத் தெரியும் திறமைகளோடும் இருக்கின்றனர். அந்த வரிசையில் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பவர்களில் ஒருவர், நாடக நடிகர் மற்றும் இயக்குநர் கருணா பிரசாத். 'அரவான்', 'பரமபதம்', 'என்று தணியும் இந்த தாகம்', 'கர்ணன்', 'சத்யலீலா' போன்ற நாடகங்களை இயக்கியும் நடித்தும், தனக்கான தனித்த அடையாளத்தை உருவாக்கியிருப்பவர். ’மூன்றாம் அரங்கு’ என்ற தனது குழுவின் மூலமாக, புதிய முயற்சிகளை மேற்கொள்பவர்.

நாடக உலகம் இயங்கிய விதம், அதில் பெற்ற அனுபவங்கள், அடுத்த தலைமுறைக்கான அறிவுரை என்று தொடர்ச்சியான கேள்விகளை, அவரிடம் முன்வைத்தோம். ஆழ்ந்த நிதானம் மற்றும் செறிவான அனுபவத்தின் துணையோடு, நம்மோடு உரையாடத் தொடங்கினார் கருணா பிரசாத். 

 

நாடகத்தின் மீதான ஆர்வம் எப்போது தொடங்கியது?

என்னுடைய தந்தை ஒரு குச்சுப்புடி நடனக்கலைஞர். அதோடு, சக்தி நாடக சபா பின்புலத்தில் இருந்து வந்தவர். 'கூண்டுக்கிளி', 'மந்திரிகுமாரி', 'மலைக்கள்ளன்' போன்ற படங்களில் நடித்தவர். 

நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன். ராமகிருஷ்ணா பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது, அங்கிருந்த ஒரு ஆங்கில ஆசிரியர் உலக இலக்கியங்களை எங்களுக்குக் கடத்தினார். எங்களை வைத்து சிறு நாடகங்களை உருவாக்குவதுதான், அவரது முக்கியமான வேலை. பள்ளியில் மட்டுமல்ல, சென்னை தொலைக்காட்சி நிலையத்திற்கு அழைத்துச் சென்று, நாடகங்களில் நடிக்க வைத்தார். அது, என்னைப் போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தைத் தந்தது. அதன்பிறகு, நந்தனம் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது, அங்கு பத்து நாட்கள் கூத்துப்பட்டறையின் நாடக பயிற்சி வகுப்புகள் நடக்குமென்ற அறிவிப்பு வெளியானது. அதைப் பார்த்ததும், ’நாடகத்தை எப்படிப் பயிற்றுவிக்க முடியும்’ என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது. ’என்னதான் செய்றாங்கன்னு பார்ப்போமே’ என்று, அதில் நான் கலந்துகொண்டேன்.  பத்து நாட்கள் பயிற்சிக்குப் பிறகு, விருப்பமுள்ளவர்கள் நுங்கம்பாக்கத்திலுள்ள கூத்துப்பட்டறையில் பங்குபெறலாம் என்று சொன்னார்கள். அதன் அடிப்படையில், அங்கு சென்று சேர்ந்தேன். 

 

கூத்துப்பட்டறையில் உங்களுக்கு எப்படிப்பட்ட அனுபவங்கள் கிடைத்தது?

கூத்துப்பட்டறையில் சேர்ந்து பணியாற்றியபோது தான், பல கேள்விகளுக்குப் பதில் தெரிந்தது. ஒரு நடிகன் என்பவன் யார்? அவன் எவ்வாறு உருவாகிறான்? அதற்கான தேவை என்ன? என்பது பற்றிய புரிதல் உண்டானது. உடல், மனம், குரல் மூலமாகத்தான், ஒரு நடிகன் பார்வையாளனைச் சென்றடைகிறான் என்கிற அடிப்படை அறிவு கிடைத்தது. அங்கு, எல்லாவற்றையும் அறிவியல் சார்ந்த ஒரு தத்துவமாகத்தான் அணுகினார்கள். 

ஒரு நடிகனின் உடலசைவிற்கு என்னவெல்லாம் தேவைப்படும் என்று பார்க்கிறபோது, அவன் நடனத்தை நோக்கிப் பயணிக்கிறான். நடனம் என்பது அழகியல் சார்ந்த ஒரு விஷயம். அதன்பிறகு, ஒரு நடிகனின் உடல்மொழிக்கு என்ன தேவை என்கிற கேள்வி எழுகிறது. அப்போது சிலம்பம், களரி, தஞ்சாவூர் குத்துவரிசை உட்பட பல கலைகளை உள்வாங்க வேண்டியிருக்கிறது. மண்ணின் மரபுகளில் இருந்து கிடைக்கும் அடிப்படைப் பயிற்சிக்காக, தெருக்கூத்து பற்றி அறிய நேரிடுகிறது. தெருக்கூத்துக் கலைஞன் அந்தக் களத்தில் என்னவெல்லாம் செய்கிறானோ, அதன் சாராம்சத்தை உள்வாங்கி, நினைவில் பதித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதை எல்லாம் அங்கு புரிந்து கொண்டேன். 

எழுதப்பட்ட பிரதியில் இருந்து, ஒரு கதாபாத்திரத்தின் பின்புலத்தை உருவாக்க வேண்டியிருக்கிறது. ’ஒரு கதாபாத்திரத்தின் ஆன்மாவிற்கு நெருக்கமாகப் பயணிக்கிறோமா, வெளிப்படுத்துகிறோமா’ என்பதுதான் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி சொல்வது. படிப்படியான வளர்ச்சியின் மூலமாக, இதனை நாம் கண்டடைகிறோம். இதனைச் செய்ய முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தபிறகுதான், கூத்துப்பட்டறையில் முழுநேர நடிகனாகச் சேர்ந்தேன். 

அங்கு தமிழகத்தில், இந்தியாவில் இருக்கும் நாடகங்கள் பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதைத் தாண்டி, உலகின் முக்கிய நாடக ஆசிரியர்களின் அனுபவங்களில் பங்கெடுக்கும் வாய்ப்பு உருவானது. வெளிநாட்டில் இருந்து வந்த நெறியாளுநர்களால், ஒரு நடிகனை எவ்வாறு வார்த்தெடுப்பது என்று தெரிந்தது. ஒரு நடிகனுக்குள் இருக்கும் தடைகளை உடைத்து, அந்தக் கதாபாத்திரத்தை நோக்கி செலுத்துவது எப்படி என்று புரிந்தது. 

 

கடந்த ஓர் நூற்றாண்டில், தமிழகச்சூழலில் நாடகக்கலை ஏற்படுத்திய தாக்கம் என்ன?

தமிழகத்தில் முதன்முதலாக ஒரு நாடகக்குழுவை உருவாக்கியவர் சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள். அந்தக் காலத்தில், நாடகத்தில் நடிப்பவர்களைப் பற்றி பிற்போக்குத்தனமான கண்ணோட்டம் இருந்தது. அதனை உடைத்து, ஒழுக்கம் நிறைந்த ஒரு குழுவை உருவாக்கினார் அவர். சிறுவயது மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மேடை ஏற்றுவதற்கு ஏற்ற வகையில் தயார்படுத்தினார். முழுநேர நடிகர்களை தயார்படுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கினார். நாடகங்களின் மூலமாக வாழ்வாதாரத்தை ஈட்ட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியவர் சங்கரதாஸ் சுவாமிகள்தான். 

அதன்பிறகு வந்தவர் பம்மல் சம்பந்த முதலியார். அப்போது, எல்லா நாடகங்களும் இரவு 10 மணிக்குத் தொடங்கி காலை 6 மணிக்கு முடிவடைவது வழக்கம். நகரத்துப் பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக, நாடகத்தின் கால அளவை மாற்றினார். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நாடகம் நடத்தப்படும் என்றாக்கினார். புராணம் மற்றும் இதிகாசங்களைத் தவிர்த்து, சமூக நாடகங்களையும் மேற்கத்திய நாடகங்களின் தழுவல்களையும் அரங்கேற்றினார். அதன்பிறகு, நகரத்தில் இருந்த மேல்தட்டு மக்கள் நாடகம் நோக்கி வந்தார்கள். இப்படி மிகப்பெரிய பின்புலம், தமிழகத்தில் நாடகங்களுக்கு இருந்தது.  

அதன்பிறகு, தமிழகத்தில் திராவிட இயக்கம் வேரூன்றக் காரணம் நாடகங்கள்தான். எம்.ஆர்.ராதாவின் காலகட்டத்தில், நாடகங்களைத் தணிக்கை செய்ய சட்டம் இயற்றினார்கள். முழுநேரமாக நாடகத்துடன் இணைந்து பணியாற்றியவர்களுக்கு நம்பிக்கை கொடுத்த காலகட்டம் அது. 70களுக்குப் பிறகு, பின்நவீனத்துவத்தின் தாக்கம் நாடகத்திலும் பரவியது. அதனுடைய பின்விளைவாகத்தான், நவீன நாடகங்கள் செயல்பாட்டிற்கு வந்தது. அதன் தாக்கம்தான், என்னை நாடகத்திற்குள் இழுத்து வந்தது. 

இன்று சினிமாவில் நடிக்க வருபவர்களுக்கு, நடிப்பு பற்றிய பயிற்சி அவசியம் என்ற எண்ணம் உண்டாகியிருக்கிறது. கல்விப்புலத்தில் பார்க்கும்போது, மாணவர்களின் கற்றலை மேம்படுத்த நாடகம் எவ்வாறு உதவும் என்ற கேள்வி வலுப்பெற்றிருக்கிறது. நாடகம் என்பது நடிப்பு மட்டுமல்ல, அது ஒரு அரங்கச் செயல்பாடு என்பது புரிய வந்திருக்கிறது. மாணவர்களுக்கு மனம், உடல் சார்ந்த பயிற்சிகளை வழங்கி, ஒரு பிரச்சனைக்கு அவர்கள் என்ன மாதிரியான எதிர்வினையை ஆற்றுகிறார்கள் என்று பார்த்தோம். இம்மாதிரியான நாடகச் செயல்பாட்டின் மூலமாக, வகுப்பறையில் ஒரு ஆசிரியர் மாணவர்களைச் சலிப்புறாமல் பார்த்துக் கொள்கிறார். 

விஷூவல் கம்யூனிகேஷன் மாணவர்களுக்கு, ’படைப்பாற்றல் என்றால் என்ன’, ‘அதன் படிநிலைகள் என்ன’ என்பவற்றை விளக்குகின்றன அரங்கச் செயல்பாடுகள். மரபில் இருந்த விஷயங்கள் என்ன? அதிலிருந்து நவீனத்திற்கு எவ்வாறு பயணிப்பது? என்ற புரிதலுக்கு வர, இவை உதவுகின்றன. நாடகத்தின் தாக்கத்தை, சுருக்கமாக இப்படித்தான் பார்க்க முடியும். 

 

நாடக இயக்குனர் ஆவதென்று, எப்போது முடிவெடுத்தீர்கள்?

கடந்த 2002ம் ஆண்டின் போது, நாம் நினைப்பதை நாடகமாக உருவாக்க வேண்டுமென்ற வேட்கை உருவானது. நாம் உள்வாங்கிய கலைகளை வெளிப்படுத்த வேண்டும் என்கிற ஆசை. தனிநபர் நிகழ்வாக ஒரு நாடகத்தை நடத்த வேண்டும் என்ற ஒரு பேராசை. அப்போதுதான், கூத்துப்பட்டறையில் ‘படுகளம்’ என்ற நாடகத்தைப் பார்த்தேன். அதில் இடம்பெற்ற ‘அரவான்’ கதாபாத்திரத்தைப் பார்த்தது, எனக்கு ஊக்கத்தைத் தந்தது. வரலாற்றில் மறைக்கப்பட்ட கதாபாத்திரமாக அரவான் இருப்பது பற்றி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனிடம் பேசினேன். ’இதனை நாடகமாகத் தயார் செய்ய முடியுமா?’ என்று கேட்டதும், அவர் பத்து நாட்களில் எழுதித் தந்தார். அதைப் படித்ததும், எனக்குள் ஒரு கிளர்ச்சி ஏற்பட்டது. அதனை நெறியாளுகை செய்து, நானே நடித்தேன். அதன் மூலமாக, நிறைய மக்களைச் சந்தித்தேன். எனக்குப் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது அரவான்.

அதன்பிறகு, நாடகக்குழுவிற்கு என்ன பெயர் வைப்பது என்று யோசித்தேன். மூன்றாம் உலக அரங்கின் குரலை எதிரொலிக்கும் விதத்தில், ‘மூன்றாம் அரங்கு’ என்ற வார்த்தையைத் தேர்ந்தெடுத்தேன். அதன் மூலமாக, எனது நாடகச் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன். 

 

நாடகக்கலையை வளர்த்தெடுக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா?

நான் இந்த மண்ணில் பிறந்து, இந்த மக்களுடனே வளர்ந்தவன். அந்த அடிப்படையில், சமூக இணக்கத்துடன் கூடிய கலைப்படைப்புக்கான ஒரு மையத்தை உருவாக்க வேண்டும். அங்கு தொடர் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும். எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். எல்லோருக்குமான ஒரு வெளியாக, அது இருக்க வேண்டும். குறிப்பாக, அடுத்த தலைமுறைக்கான நாடகங்களை நிகழ்த்தும் இடமாக இருக்க வேண்டும். நம்பிக்கை, புரிதல் மற்றும் கலைரசனையை  ஏற்படுத்தக்கூடிய இடத்தை உருவாக்க வேண்டுமென்ற தீராத தாகம் இருக்கிறது. அது நிகழும் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

’மரபுக்கலைகள் சார்ந்த பெருமிதம் வேண்டும், வாசிப்பு வேண்டும், ஒவ்வொரு நிகழ்வையும் ரசிக்க வேண்டும். அதனை உள்வாங்கும் தன்மை மூலமாகத்தான், செழுமையான படைப்பை உருவாக்க முடியும்’ என்று அடுத்த தலைமுறைக்கு தனது அனுபவத்தின் மூலம் அறிவுரை சொல்லும் கருணா பிரசாத், தான் உணர்ந்த அனைத்து உண்மைகளையும் அவர்களுக்குக் கடத்த நினைக்கிறார். அவரது எண்ணம் ஈடேறட்டும்!

- உதய் பாடகலிங்கம் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles