மனிதர்களுக்கான அத்தனை வசதிகளும் இங்க இருக்குற நாய்களுக்கு கிடைக்குது! - ‘பகீர்’ உண்மை சொல்லும் ஷ்ரவன் கிருஷ்ணன்

Saturday, August 13, 2016

'செல்லமாக வளர்த்த நாயை எப்படி விட்டுட்டு போறது' என்று யோசிப்பவர்களுக்குப் பதில் தருகிறது ‘ஹோட்டல் பார் டாக்ஸ்’. சென்னை கிழக்குக் கடற்கரைசாலையிலுள்ள அக்கரைப் பகுதியில் இயங்கிவரும் இதன் இயக்குநராக இருந்து வருகிறார் ஷ்ரவன் கிருஷ்ணன். நாய்களின் மீதான இவரது நேசம்தான், சமீபத்தில் இரண்டு இளைஞர்கள் மாடியிலிருந்து தூக்கி வீசிய நாயின் மீது அனைவரது கவனமும் பதியக் காரணமானது.

நாய்களை பராமரித்து வளர்ப்பதை ஒரு தொழிலாகச் செய்து வருபவரிடம், அது குறித்துக் கேட்டோம். அப்போது, பல ஆச்சர்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டார் ஷ்ரவன்.

 

"நான் தமிழ்நாடு கிரிக்கெட் டீம்ல விளையாடிட்டு இருந்தேன். திடீர்னு எனக்கு முதுகுல பிராப்ளம் வந்து, சர்ஜரி செய்ய வேண்டியதாப் போச்சு. அதுக்கு அப்புறம், ஒரு வருஷம் பெட்லதான் இருந்தேன். எங்க வீட்டுலயே, நான் ஒரு நாயை வளர்க்கிறேன். அது பேரு பட்டி. எங்க குடும்ப விசேஷத்துக்காக, அதை மட்டும் தனியா பத்து நாள்  விட்டுட்டுப் போக வேண்டியிருந்துச்சு. திரும்பி வந்து நாங்க பார்க்கும்போது, அது ரொம்ப நோய்வாய்ப்பட்டு இருந்தது. எங்களுக்கு ரொம்ப கஷ்டமாப் போச்சு. 

 

மறுபடியும், ஒரு யூரோப்பியன் டூர் பேமிலியா போக வேண்டியிருந்தது. ஆனால், எனக்கு பட்டியை விட்டுட்டுப் போக மனசு வரல. அப்போதான்,  ’நம்மள மாதிரி நிறைய பேர், தங்களோட நாய்களை தனியா விட்டுட்டு தவிச்சிருப்பாங்கள்ல’ன்னு யோசிச்சேன். அப்படி வந்த ஐடியா தான், இந்த ’ஹோட்டல் ஃபார் டாக்ஸ்’. இதை ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி, நிறையா ஸ்டடி பண்ணினேன். 

 

இப்போ, செல்ல நாய்களை வச்சிருக்கிறவங்க திடீர்னு ஊருக்குப் போகணும்னா, தங்களோட நாய்களை எங்ககிட்டே தாராளமா விட்டுட்டுப் போகலாம்.’ஹோட்டல் ஃபார் டாக்ஸ்’ என்ற பேரே வித்தியாசமா இருக்குன்னு, நிறைய பேர் என்கிட்டே சொல்லியிருக்காங்க. இந்தப் பேருல, ஒரு இங்கிலிஷ் படம் கூட வந்துருக்கு. 

 

நாம ஒரு ஹோட்டல்ல தங்குறதுக்கு என்னென்ன வசதிகள் தேவையோ, அத்தனை வசதிகளும் இங்க வர்ற நாய்களுக்கு செய்து தர்றோம். ஏர் கண்டிஷன்ட் கெனல், பிக்கப் - டிராப் வசதி, அதுங்களுக்கு பிடித்த உணவுகளைக் கூட சமைச்சு தர்றோம். சிக்கன் ரைஸ், எக் ரைஸ்ன்னு வெரைட்டியா செய்து தருவோம். ஏதாவது ஒரு நாய்க்கு எமர்ஜென்சின்னா, உடனே நாங்க  கால்நடை மருத்துவருக்கு தகவல் கொடுத்திடுவோம். அவரும் பத்து நிமிஷத்துக்குள்ள வந்து, அதைக் கவனிச்சிடுவார். 

 

எங்களோட பேஸ்புக்ல மட்டும், கிட்டத்தட்ட எண்பதாயிரம் பேர் இருக்காங்க. அதுல, நாங்க ரெகுலரா அப்டேட் பண்ணிட்டிருப்போம். சில நாய்களோட ஓனர்ஸ், எங்களுக்கு வாட்ஸப் பண்ணுவாங்க. அதுங்களோட கண்டிஷனைப் பற்றி கேட்டுட்டே இருப்பாங்க. நாங்க உடனடியா பதில் சொல்றதுனால, அவங்களுக்கும் திருப்தியா இருக்கும்.

 

எங்களுக்குன்னு, இங்கே தனி பேட்டேர்ன் இருக்கு. புதுசா ஒரு நாய் வந்து சேர்ந்துச்சுன்னா, அதுங்களை அதன் போக்குல விட்டுப் பிடிப்போம். இன்னும் சொல்லப்போனா, மனிதர்களை விட நாய்தான் ஈஸியா இடத்துக்கு தகுந்த மாதிரி தன்னை மாத்திக்கும். காலையில நாய்களை எழுப்பி, ஆறு மணியில இருந்து ஒன்பது மணி வரை விளையாட விடுவோம். அதுக்கப்புறம் அதுங்களுக்கு பசிக்கும். நாங்க போடுற சாப்பாட்டைச் சாப்பிட்டதும், நான்கு மணி நேரம் ஏசியில நல்லா தூங்கும். மறுபடியும், மாலை நான்கு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் நல்லா விளையாடிட்டு, சாப்பிட்டுட்டு, ராத்திரி தூங்கிடும்.

 

இங்கே வேலை பார்க்குற கேர்டேக்கர்களுக்கு, இந்த நாய்களை பற்றி நல்லாத் தெரியும். இங்கே, கிட்டத்தட்ட நாற்பதாயிரம் நாய்கள் வரைக்கும் வந்து போயிருக்கு. அதுங்களோட அவங்க பழகினதாலே, அது என்ன சொல்ல வருதுன்னு சுலபமாக புரிஞ்சுக்குறாங்க.

 

எங்க ’ஹோட்டல் ஃபார் டாக்ஸ்’ல, நான் பத்து வயசுக்குள்ள இருக்குற நாய்களைத்தான் அனுமதிக்கிறேன். ஏன்னா, நாய்களுக்கு ஆயுட்காலம் ரொம்ப குறைவு. பத்து வயசுக்கு அப்புறம் ஏதாவது ஆனா, எங்களால பொறுப்பேத்துக்க முடியாது” என்றவரிடம், அதற்கான காரணத்தைக் கேட்டோம். 

 

"பதினாலு வயசான ஒரு நாயை எடுத்துக்கிட்டு, எங்ககிட்ட ஒருத்தர் வந்தாரு. ’திடீர்னு வெளிநாட்டுக்கு மாற்றலாகிடுச்சு. எங்களால ஒண்ணுமே பண்ண முடியல. நாங்க திரும்பி வர்றதுக்கு ஒரு வருஷமாகும். அதுவரைக்கும் இந்த நாயை நீங்கதான் பார்த்துக்கணும்’னு  சொன்னாரு. நான் ரிஸ்க் எடுக்க முடியாதுன்னு மறுத்துட்டேன். அவர் என்கிட்டே ரொம்ப கெஞ்சிக் கேட்டார். வேற வழியே இல்லாம, அந்த நாயை ஏத்துகிட்டோம். அவர் அந்த நாயை விட்டுட்டு போன ஒரு வாரத்திலேயே, நாங்க நினைச்சமாதிரி அதுக்கு  நோய் வந்திடுச்சு. அது இறந்திடும்னு நினைச்சோம். டாக்டர்லாம் கூட வந்து பரிசோதிச்சார். ஆனா, அதுக்கான ட்ரீட்மென்ட்டையும் தவறாம செஞ்சோம். அது எப்படியோ நோய்ல இருந்து மீண்டுடுச்சு. தன்னோட ஓனரை பார்க்காம சாகக்கூடாதுன்னு, இன்னும் காத்திட்டு இருக்கு. 

 

இப்போல்லாம், மனுஷங்களுக்குள்ள இருக்குற மனிதம் தொலைஞ்சு போச்சு. விலங்குகள் மனிதர்களாக மாறிட்டு வருது. மனிதர்கள் விலங்குகளாக மாறுறாங்க. சமீபத்துல கூட, மெடிக்கல் காலேஜ் மாணவர்கள் ஒரு நாயை மொட்டைமாடியில இருந்து தூக்கிப் போட்டாங்க. அதைப்  பார்த்தபோது, எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்தது. அவங்களுக்கு எதிரா குரல் கொடுத்து, அந்த நாய்க்கு தேவையான உதவிகளைச் செஞ்சேன்” என்ற ஷ்ரவனிடம், அவரது எதிர்காலத் திட்டம் பற்றி கேட்டோம். 

 

“இந்த “ஹோட்டல் ஃபார் டாக்ஸ்”, இன்னும் பல ஊர்கள்ல தொடங்கணும்னு திட்டம் வச்சிருக்கேன். அதுக்கு ரொம்பப் பெரிய இடம் தேவை. நல்ல இடமாக அமைஞ்சதுன்னா, இன்னும் நிறையா நல்ல கேர்டேக்கர்ஸ் கிடைச்சாங்கன்னா, கண்டிப்பா அதைச் செய்திடுவேன்” என்று சொல்லிவிட்டு அகன்றார் ஷ்ரவன். 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles