மொழிமாற்று சீரியல்களால் ஆபத்தா?

Wednesday, August 10, 2016

மானுட வாழ்க்கையில் புதிய மாற்றங்கள் வரும்போது, ஆரம்பத்தில் அதை எதிர்கொள்ளத் திணறுவது இயற்கையானதுதான். ஆனால் எதிர்கொண்டு வெற்றி கண்டபின்பு, ’இதற்கா இப்பூடி பயந்தோம்’ என நம்மை நாமே கண்ணாடியில் பார்த்து சிரிக்கத் தோன்றும். மாற்றங்கள் எப்போதும் ஆரோக்கியமானதுதான் என்பதை, முதலில் நாம் உணர வேண்டும். 

மக்கள் மத்தியில் சினிமா கோலோச்சிக் கொண்டிருந்த நேரம். தொலைக்காட்சி பெட்டிகள் வீட்டுக்கு வரத் தொடங்கியதும், சினிமாக்காரர்கள் பயந்து நடுங்கினார்கள். “இனி எப்போதும் தொலைக்காட்சிதான்.. சினிமாவின் கதை முடிந்துவிட்டது” என்றார்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த தொலைக்காட்சிகளில் நெடுந்தொடர்கள், அதாவது அழுகாச்சி சீரியல்கள் மெகா ஹிட் அடித்தது. அதன்பின், “இனிமேல் சீரியல்கள்தான் ஆட்சி செய்யும்” என்று முழங்கினார்கள். அந்தக் கணக்கும் பொய்த்தது. இப்போது ‘மொழிமாற்று சீரியல்களால் ஆபத்து’ என்று கோலை திருப்பிப் போட்டிருக்கிறார்கள்! 

 

முன்பு, தொலைக்காட்சியைக் கண்டு பயந்தது பெரிய திரை. இப்போது மொழிமாற்று சீரியல்களை கண்டு வெளிறிப் போயிருக்கிறது சின்னத்திரை. எல்லாமே மாற்றத்தின் பாதையில் நடப்பவைதான். அதை எப்படி முறியடிப்பது என்பதைத்தான், இப்போது கவனிக்க வேண்டும். அவர்களுக்கு எதிராகக் களத்தில் இறங்குவதை விட, அந்த சீரியல்கள் ஏராளமான ரசிகர்களால் விரும்பப்படுவது ஏன் என்பதை ஆய்வு செய்வதே நலம் பயக்கும். 

 

வட இந்தியாவைச் சேர்ந்த இந்த சீரியல்களில் வரும் கதாபாத்திரங்கள் அணியும் ஆடைகள் முதல் அணிகலன்கள் வரை, எல்லாமே அவர்களது கலாச்சாரத்திற்கானது. அதனை மறுப்பதற்கில்லை. அந்த சீரியல்களைப் பார்ப்பதால், அப்படியே நம்மவர்கள் அந்தக் கலாச்சாரத்திற்கு உண்மையில் மாறிவிடுவார்களா என்று சொல்வதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில், இன்று உலகமயமாக்கல் என்கிற வார்த்தை சாதாரணமாகி விட்டதை எல்லோரும் அறிவோம். விரல்நுனியில் உலகத்தின் எல்லாவகையான ஆடை, அணிகலன்களும் காணக் கிடைக்கின்றன. அவற்றைப் பெறவும் வழிகள் இருக்கின்றன. அதனால், நாம் நம் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மறந்துவிட்டோமா? இல்லையே? மக்களுக்கு எது பிடிக்கிறதோ, அதைச் சரியாக கொடுப்பதே ஒரு படைப்பாளியின் வேலை. எந்த ரசனை அவனைப் பாதிக்கிறதோ, அந்த ரசனையை நோக்கி நாம் மாற வேண்டும். மாறுதலே வளர்ச்சி!

 

பின் குறிப்பு: மொழிமாற்று சீரியல்களை எதிர்த்து, தமிழ் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு ஆகஸ்ட் 14ம் தேதி சென்னையில் அறவழி விழிப்புணர்ச்சி போராட்டத்தை நடத்துகிறது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles