ஹேப்பி பர்த்டே சிங்கப்பூர்! - 51வது தேசியதினக் கொண்டாட்டம்!!

Tuesday, August 9, 2016

'உன்னை நீ நம்புகிறாயா, வாழ்க்கையில் வசந்தம் வீசும்!' கடந்த 1965ம் ஆண்டு ஆகஸ்ட் 9ம் தேதியன்று சிங்கப்பூர் தனி நாடாக மலர்ந்தபோது, அதன் பிரதமர் லீ க்வான் யூ அந்நாட்டு மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி இது.  மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் தனியாகப் பிரிந்தபோது, உலகநாடுகளிடம் இருந்து அனுதாபமும் பரிதாபமுமே பரிசாகக் கிடைத்தது. அதில் இருந்து மீண்டது மட்டுமல்லாமல், தனக்கான தனித்த அடையாளத்தை உருவாக்கி இருக்கிறது சிங்கப்பூர். இதன் பின்னணியில் பலர் இருந்தாலும், மூலக்காரணமாக இருந்தது ஒருவர் தான். அவர்தான், அந்நாட்டின் இரும்பு மனிதர் லீ க்வான் யூ. 

 

கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் 9ம் தேதி அன்று.. சிங்கப்பூர் தனது 50 வது தேசிய தினத்தைக் கொண்டாடியது. அதற்கு முன்னதாகவே, லீ இயற்கை எய்தினார். அந்த வருத்தம், சிங்கப்பூர்வாசிகள் அனைவரது மனதிலும் படிந்திருந்தது. அதே நேரத்தில், அவர் காட்டிய வழியில் தங்களைத் தாங்களே புதுப்பித்துக்கொள்ளும் கடமையும் அவர்களுக்கிருந்தது. அதற்கான தேவையைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர் சிங்கப்பூர் குடிமக்கள்.

 

வேற்றுமையில் ஒற்றுமை என்ற அளவில், இந்தியாவைப் போலவே இருக்கும் இன்னொரு நாடு சிங்கப்பூர். தங்கள் முன்னோர்களிடம் இருந்த பிணைப்பு, அடுத்தடுத்த தலைமுறைக்கும் பரப்பப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் சிங்கப்பூர்வாசிகள். அதோடு உலகமயமாக்கலால் மாறிவரும் பொருளாதாரச் சூழலும் மாறிவரும் மக்களின் வாழ்க்கை முறையும், சிங்கப்பூர் எதிர்நோக்கும் முக்கியப் பிரச்சனைகளாக இருந்து வருகிறது. இதனைச் சீராக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ சீயென் லூங். சிங்கப்பூரின் இளைய தலைமுறை இதனை நிறைவேற்ற வேண்டும் என்பது அவரது எதிர்பார்ப்பு. உழைப்பால் இன்றைய நிலையை அடைந்திருக்கும் சிங்கப்பூர், இனி வரும் ஆண்டுகளில் அதனை வளர்த்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. 

 

இன்றும் சிங்கப்பூருக்கு வெளியே வாழ்ந்து வருபவர்களின் கனவுதேசமாக, அந்நாடு இருந்து வருகிறது. அந்தக் கனவு தேசத்தின் மீதான பிரமிப்பும் அதனைப் பிரதியெடுக்க நினைப்பவர்களின் முயற்சிகளும் எதிர்காலத்தில் மென்மேலும் வளரவேண்டும். 51வது தேசிய தினத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் சிங்கப்பூர்வாசிகளின் முன்னிருக்கும் சவாலும் அதுதான். 

- உதய் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles