கவிதைகள் சொல்லவா..  திருநங்கைகள்

Saturday, July 30, 2016

ஒப்பனையற்ற வரிகளினால் எளிதாக எவரையும் வசீகரிக்கக் கூடியவர் கவிஞர் விவேக். ஒருநாள் கூத்து படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே’ பாடலின் மூலம் இளசுகளைக் கட்டிப்போட்டவர். குடும்பமே நீதித்துறை சார்ந்து இருப்பதால், இவரும் சட்டத்தைப் பாடமாகப் படித்திருக்கிறார். ஆனால், தமிழின் மீதான ஆர்வம், இவரைத் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இவர், தன் எழுத்தின் மூலமாக சில சமுதாய மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறார். இருபாலருக்கும் இருக்கும் இடையே நிலவி வரும் சாதி உணர்வு, ஏனோ திருநங்கைகளிடம் காணப்படுவதில்லை என்பதை ஆணித்தரமாகப் பதிவிடுகிறார் கவிஞர் விவேக்.

ஒரு உரையாடலிலிருந்து பிறந்த இந்தக் கருவை உணர்வோம் நாம், அவர் மூலமாக… ஒரு நாள் இரு திருநங்கைகளைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு திருநங்கை அதிர்ச்சியான ஒரு சம்பவத்தை விவரித்தார். அந்த உண்மை, அவரின் மொழியில்...

‘ஒரு நாள், வெளியூர் போறதுக்காக திருநங்கைகள் ஆறு பேர் டிக்கெட் வாங்கிட்டு, ட்ரெயின்ல லேடீஸ் கம்பார்ட்மெண்ட்ல ஏறி உட்கார்ந்தோம். அப்போ அங்க வந்த டிடிஆர், எங்களப் பார்த்துட்டு இறங்கச் சொன்னாரு. ‘ஏன் சார்?’னு கேட்டதுக்கு, ‘நீங்க எல்லாம் லேடீஸ் கம்பார்ட்மெண்ட்ல ஏறக்கூடாது. ஜெனரல்ல போய் ஏறுங்க’னு சொன்னார். ‘இல்லை சார், நாங்களும் லேடீஸ்தான்’னு எவ்வளவோ சொல்லியும், அவரு கேட்கல. ‘உங்கள இங்க உட்காரவிட்டா, லேடீஸுக்கு என்ன பாதுகாப்பு’னு கேட்டு, எங்க பையை எல்லாம் தூக்கி வெளியில போட்டுட்டாரு. அவருக்குப் புரியலயோன்னு நான் சொன்னேன், ‘நாங்க உடம்பால மட்டும் ஆணாப் பொறந்தவங்க. ஆனா எங்க மனசு, சிந்தனை எல்லாம் பொண்ணுக்கானது. நாங்க நினைச்சா மாத்திக்கிற விஷயம் இல்லை இது. இந்த முரண்பாட்டைப் போக்குறதுக்கு, அறுவை சிகிச்சை செஞ்சு உடம்பையும் பொண்ணா மாத்திக்கிட்டோம். மத்தபடி, நாங்க வேணும்னு இப்படி நடந்துக்கிறவங்க இல்லை. நாங்களும் இப்போ முழுப்பெண்கள்தான். பெண்ணுக்கான உணர்வுதான் எங்களோடது. எங்களால எப்படிப் பெண்கள் சேப்டிக்கு பிரச்சனை வரும்’னு சிரமப்பட்டு புரிய வைக்க ட்ரை பண்னேன். ஆனா அவர் எதையும் காதுல வாங்கின மாதிரி தெரியல. ‘நீங்க பெண்ணெல்லாம் இல்ல. ஆண்தான். இறங்குங்க’ன்னு போலிஸை வச்சு வெளியே தள்ளிட்டார். பிரச்சனை பெருசாக, ஸ்டேஷன்ல இருந்த மக்கள் கூடிட்டாங்க. 20 நிமிஷமா பிரச்சனை நடந்தும், யாரும் எங்களுக்கு சப்போர்ட் பண்ணல. எங்க இனத்தோட மரியாதையை விட்டுக் கொடுக்கவும் எங்களால முடியல. நாங்க எங்க உரிமையை எவ்வளவோ கேட்டும், ‘நீங்க எல்லாரும் பெண்கள் என்று பொய் சொல்லி ஏறி கலாட்டா பண்றீங்கன்னு புகார் கொடுத்துடுவேன்’னு கொச்சையான வார்த்தைகள்ல திட்டி அவமானப்படுத்தினார். கோவம், அவமான உணர்ச்சியின் உச்சத்துல நாங்க உடைகளை கிழிச்சிட்டு, ‘நாங்க பெண்கள்தான். பார்த்துக்கோங்க’ னு நிர்வாணமா நின்னோம்’ என்று கண் கலங்கச் சொன்னார்.

 

மானம் காக்க நிர்வாணம் மறைக்கும் நிலை போய் 
மானம் காக்க நிர்வாணத்தை ஏற்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட கொடுமையா 
இது?

 

இவர்கள் செய்தது சரியா தவறா என்ற பட்டிமன்றத்திற்குப் போகும் முன், நாம் 
செய்வது சரியா என்று சற்றே சிந்திப்போம். இவர்களை நம்மில் 
ஒருவராகத்தான் பார்க்கவில்லை. அப்படிப் பார்க்காத பட்சத்தில் இவர்களின் 
குறைந்தபட்சத் தேவைகளையாவது தீர்த்தோமா?

 

இரயிலில் இவர்களுக்கு தனிப் பெட்டி உண்டா?
பொது இடங்களில் இவர்களுக்கான கழிப்பறைகள் உண்டா?
எத்தனை வேலைகளுக்கான விண்ணப்பப் படிவங்களில் இவர்களுக்கான 
பாலினம் குறிப்பிட்டுள்ளது?

 

இவர்கள் உணவு, உடை, உறைவிடத்திற்காவது வழி செய்தோமா?
இந்தக் கேள்விகளைத் தங்களையே கேட்டுக் கொள்ளாத, விடை தேடாத 
எவருக்கும் இவர்களை ஒதுக்கவோ, ‘எப்பப்பாரு பிச்சை எடுக்கறாங்க’ என்று 
சொல்லவோ உரிமை கிடையாது என்பது ஞாபகம் இருக்கட்டும்.

 

திருநங்கை குழந்தைகளைத் தூக்கி எரியாமல், அரவணைத்திடும் தாய் 
தந்தையருக்குத் தலை தாழ்த்திவிட்டு,

 

இனி கவிதை…

வானவில் மனிதர்கள் 

 

ரயில் பெட்டியில் கைநீட்டப் பார்க்கிறோம்…
கடைத் தெருவில் கைதட்டப் பார்க்கிறோம்…
கடற்கரையில் கைகாட்டப் பார்க்கிறோம்…

 

நாம் கண் கொண்டு பார்க்காததால்…
இவர்கள் கையேந்தப் பார்க்கிறோம்.

 

உடம்பால் ஒருபால் 
உணர்வால் ஒருபால் 
ஊடுருவிப் பார்க்காத 
கண்ணுக்கு இருபால் 
எனப் பலவண்ணம் கொண்டு வாழும் 
வானவில் மனிதர்கள்.

 

நாமோ…
எதைப் பார்க்க வேண்டுமோ 
அதைப் பார்க்காமல்,
சதை பார்த்து பழக பழக்கப்பட்ட 
வாடிக்கை மனிதர்கள்.

 

இவர்கள் 
குரல் கேட்டால் அச்சம் 
விரல் பட்டால் கூச்சம்.

 

இவர்களை 
அறிந்து கொள்ளவும் நினையவில்லை 
தெரிந்துகொள்ளவும் முனையவில்லை 

 

அங்க பேதம் பார்த்துதான் 
அங்கீகாரம் கொடுக்கிறோம்.

 

இவர்கள் குரலும் உடலும் 
உடைத்துப் பார்த்தால் 
அது நாலா பக்கமும் நெளிந்திருக்கும் 

 

உண்மை ஒன்று உணர்வோமா?

 

அறிவோடு அனுபவம் கலந்தால் தான் கல்வி 
பொருளோடு பொய் வந்து கலந்தால் தான் கவிதை 
இரவோடு நிலவொன்று கலந்தால் தான் பௌர்ணமி 
நிலவோடு இருள்வந்து கலந்தால் தான் அமாவாசை 
முகிலோடு முகிலொன்று கலந்தால் தான் மழை 
விதையோடு துளி வந்து கலந்தால் தான் முளை 
கல்லோடு உளி வந்து கலந்தால் தான் சிலை 
மண்ணோடு உரம் வந்து கலந்தால் தான் விளைச்சல் 
மனதோடு உரம் வந்து கலந்தால் தான் வெற்றி 

 

இவை போலவே…

 

ஆணோடு பெண்மை கொஞ்சம் கலந்தால் தான் ஆண்மை 
பெண்ணோடு ஆண்மை கொஞ்சம் கலந்தால் தான் பெண்மை.

 

இப்படி 

 

வாழ்வில் எல்லாம் பிணைந்திருக்க 
ஒன்றோடொன்று இணைந்திருக்க 
இந்தக் கலவை மட்டும் கவலைக்கிடமானது ஏனோ ?

 

இது சற்றே 
அளவை மீறிய கலவை 
அவ்வளவு தான்.
அவ்வளவே தான்.

 

மிகுதியான விகிதத்தால் 
அகதியான கூட்டமா இது?

 

என்ன குற்றம் செய்தவர்கள்?

 

அறிவியல் வகுப்புக்கு, தெரியாமல் கணக்கு நோட்டு மாற்றி எடுத்து 
வந்த குழந்தை போலவே இவர்களும்…

 

இங்கு குற்றம் சொல்லப்பட வேண்டியவன் ஒருவனே.
அவன் சற்றும் சிந்திக்காத நம் இறைவனே…

 

சரியான பானத்தைத் 
தவறான பாத்திரத்தில் ஊற்றியது 
அவன் தானே.

 

இந்தக் கண்ணாடி சமூகமும் 
இவர்கள் மறக்க நினைக்கும் முகத்தைத்தானே 
எல்லாப் பக்கமும் பிரதிபலிக்கிறது.

 

ஒன்று புரிய வேண்டும்.

 

இவர்கள் அந்த முகத்தை 
மறக்க நினைப்பவர்கள்.
மறைக்க நினைப்பவர்கள் அல்ல.

 

சினிமா கூடப் பெரும்பாலும் இவர்களை 
வேடிக்கையாகவே சித்தரிக்கிறது.
இவர்களின் முன்னேற்றக் கயிறுகளின் முனைகளை 
அவ்வப்போது கத்தரிக்கிறது.

 

வேரை அடியோடு வெட்டிய செடியை 
வளரச் சொல்லித் திட்டிய கதையாய் 
வேலை ஏதும் கொடுக்காமல் இவரை 
பிச்சைத் தட்டுதான் பிழைப்பா என்றோம்.

 

உலகம் முற்றும் ஒதுக்கியதால் 
உடம்பை விற்றுப் பிழைக்கின்றனர்.

 

விடுத்து ஒதுங்கிய தாய்,
வெறுத்து ஒதுக்கிய தோழர்,
தடுத்து நிறுத்திடும் சமூகம்…

 

உதிர்த்துவிட்டு உலகம் போனாலும் 
எதிர்த்து நின்று போராடும் வீர இனம்.

 

உலகம் மதிக்கும் என்று 
வேஷம் போட்டு வாழ்பவர் மத்தியில்,
உலகமே எதிர்த்தாலும் 
வேஷம் கலைக்கப் போராடும் போராளிகள்.

 

சாதி மதம் ஒழித்த 
சரித்திரக் கூட்டத்தின் பிரதிநிதிகள் 

 

நம்பிக்கையின் நடமாடும் அடையாளங்கள்.

 

இப்படியொரு பிள்ளை 
இனியொன்று பிறந்தால் 
பெற்றோர்களே ! பெருமையோடு சொல்லுங்கள்…
என் பிள்ளை திருநங்கை என்று.

 

ஆனால் எப்படியும் காலம் ஒன்று வரும்.
கூவாகத்தில் கூண்டு ஒன்று தயாரிக்கப்படும்.

 

குற்றத்தை ஒப்புக்கொண்டு 
கூண்டோடு கூண்டில் நிற்போம் நாம்.

 

அன்று இவர்களின் கைத்தட்டல் ஒலியே நமக்கு சவுக்கடி…

 

அதற்கு முன் எனக்கென்று ஓர் ஆசை 
இறைவன் போல் படைக்கின்ற பேராசை…

 

‘தனியொருவனுக்கு உணவில்லை எனில் 
ஜகத்தினை அழித்திடுவோம்’
என்றான் பாரதி.

 

இங்கோ தனியொரு கூட்டமே தனிமையில் 

 

இவர்களின் 
உணவு, கனவு 
இரண்டுமே பறிக்கப்பட்டுவிட்டது.

 

அவசரமாய்…
இந்த உலகம் கொஞ்சம் அழிக்க வேண்டும்…

 

மீண்டு வா பாரதி…
மீண்டும் வா பாரதி…

 

அணுகுண்டு பாஷையோடு 
ஒரு பக்க மீசையோடு…

 

இவர்கள் அருகில் அமர்த்தி அரவணைக்கப்பட வேண்டியவர்கள்…

 

அவர்கள் பாலை அவர்கள் முடிவு செய்யட்டும் 
நாம் சர்க்கரை மட்டுமே கலப்போம்…

 

மனிதர்களை மனிதர்களாய்ப் பார்க்கும் பக்குவம் வர வேண்டும்.

அந்த உணர்வுக்கு அப்பால்…
இந்த உலகத்தில் முப்பால்...

 

- பாடலாசிரியர் விவேக் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles