நாடகமே உலகம் 

Saturday, July 30, 2016

வருடத்திற்கு இரண்டு நாடகங்கள் நடத்த வேண்டும் நடிகர் அமரேந்திரனின் கனவு!

கபாலி படத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ் ரசிகர்கள் அனைவரையும் வசீகரித்திருக்கிறார் நடிகர் அமரேந்திரன். பலே பாண்டியா, ஜில் ஜங் ஜக், விடியும் முன் உட்பட சில திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் இவர். நாடகமே உலகம் என வாழ்ந்த இவர், அதனை விட்டு வெளியேறியதும் சினிமாவில் நுழைந்ததும் கால மாற்றத்தின் ஓட்டத்தில் நிகழ்ந்தவை.

எந்த தயாரிப்பும் இல்லாமல் மேடையில் ஏறி அதகளம் செய்வது போல, மிக இயல்பாக உரையாடத் தொடங்கினார் அமரேந்திரன். அவரது பேச்சில், நாடகத்தின் மீதான காதலும் நடிப்பின் மீதான மோகமும் நிறைந்திருந்தது. 

 

“சிறு வயதில் மாறு வேஷம் போடுவது, குரல் மாற்றிப் பேசுவது பிடிக்கும். ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, என் சகோதரியின் உடையை அணிந்துகொண்டு, கண் மை மற்றும் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு, அரைகுறை ஹிந்தி பேசி, பக்கத்து வீட்டு சிறுமி வந்தது போல, என் பாட்டியை ஏமாற்றுவேன். அதோடு, காமிக்ஸ் புத்தகங்களில் வரும் ஹீரோக்கள் போல நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது” என்று சொல்லியவாறே, தான் நாடகக்கலைக்குள் மூழ்கிய விதத்தைச் சொன்னார் அமரேந்திரன். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், சென்னை அலையன்ஸ் பிரான்சைஸில் பிரெஞ்ச் மொழி கற்கச் சென்றிருக்கிறார். அப்போது பாண்டிச்சேரியைச் சேர்ந்த சில்வன் என்பவரின் அறிமுகம் கிடைத்திருக்கிறது. அவரது நாடகக்குழுவில் சேர்ந்தபோது, அமரேந்திரனுக்கு பிரெஞ்ச் முழுதாகத் தெரியாது. ஆனாலும், தனது நடிப்புத் திறமை மூலமாக, அவரிடம் நற்பெயர் பெற்றிருக்கிறார். இந்த அனுபவம், பிரெஞ்ச் மொழியைக் கற்கும் நம்பிக்கையை அவருக்குத் தந்திருக்கிறது. 

 

கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றதும், பிரான்சிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பிற்காக விண்ணப்பித்திருக்கிறார் அமரேந்திரன். அதற்கான நேர்காணலின்போது, அந்தப் பல்கலைக்கழகத்தைத் தேர்ந்தெடுத்தற்கான காரணத்தைச் சொல்லியிருக்கிறார். அங்கு நாடகக்கலை பகுதிநேரமாகக் கற்பிக்கப்படுகிறது என்பதே அது. அதன்பிறகு, பகுதிநேர உதவித்தொகையுடன் நாடகக்கலையைக் கற்கும் வாய்ப்பு, அவருக்குக் கிடைத்திருக்கிறது. அதன்பிறகு, பிரான்சின் ஸ்டிராஸ்பெர்க்கில் அமைந்துள்ள நேஷனல் ஸ்கூல் ஆப் டிராமாவில் நாடகப்பயிற்சி பெற்றிருக்கிறார். டெல்லி, கொல்கத்தாவில் அதனை அரங்கேற்றியபின், மீண்டும் பிரான்ஸ் சென்று அந்த நாடகத்தினை நிகழ்த்தியிருக்கிறார். தன்னைவிட வயதில் சிறியவர்கள், அர்ப்பணிப்புடன் பயிற்சி பெறுவதைப் பார்த்து வியந்திருக்கிறார். 

 

இந்தியா திரும்பியதும், சாமுவேல் பெக்கெட் என்பவரின் நாடகத்தை இயக்கி, நடித்திருக்கிறார் அமரேந்திரன். அதோடு, ஸாத், மொலியர், ரச்சின், கோர்னைல், ஜான் ஜெனே ஆகியோரின் படைப்புகளை மேடையேற்றியிருக்கிறார். கல்லூரியில் தன்னுடன் பிரெஞ்ச் படித்தவர்கள் மற்றும் அலையன்ஸ் பிரான்சைஸில் பயிற்சி பெற்றவர்களை ஒருங்கிணைத்து, ‘சூத்திரதாரி’ என்ற நாடகக்குழுவை உருவாக்கியிருக்கிறார். இந்த நாடகங்களுக்கு ஒத்திகை செய்ய, இடத்தை வழங்கியது அலையன்ஸ் பிரான்சைஸ். அதனால், இவர் தனது நாடகத்திற்காகக் கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லை. ஒரு நாடகம் முடியும் முன்பே, தனது குழுவினருடன் சேர்ந்து, அடுத்த நாடகத்திற்கான வேலைகளைச் செய்து வந்திருக்கிறார் இவர். காரணம், அனைவரையும் தொற்றியிருந்த நாடகத்தின் மீதான மோகம். 

 

இங்கிருந்த நாடகச் சூழலையும் பிரான்சில் கற்றுக்கொண்ட வித்தையையும் இணைத்து, நடிப்புப் பட்டறை நடத்தியிருக்கிறார் அமரேந்திரன். இதன் முதல்கட்டமாக, நடிப்புப்பிரதிகளை வாசிப்பது நடைபெறும். தொடர்ந்து, அதனை மனதில் நிறுத்தும் பயிற்சி நடத்தப்படும். அதன்பிறகு, யார் எந்தக் கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து நடிப்பது என்று முடிவாகும். 90களின் இறுதியில் தொடங்கி 2001ம் ஆண்டு வரை, தனது குழுவினருடன் இணைந்து நாடகங்களை இயக்கி வந்திருக்கிறார் இவர். அதன்பிறகு மொழிபெயர்ப்பாளர் வேலை, வெளிநாடு பயணம், திருமணம் என்று அமரேந்திரனின் நாடக வாழ்க்கை திசை மாறியிருக்கிறது.

 

திருமணத்திற்குப் பின்பு, மொரீஷியஸ் நாட்டிற்கு இடம்பெயர்ந்திருக்கிறார் அமரேந்திரன். அந்த நாட்டு மக்களுக்கு ஆங்கிலமும் பிரெஞ்சும் தெரியும். இதனால் மொழிபெயர்ப்பாளர் வேலையைக் கைவிட்டு, நடிப்புப் பட்டறை நடத்தியிருக்கிறார். அங்குள்ள கலாச்சாரத்துறை அமைச்சகம் சார்பாக, குழந்தைகளுக்குப் பயிற்சிகள் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து அதுபோன்ற வேலைகள் வராததால், ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜீரியாவிற்குச் சென்றிருக்கிறார் அமரேந்திரன். அதிகப் பணிச்சுமையையும் குடும்பத்தைப் பிரிந்துவாடும் துயரத்தையும், அந்த வேலை தந்திருக்கிறது. ”அங்கு மலேசியா, சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த தமிழர்களும் இருந்தார்கள். வேலை முடிந்து வெளியே எங்கும் சொல்ல முடியாத அளவிற்கு, உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தது. இதனால், எங்களுக்கு ஒரே பொழுதுபோக்காக டிவி மட்டுமே இருந்தது. ஒருநாள் தமிழின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில், நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தோம். ’கலக்கப்போவது யாரு’ போன்ற நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்போது, அங்கு கூட்டம் நிரம்பி வழியும். ஒருமுறை டிவி பார்த்தபோது, அதில் ‘ஓரம்போ’ டிரெய்லர் இடம்பெற்றது. அந்தப் படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி, எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். புஷ்கர் எனது நாடகக்குழுவில் நடித்தவர். அதனைப் பார்த்ததும், தமிழ்சினிமாவில் நடிக்கும் எண்ணம் உண்டானது. எனது மனைவியிடம், இந்த விருப்பத்தைச் சொன்னேன். ’ஒரு வருஷம் டைம் கொடுக்கறேன், அதுக்குள்ளே பெரிய ஆளாயிடு’ என்று சொன்னார் எனது மனைவி. சென்னை வந்து, கிட்டத்தட்ட ஏழு வருடங்களாகிறது. இன்னும் பெரிய ஆளாக ஆகவில்லை. ஆனால், சினிமாவில் சாதிக்கும் ஆசை மட்டும் அப்படியே இருக்கிறது” என்று சொல்லும்போது, விதவிதமான பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காத சோகம் தென்படுகிறது. 

 

சில படங்களில் முக்கிய வேடமேற்று நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான கபாலியால் இவர் மீது வெளிச்சம் பாய்ச்சிருக்கிறது. பொது இடங்களில் பலர் இவரை அடையாளம் கண்டு பேசுகிறார்கள். “அது ஒரு நல்ல விஷயம். எப்போதும் பொருட்கள் வாங்கும் கடையின் உரிமையாளர், எனது முகத்தைப் பார்த்து ‘கபாலி’ என்று ஆச்சர்யம் ஆகிறார். இருபத்தைந்து நாடகங்களுக்கு மேல் நடித்தாலும், என்னைப் பலருக்க்கு அடையாளம் தெரியாது. கபாலியில் சிறிய வேடத்தில் நடித்தபோதும், அதிகமான மக்களைச் சென்று சேர்ந்திருக்கிறது. சினிமாவுக்கென்று பெரிய வீச்சு இருப்பதை மறுக்கக்கூடாது” என்றவாறே, சமீபத்திய வரவேற்பைப் பகிர்ந்து கொள்கிறார். 

 

திரைப்படத்தில் இருந்து, மெதுவாகத் தற்போதைய நாடக ‘ட்ரெண்ட்’ குறித்து பேச்சு திரும்பியது. ’சமீபத்தில், அலையன்ஸ் பிரான்சைஸில் ‘ஷார்ட் அண்ட் ஸ்வீட் தியேட்டர் பெஸ்டிவல்’ நடந்தது. இது இளம் திறமையாளர்களுக்கு நல்ல வாய்ப்பு. இதன் மூலமாக, நிறைய குழுக்கள் உருவாக முடியும். ஆனால், தற்போது சென்னையில் முழு நீள நாடகம் நடத்துவதற்கு, வெகு சிலரே இருக்கின்றனர். மும்பை, பெங்களூரு, கொல்கத்தாவில் இந்த நிலை இல்லை. நாடகத்தைப் பார்க்கும் ரசிகர்கள், இங்கு குறைவு. வரலாற்று நாடகங்களையோ, சபா நாடகங்களையோ பற்றி, நான் பேசவில்லை. நவீன நாடகங்களைப் பற்றி மட்டுமே, இங்கு சொல்கிறேன். மக்களின் ரசனை மாறினால் மட்டுமே, அதனை ரசிப்பவர்கள் அதிகமாவார்கள். 

 

அது மட்டுமல்லாமல், தற்போது நாடக உலகம் முழுமையாக கமர்ஷியல்மயமாகி விட்டது. இப்போது ஒத்திகை நடத்த, பணம் கொடுக்க வேண்டிய நிலைமை. நாங்கள் இரண்டு, மூன்று மாதங்கள் ஒத்திகை பார்த்த காலங்களில், ஒருபோதும் பணம் கொடுத்ததில்லை. இலவசமாகத்தான், ஒத்திகை நடத்தும் இடங்களைப் பயன்படுத்தினோம். விருப்பமிருப்பவர்கள், நாங்கள் நாடகம் நடத்தும்போது பார்த்துச் செல்வார்கள். இப்போது, அந்த நிலைமை தலைகீழாகி இருக்கிறது. எனக்கு, இலவசமாகத்தான் நாடகங்கள் நடத்த விருப்பம்” என்று பொட்டிலடித்தாற்போலச் சொல்கிறார் அமரேந்திரன். 

 

வணிகமயமாகிப்போன நாடக உலகில், இளைய தலைமுறையினர் நிறைய பரீட்சார்த்தமான முயற்சிகள் நிகழவேண்டும் என்பது இவரது விருப்பம். ”மக்கள் வருவார்களா, லாபம் வருமா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், நிறைய நாடகங்கள் போட வேண்டும். இதற்கு உதாரணமாக, நான் வெவ்வேறு இடங்களில் நாடகம் நடத்தியிருக்கிறேன். நண்பரது வீட்டின் மொட்டைமாடியில் நாடகம் நடத்தியிருக்கோம். அந்த நடிகரின் வீட்டினர் டீ, போண்டா கொடுத்தனர். வந்திருந்த 30, 40 பேரும் அருகில் வசிப்பவர்கள்தான். நானும் ஒரு அபார்ட்மெண்டில் பரீட்சார்த்த நாடகம் ஒன்றை நடத்தியிருக்கிறேன். இதுமாதிரியான முயற்சிகளைப் பலரும் மேற்கொள்ளலாம். 

 

நாடகம் மூலமாக, பொதுமக்களிடம் பேசும் திறமை, நம்பிக்கை, வலுவான உடல்திறன் என்று எல்லாமே கிடைத்தது. மூன்று மாதம் சேர்ந்து ஒரு நாடகம் நடத்தும்போது, நம்மை நாமே உணர்வோம். ஒருவரையொருவர் புரிந்து கொள்வோம். அது ஒரு குழுவின் கூட்டு முயற்சி. குழு மனப்பான்மை என்ற வார்த்தையைக் கண்டுபிடிக்கும் முன்பே, நாங்கள் நாடகக்குழுக்களில் அதனைச் செயல்படுத்தியிருக்கிறோம். பேஸ்புக், வாட்ஸப்பில் மூழ்கிக் கிடக்கும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து, இரண்டு மாதங்களுக்கு ஒரு நாடகம் நடத்தலாம். இதனால், அவர்களை அடிக்கடி புதுப்பித்துக்கொள்ள முடியும்” என்று இவர் சொல்லும்போது, புதிய திசை தென்படுகிறது. 

 

அவரிடம், ‘நாடகங்களில் நடிப்பதால், எளிதாகத் திரைப்படத்தில் நுழைய முடியுமா?’ என்ற கேள்வியை முன்வைத்தோம். ”படப்பிடிப்பில் என்னைப் பார்ப்பவர்கள், ‘நீங்கள் நாடகங்களில் நடித்திருக்கிறீர்களா?’ என்று கேட்பார்கள். நாம் எல்லோருமே நடிகர்கள்தான். ஒரு மனிதர் கணவராக, ஆசிரியராக, குழந்தைக்குத் தந்தையாக, வெவ்வேறு வேடங்களில் இருக்கிறார். ஷேக்ஸ்பியர் சொல்வதுபோல, உலகமே நாடக மேடைதான். சோகமாக நடிக்க வேண்டுமானால், உங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த சோகத்தை நினைத்து நடிக்கலாம். நாடகத்தில் நடித்தால் மட்டுமே சினிமாவில் ஜொலிக்கலாம் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது. காரணம், நாடக அனுபவமே இல்லாமல் பலர் சினிமாவில் வெற்றி பெறுகிறார்கள். அதுமாதிரி, வொர்க்‌ஷாப் மூலமாகவும் நடிகராக முடியாது. அதன் மூலமாக, நமக்குள் இருக்கும் நடிகனை வெளிக்கொணரலாம். ஆனால் அதுதான் நடிகனாக வழி என்றால், எனக்கு அதில் உடன்பாடில்லை” என்று அதிர்ச்சி தருகிறார்.

 

கடந்த சில ஆண்டுகளாக, அமரேந்திரன் நாடகம் எதுவும் இயக்கவில்லை. ‘எதிர்காலத்தில் மீண்டும் நாடகம் இயக்குவீர்களா?’ என்று கேட்டோம். ”ஆங்கிலம், பிரெஞ்சில் நாடகம் நடத்தும் ஆசை இருக்கிறது. ஆனால், இப்போதுள்ள இளைய தலைமுறைக்கு நேரமே இருப்பதில்லை. ஆனாலும், எனக்கான குழுவைக் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறேன். வருடத்திற்கு இரண்டு பெரிய நாடகங்கள் நடத்த முடியும் என்று நம்புகிறேன். இதுதான் எனது கனவு” என்று நம்பிக்கையுடன் உரையாடலை முடித்தார் அமரேந்திரன். 

 

நாடகம், திரைப்படம் என்று இரண்டு களங்களிலும் அமர்க்களம் செய்வதற்கான காலம் கனிந்திருக்கிறது. அமரேந்திரனின் பேச்சு, அதனைத் தெளிவாக உணர்த்துகிறது. 

- உதய் பாடகலிங்கம் 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles