ஒரு புகைப்படத்துல மொத்தக் கதையையும் சொல்லணும்! ‘ஸ்டோரி டெல்லர்’ பற்றிப் பேசும் சுதர்ஷன் பாலாஜி

Saturday, July 30, 2016

சுதர்ஷன் பாலாஜியைப் பார்க்கும்போது, ‘பாகுபலி’ பிரபாஸின் உடலமைப்பும், ராணாவின் முகவெட்டும் நினைவுக்கு  வருகிறது. தொழில்நுட்பத்தை அழகாகப்  பயன்படுத்தி, நூதன முறையில் பேஷன் துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்  இந்த ஸ்மார்ட் இளைஞர். ‘‘என்னங்க... மாடல்ஸை சுடுறீங்களே... உங்களை எப்போ  பெரிய திரையில் பார்க்கலாம்..?’’ என்றதும், மெல்லிய வெட்கப் புன்னகையுடன் பேசத் தொடங்கினார்.

 

புகைப்படத்துறைக்குள் நீங்க வந்தது எப்படி?

எங்க வீட்ல, என்னை சி.ஏ படிக்கச் சொன்னாங்க. எனக்கு அதுல அவ்வளவா  விருப்பம் இல்ல. பி.காம் செகண்ட் இயர் படிச்சிட்டிருக்கும்போது,  போட்டோகிராஃபி வகுப்புகளுக்குப் போக ஆரம்பிச்சேன். அப்புறம் லயோலா கல்லூரியில சேர்ந்து, எம்.எஸ்சி., விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சேன்.  படிக்கும்போதே, நிறையப் புகைப்படங்கள் எடுத்தேன். அதுல, பேஷன்  புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. அப்படியே இந்தத் துறைக்கு வந்துட்டேன்.

 

‘ஸ்டோரி டெல்லர்’ என்றால் என்ன?

நான் எடுக்கிற புகைப்படங்களை, ‘சுதர்ஷன் போட்டோகிராஃபி’ங்கிற பேர்லதான் செஞ்சுட்டிருந்தேன். ஒரேயொரு புகைப்படம் மூலமா,  பார்க்கிறவங்களுக்கு எவ்ளோ கதைளை நாம சொல்ல முடியும்? அப்படி ஒரு கான்செப்டை யோசிச்சு வெச்ச பேருதான் ‘ஸ்டோரி டெல்லர்’. நிறைய வெளிநாட்டு மேகஸின்களைப் பார்க்கும்போது, ‘நாம ஏன் இந்த மாதிரி டெக்னிக்ஸ் எல்லாம்  யூஸ் பண்ணக்கூடாது?’ன்னு நினைச்சேன். அதாவது, ஒரு செலிப்ரிட்டியோ, ஆர்ட்டிஸ்டோ, அவங்க போர்ட்போலியோவை அவங்களே பார்த்துக்கலாம். இந்த கான்செப்ட், டைரக்டர் வெங்கட்பிரபுவுக்கு ரொம்பப் பிடிச்சது. அதனால, அவரே  ‘ஸ்டோரி டெல்லரை’த் தொடங்கி வெச்சாரு. போட்டோ எடுத்து, அதை எடிட் செஞ்சு, பேஸ்புக்குல போஸ்ட் பண்ணுற வரைக்கும், எல்லா வேலைகளையும்  நானேதான் செய்றேன்.

 

உங்களோட புகைப்படமெடுக்கும் பாணி எப்படிப்பட்டது?

சென்னையில பேஷன் கான்செப்ட் அவ்வளவா இல்லை. என்னோட எண்ணம் வித்தியாசமா இருக்கிறதுனால, எல்லாருக்கும் ரொம்ப ஈஸியா பிடிச்சுடுது. மத்தவங்ககிட்டே  இருந்து, நான் என்னை வேறுபடுத்திக் காட்டிக்கணும்னு நினைக்கிறேன். அதோட, மாடல்களை இயல்பா காட்டணும்னுதான் யோசிப்பேன். எந்த ரீ டச் வொர்க்கும் செய்ய மாட்டேன். ‘புகைப்படங்கள்லதான் இவங்க அழகா இருப்பாங்க, நேர்ல  வேறுமாதிரி இருப்பாங்க’ன்னு சொல்லுறதை, நான் விரும்பலை.

 

மறக்க முடியாத ஃபோட்டோஷூட்?

என்னோட முதல் அண்டர் வாட்டர் ஷூட்தான். இது எனக்குப் பல விருதுகளை வாங்கிக் கொடுத்துச்சு. இன்னும் கேட்டீங்கன்னா, இதுதான் என்னோட சவாலான  ஷூட்டுன்னும் சொல்லலாம். ஏன்னா, என்கிட்டே சொந்தமா கேமரா இல்லை. வாடகைக்கு எடுத்துதான் ஷூட் செய்வேன். அதனால பொறுப்புகள் அதிகம். கேமராவைப் பத்திரமா திருப்பிக் கொடுத்தாகணும். தண்ணிக்குள்ள ஷூட்  பண்ணும்போது, மூன்றரை லட்ச ரூபாய் கேமராவை பத்திரமா பார்த்துக்கணும்.  ஆர்ட்டிஸ்ட் டைமையும் வேஸ்ட் பண்ணாம இருக்கணும்.

 

உங்களைப் பொருத்தவரை புகைப்படக் கலையின் இலக்கணம் என்ன?

இன்னைக்கு இருக்கிற சூழல்ல, உலகமே டிஜிட்டல் மயமாகிடுச்சு. முன்னாடியெல்லாம் பிலிம் கேமரால ஷூட் பண்ணுவாங்க. உடனே அவுட்புட் பார்க்க முடியாது. இப்போ யார் வேணும்னாலும், கையில கேமரா எடுத்து போட்டோ எடுக்கலாம்னு ஆகிடுச்சு. அதனால, இதுதான் இலக்கணம்னு நாம சொல்ல முடியாது. இப்போ, செல்போன்லயே போட்டோ ஷூட் எடுக்கிறாங்க. அதோட வீடியோஸும் சுலபமா எடுக்கிறாங்க. டிஜிட்டல் உலகத்துல எல்லாமே சாத்தியம்.

 

உங்க பிட்னஸ் ரகசியம்?

என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லாரையும், நான் பிட்னஸ் அடிமைகள்னுதான் சொல்லுவேன். அதனால, அந்தப் பழக்கம் எனக்கும் ஒட்டிக்கிச்சு. உடம்பை ஆரோக்கியமா வெச்சுக்கிறது நல்லதுதானே?! நான் பள்ளி நாட்கள்ல இருந்தே, உடம்பை பிட்டா வச்சுக்க ஆரம்பிச்சுட்டேன். என்கிட்ட நிறையப் பேர்,‘சினிமாவுல நடிக்க ட்ரை பண்றீங்களா?’ன்னு கேட்டிருக்காங்க. வாய்ப்பு  வந்தா, நடிக்கலாம்! சுதர்சன் பாலாஜியின் சுறுசுறுப்பான செயல்பாட்டையும் முறுக்கேறிய உடற்கட்டையும் பார்க்கும்போது, அது விரைவில் நிறைவேறும் என்றே தோன்றுகிறது. 

- பவித்ரா 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles