விவசாயிகளின் நிலை பரிதாபமானது- ஆவணப்பட இயக்குநர் க.ராஜீவ் காந்தி

Monday, September 18, 2017

விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து, ‘கொலை விளையும் நிலம்’ என்ற ஆவணப்படத்தை இயக்கியதன் மூலமாக, பலரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் பத்திரிகையாளரான க.ராஜீவ்காந்தி. தொடர்ந்து, ‘விஷால் ஆந்தெம்’ இசை ஆல்பத்தை இயக்கி, வெளியிட்டதோடு, ட்ரெண்டிங்கிலும் இடம்பிடித்துள்ளார்.

அண்மையில், நடிகர் விஷால் அழைத்து பாராட்டிய சந்தோஷத்தில் இருந்தவரை சந்தித்தோம்.

‘கொலை விளையும் நிலம்’ ஆவணப் படம் குறித்து?

“மனிதனின் வாழ்வாதாரம் என்று அடிபடுகிறதோ? என்று அவன் பாதுகாப்பின்மையை உணர்கிறானோ? அன்றுதான் அவனுக்குள் தற்கொலை எண்ணம் உருவாகிறது. தமிழ்நாட்டில் பல விவசாயிகள் தற்கொலையை நோக்கி, தள்ளப்படுவதன் காரணமும் இதுதான்.  தற்போதைய சூழலில், செய்திகளுக்கு ஒரு நாள் மட்டுமே ஆயுள். ஆகவே நாம் சில முக்கியமான பிரச்னைகளை எளிதில் மறந்து விடுகிறோம். ஆகவே, விவசாயிகளின், உண்மை நிலையை ஆவணப்படுத்தினால்தான் அது எளிதில் மக்களை சென்றடையும் என எண்ணினேன். அப்படி உருவானதுதான் ‘கொலை விளையும் நிலம்’. இந்த ஆவணப்படத்தில் வரும் பாடலை இயக்குநர் ராஜுமுருகன் எழுத, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து, பாடியுள்ளார். சமுத்திரக்கனி பின்னணி குரல் கொடுத்துள்ளார். இதை பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன்!”

படத்துக்கான களப்பணியில் திடுக்கிட வைத்தது எது?

“அடிப்படையில், நான் ஒரு பத்திரிக்கையாளர் என்பதால், தஞ்சாவூர் மாவட்டத்தை தேர்ந்தெடுத்து, படப்பிடிப்பை நடத்தினேன். இதுபோன்ற முயற்சிகளுக்கு கமர்ஷியல் வரவேற்பு கிடைக்காது. ஆனாலும், விடாமல் முயற்சித்தபோது, பத்திரிகையாளர் கவிதாவும் வேறு சிலரும் உதவ முன்வந்தனர். பிறகே, இந்த ஆவணப்படம் சாத்தியமாயிற்று!.

உலகமயமாக்கலின் தாக்கத்தால், நம்முடைய சிந்தனைகள் நாலா பக்கமும் சிதறிவிட்டது. நம் நாட்டினுடைய முதுகெலும்பான விவசாயத்தைப் பற்றிய எண்ணம் நமக்கு எள்ளளவும் இல்லை. உண்மையில் நாம் விவசாயிகளை மறந்துவிட்டோம். கடந்த ஏழு மாதங்களாக, அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக, விவசாயிகளின் நிலைமை படுமோசமாகிவிட்டது. விவசாயத்தில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம். தற்போதைய சூழலில் விவசாயிகளின் நிலை மிகவும் பரிதாபமானது. ‘ஆறு நிமிடத்திற்கு ஒரு விவசாயி மரணிக்கிறார்’ என்கிற செய்தியே என்னை கலங்க வைத்தது!.”

படத்துக்கான வரவேற்பு எப்படி?

“‘கொலை விளையும் நிலம்’ படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள். அதுமட்டுமல்லாமல் அதனை அடுத்து தளத்திற்கும் கொண்டு சென்றார்கள்; தொடர்ந்து ஊக்குவித்தும் வருகிறார்கள்!

‘விஷால் ஆந்தெம்’ இயக்கிய பின்னணி?

“தமிழ் சினிமாவுக்கு கிடைத்த தன்னிகரில்லாத தலைவன் நடிகர் விஷால். தன்னுடைய கால்ஷீட்டைக் கூட பொருட்படுத்தாமல், நடிகர் சங்க வேலைகளில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவருடைய ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஒரு சர்ப்ரைஸ் கொடுப்பேன். இந்த பிறந்த நாளுக்கு அவருக்கென்று ஒரு ஆல்பம் உருவாக்கினா என்னன்னு தோணிச்சு. பாடலாசிரியர் முருகன் மந்திரம், இசையமைப்பாளர்  இஷான் தேவ் உடன் இணைந்து இயக்கினேன். “ஆல்பத்தை பார்த்துவிட்டு, “கொஞ்சம் ஓவராக இருக்கு. அதோட கூச்சமாகவும் இருக்கு. இதற்குப் பிறகாவது மக்களுக்கு எதையாவது செய்யணும். எப்பொழுதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் இந்த ஆல்பத்தை கேட்பேன்”னு சொன்னாரு விஷால் அண்ணா. நமக்கு இது போதாதா பாஸ்?!” சந்தோஷமாக முடிக்கிறார் ராஜீவ்காந்தி.

 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles