கோடை பயணம் - துண்டை உதறித் தோளில் போட என்ன தயக்கம்?

Monday, May 15, 2017

கோடை விடுமுறைக் காலம் வந்து விட்டது. ஆங்காங்கே மழை விட்டு விட்டு பெய்கிறது தமிழ்நாட்டிற்குள். காரில் ஏசி போடத் தேவையில்லை சில இடங்களில். பார்க்கிற இடங்களிலெல்லாம் தற்காலிகப் பசுமை கொஞ்சம் எட்டிப் பார்க்கிறது. இந்த நேரத்திலும் வீட்டை விட்டுக் கிளம்பாமல், அலுவலகத்தில் சீட்டை கெட்டியாகப் பிடித்து உட்கார்ந்து கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

ஆனாளப்பட்ட அரசியல்வாதிகளே  ஒன்றும் பேராமல், சுற்றுப் பயணம் என்கிற பெயரில் ஊர்சுற்றிப் பார்க்கக் கிளம்பி விட்டனர். இதற்குப் பிறகும் எல்லோரும் சும்மா உட்கார்ந்திருந்தால் டூர் என்கிற வார்த்தைக்கே அசிங்கம்!.

இந்த டூர் என்றதும் ஒரு விஷயம் சொல்லத் தோன்றுகிறது. காஷ்மீர் போய் வர இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் மிகச் சொற்பமானதுதான் என நண்பர் ஒருத்தர் சமீபத்தில் சொன்னார். உண்மையில் நான் ஆயிரக்கணக்கில் ஆகும். எதுக்கு இந்த நேரத்தில் இப்படியொரு செலவு என யோசித்துக் கொண்டிருந்தேன். என்னைப் போல பலரும் யோசிக்கலாம். உண்மையில் சீட்டில் பெல்ட் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் மனநிலையில் இருந்து மாறினாலே போதுமானது. ஆக பயணம் செய்வதற்கு பணம் பிரச்னையில்லை. மனம்தான் பிரச்னை.

ஒருபக்கம் தொல்காப்பியத்தில் முந்நீர் வழக்கம் என தமிழர்களின் கடல் கடக்கும் வேட்கையைப் பற்றிச் சொல்லி இருக்கிறார்கள். முந்நீர் வழக்கம் என்றால், மூன்று நேரம் முறைவைத்து கட்டிங் அடிப்பது என நீங்கள் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல. கல்விக்காக, செல்வம் சேர்ப்பதற்காக, போர் நடவடிக்கைகளுக்காக என்று பிரித்திருக்கிறார்கள். அதிலும் முந்நீர் வழக்கம் மகடுவோடு இல்லையாம். பெண்களோடு போகக் கூடாதாம். அதனால்தான் முன்னீர் வழக்கம் போகிற இடத்தில் எல்லாம் வப்பாட்டிகளை வைத்துக் கொண்டார்கள். அப்பா பெயர் தெரியாத குழந்தைகளை உலகெங்கும் விதைத்து விட்டுக் குற்றவுணர்வு இல்லாமல் கிளம்பி வந்தார்கள் என்பது தனிக்கதை. இப்படி தமிழ் இனம் ஒரு காலத்தில் பல்வேறு காரியங்கள் நிமித்தமாக சீட்டை விட்டு எழுந்து வெளியே போய்ச் சுற்றி விட்டு வந்தார்கள் என்பதைச் சொல்வதற்காகச் சொல்கிறேன். மற்றபடி உங்களைக் குழந்தைகளை உற்பத்தி செய்கிற தொழிற்சாலை மேனேஜராக மாறச் சொல்லவில்லை. நீங்கள் மாற நினைத்தாலும் முடியாதெனச் சொல்லி பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்ந்து விட்டது உலகம். தந்தை தெரியாத பையன்களை உலகிற்குத் தராமல் இருப்பதற்குக் காரணம் உங்களது தாராளம் அல்ல. ஒரு குட்டியூண்டு சாதனம். அவ்வளவுதான். குற்றவுணர்வைக் கொல்வதுகூட இந்த குட்டியூண்டு சாதனம்தான். பயணம் என்றால் பலதையும் மனசு யோசிக்கத்தான் செய்யும் என்பதால் விட்டு விடுங்கள்.

இப்படி ஒருபக்கம் ஒரு பிரிவினர் உலகம் முழுக்க பயணம் செய்தார்கள். ஆனால் இன்னொரு பக்கம் "நான் இந்த ஊரு எல்லையைக்கூடத் தாண்டியதில்லை" என்று பெருமை பேசியே செத்துப் போன பல பெரிசுகளை நானறிவேன். பயணம் போவது, புதிய அனுபவம் ஆகியவற்றிற்கு நேர் எதிரான மனநிலையே தமிழர்களின் அடியாழத்தில் புதைந்து கிடக்கிறது. ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு நாட்டாமை செய்வது. விளையாட்டாக இந்த மனநிலையை இப்படிச் சொல்லிக் கிண்டலடிப்பார்கள். 'சொந்தத் தெருவில் சொறிநாய்கூடக் குரைக்கும். வெளி இடங்களில் போய் குரைத்து விட்டு வரலாம்' என்றுதானே பலர் பல்வேறு காரணங்களுக்காகப் பயணம் செய்தார்கள் சொல்லுங்கள்.

மிகச் சிலரே இந்த அடியாழக் குறிப்பை உதறியிருக்கிறார்கள். அவர்களையும் 'பரதேசம் போனவர்' என தமிழ்ச் சமூகம் ஒதுக்கி வைத்தே வேடிக்கை பார்த்திருக்கிறது. என்னுடைய குடும்பத்திலேயே இப்படி ஒருத்தர் கிளம்பிப் போய் ஊர் சுற்றி விட்டு ஜடாமுடியுடன் திரும்பி வந்து நின்றார். இந்தியாவில் ஒரு நிலத்தை விட்டு விட்டு இன்னொரு நிலத்திற்கு நகரும் போது ஜடாமுடி பாதுகாப்பு. அப்படி வந்து நின்றவரிடம் "துன்னூறு வாங்கிக்கோடா. நம்ம சித்தப்பன் தான்" என்றார்கள். பிறகு அவர் ஓய்வாய் அவர் செய்த பல பயணங்களைப் பற்றி எனக்குச் சொன்னார்.

அவர் செய்த பயணத்திற்கும் ஜடாமுடிக்கும் சம்பந்தமே இல்லை. சோறு திங்கறதுக்கு மட்டும்தான் கோவிலுக்குப் போயிருக்கிறது சித்தப்பூ! ஆனால் இதுபோல ஜடாமுடி போங்காட்டம் போல அல்லாமல் 90களுக்கு அப்புறம் பயணம் செய்வது குறித்த விழிப்புணர்வு கொஞ்சம் பெருகியிருப்பது ஆறுதல் தரும் விஷயம்தான். ஆனாலும் இன்னமும் சாகும் வரை மண்ணை விட்டு வெளியேற மாட்டேன். பயணம் என்று கிளம்பினால் நேரடியாக பரமபதம்தான் என்று சொல்பவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய?

எழுத்தாளர் சுந்தர ராமசாமி வீடுகிளம்புதலை பயணம், ஊர்சுற்றல் என இரண்டு வகையாகப் பிரிக்கிறார். திட்டமிட்டு செய்யப்படுவது பயணம். இலக்கில்லாமல் சுற்றுவது ஊர்சுற்றல். இந்த இரண்டாவது வகையில்தான் புதுப்புது அனுபவங்கள் சாத்தியமாகும். சமீபத்தில் ஒரு செய்தி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு டீக்கடை வைத்திருக்கும் குழந்தைகள் இல்லாத வயதான தம்பதி வருடம் முழுக்க மாடாய் உழைக்கிறார்கள். வருடத்திற்கு பத்து நாட்கள் கடையை இழுத்து மூடிவிட்டு நாடு சுற்றக் கிளம்பி விடுகிறார்கள். வாழ்க்கையை ரசனையாக கொண்டாடத் தெரிந்தவர்கள் இவர்கள். இவர்களைப் பார்க்கையில் நாமும் அப்படி இருக்க வேண்டுமென சிறகடிக்கிறது மனசு.

உங்களுக்கும்கூட இருக்கலாம். செய்ய வேண்டியதெல்லாம் துண்டை உதறித் தோளில் போடுகிற வேலை மட்டும்தான். உங்களது பாக்கெட்டில் எவ்வளவு இருக்கிறது என்று தெரியாமல், இங்கே போங்கள், அங்கே போங்கள் என்று எப்படிச் சொல்ல முடியும்? சிம்பிளாகச் சொல்ல வேண்டுமெனில் எனக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். இந்த நிமிடத்தில் என் பாக்கெட்டிலும் அவ்வளவு பணம் இல்லையென்பதால் 'பாங்காக்'கிற்கெல்லாம் போக முடியாது.

இந்தா இருக்கிற மேகமலைக்கு ஒரு எட்டு போய் விட்டு வாருங்கள். கை படாத காடு. தேனி போய் சின்னமனூர் வழியாக மேலேறும் மேற்குத் தொடர்ச்சி மலை. பஸ் வசதி கொஞ்சம் குறைவுதான். விசாரியுங்கள். அதைக்கூடச் செய்ய மாட்டீர்களா? மேலே இரண்டு டீக்கடைகளில் முறை வைத்து சோறு பொங்கிப் போடுவார்கள். காசு கொடுத்தால் கெடா விருந்தும் நிச்சயம். ஒரு கிலோ சமைத்துத்தர நூற்றியம்பது ரூபாய் என்பது குறைவுதானே? 

மற்றபடி மேகமலையில் ட்ரக்கிங் போகலாம். மொட்டைப் பாறையொன்று இருக்கிறது. இன்னும் கொஞ்சம் மேலேறி தேயிலை பேக்டரிகளையும் காபி பேக்டரிகளையும் பார்க்கலாம். பசுமையோடு இருப்பதற்கு உத்தரவாதம். எந்த நேரம் வேண்டுமானாலும் மழை, புது மனைவி மாதிரி சிணுங்கிக் கொண்டே இருக்கும். பட்ஜெட்டிற்கு ஏற்ற சிணுங்கல்!.

- எழுத்தாளர் சரவணன் சந்திரன்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles