விவசாயிகளை காக்க நீர் ஆதாரம் தேவை!  இயற்கை ஆர்வலர்கள் அலெக்ஸ்சாண்டர் - செங்குட்டுவன்!

Monday, May 15, 2017

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின் பல மாறுதல்கள், உலகம் முழுக்க நிகழத் தொடங்கியுள்ளன. அதில் ஒன்று ஐ.டி. துறை. அதிக சம்பளத்தை பெற்றுத் தந்த இந்த துறையில் தற்போது ஆட்குறைப்பு என்பது அதிகரித்துள்ளது. அது தமிழகத்தில் உள்ள பல எம்.என்.சி.களில் எதிரொலித்துள்ளது. தற்போது கணிப்பொறி துறையில் பணியாற்றும் இளைஞர்களில் பலர், அதிகமான வருமானம் தந்த தங்களுடைய வேலைகளை உதறிவிட்டு, விவசாயம் நோக்கி அடியெடுத்து வைக்கும் போக்கு அதிகரித்துள்ளது.

காரணம், எதிர்காலத்தில் பணம் கொழிக்கும் துறையாக இருக்கப்போவது விவசாயம் என்பதால் தான்!. அப்படி நாட்டின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, விவசாயத்துக்கு, பல இளைஞர்கள் இன்று படையெடுத்து வருகின்றனர். பத்து வருடத்திற்கு முன்பே இதில் கால்பதித்த இயற்கை ஆர்வலர்களான அலெக்ஸான்டர் மற்றும் செங்குட்டுவனைச் சந்தித்தோம். 

மொட்டைமாடித் தோட்டத்தில் பல புதுமையான விஷயங்களை செய்து, அதனை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறார்கள். அலெக்ஸிடம் ''எதிர்காலத்தில் விவசாயம், என்னவாகப் போகிறது?" என்றதற்கு, “இயற்கை விவசாயத்தை நோக்கித் தான் நம்ம எல்லோருடைய பயணமும் இருக்கு. இயற்கை விவசாயம் என்பது, வெறும், இயற்கை முறை உரங்களை போட்டு செடிகளை வளர்ப்பது இல்லை என்பதை தெளிவா புரிஞ்சிக்கணும். நம்ம தட்பவெப்பத்துக்கு ஏற்ற மாதிரி மண்ணுல விளையுற மரங்களை வளர்ப்பது தான் இயற்கை விவசாயம். இது தெரியாம, ஹைபிரிட் மரங்களை வளர்த்து தயார் செய்யுறாங்க. உதாரணத்துக்கு சொல்லணும்னா, தர்பூசணியை முழுவதுமாக வளர்த்து அதனை 60 கிலோமீட்டருக்கு மேல கொண்டு போக முடியாது. பழம் வெடிச்சுடும். அப்படி வெடிக்க விடாம, பாதுகாக்க, சில ரசாயனங்களை உபயோகப் படுத்தறாங்க. அது மட்டுமில்லாம, ஹைப்ரிட் வெரைட்டி செய்யுறாங்க. இதுனால நமக்கு இயற்கையான சத்துள்ள பழங்கள் கிடைக்கிறது இல்லை. 

தொழில் நுட்பம் தெரியாத இளைஞர்களே இப்பொழுது கிடையாது. விவசாயத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்கணும்னா, நம்ம டெக்னாலஜியை பயன்படுத்துறது தப்பே கிடையாது. அதற்கு முதல் படியாக நாங்க என்ன செஞ்சு இருக்கோம்னா, விவசாயத்துக்கு ஏற்ற மொபைல் செயலியை உருவாக்கி இருக்கிறோம். அதுக்கு முதல்ல, உங்க செடிகள்ல நீங்க டிவைஸை பொருத்திக் கொள்ளணும். எந்த அளவுக்கு நீர் தேவை, தேவையில்லை போன்ற விபரங்களை உங்க மொபைலுக்கு அனுப்பி வச்சிடும். நீங்க ஊருக்கு போனாலும் உங்கள் தோட்டத்தோட நிலவரங்களை உங்களுக்கு சொல்லிடும். சிசிடிவி கேமரா பொருத்திடீங்கன்னா நீங்க, எங்கே இருந்தாலும், உங்க தோட்டத்தை மானிட்டர் செஞ்சுக்கலாம். 

முக்கியமாக, அவங்களுக்கு, நீரின் இன்றியமையாமையை சொல்லி கொடுக்கணும். இப்போ நாங்க சொட்டு நீர் பாசனத்தைதான் வலியுறுத்திட்டு வர்றோம். மக்களும், அதுல தங்களை ஈடுபடுத்திக்கிறதை பார்க்கிறோம். நம்ம நாட்டுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இப்ப இருக்குற இளைஞர்களால் கொடுக்க முடியும் என்கிற நம்பிக்கை நிறையவே இருக்கு" என்று உறுதியாக அவர் கூறியதும், அருகில், இருந்த செங்குட்டுவன் அவர்கள் சில மூலைகை செடியின் பயன்களை நமக்கு சொல்கிறார். இயற்கையே, மருந்தாகவும், உணவாகவும் நமக்கு இருப்பது வியப்பையும் ஆச்சரியத்தையும் தருகிறது. அவற்றில் சில,

சர்க்கரைத் துளசி 

  • இது தொண்டை கரகரப்பு, வாய் துர்நாற்றம்  மற்றும் சளிக்கு ஏற்றது. இலையோட சுவை பெப்பர் மின்ட் போல இருக்கும். 

இன்சுலின்  

  • சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு மிகவும் நல்லது. கீரையாக சமைத்து சாப்பிட்டு வந்தால், பசியின்மை குணமாகும். அரைத்து வெளிப்பூச்சாக முகத்தில் பூசினால், முகம் பொலிவு பெரும். 

அக்ராகார்  

  • பல் வலிக்கு ஏற்றது. பல்லில் ஏற்படக்கூடிய கிருமிகளை அழிக்கும். 

மஞ்சள் கரிசலாங்கண்ணி  

  • மஞ்சள் காமாலை, முடி உதிருதல் போன்றவைகளை குணமாகும். இயற்கை ஹேர்டையாக பயன்படுத்தலாம்.

சிறுபீளை 

  • சிறுநீரகக் கற்களுக்கு ஏற்றது. அதிகமாக வயல் வெளிகளில் காணப்படும் தாவரம்.

நிலவேம்பு

  • நூறு பாகற்காய் கசப்பு இதன் ஒரு இலையில் இருக்கும். மலேரியா போன்ற நோய்க்கு ஏற்ற மருந்து. பாம்புக்கடி, விஷக்கடிக்கு ஏற்றது.

தவசிக்கீரை 

  • எல்லா கீரைகளிலும் இருக்கக்கூடிய சத்துக்கள் மொத்தமும் இக்கீரையில் இருக்கிறது.

 
என்று மருத்துவரைப் போல் இவர் சொன்ன குறிப்புகள் வியக்க வைக்கிறது. நம் முன்னோர்கள் மருந்து என்று பேணி பாதுகாத்த தாவரங்களை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இனிமேலும், சுதாரித்துக் கொண்டு, நாம் இவற்றை நம் வீட்டிலேயே பயிரிட்டுக் கொள்ளலாமே. இதை விட இவர்கள் கொடுத்த பூனைமீசை டீ சுவையாகவே இருந்தது. அதற்கான, செய்முறையையும் செங்குட்டுவன் கூறுகிறார், 

"சீரகத்துளசி, செடியில் வளரும் பூவானது பூனை மீசையை போலவே இருப்பதானால் பூனை மீசை என்கிறோம். சீரகத் துளசியின்  10 இலைகளை தண்ணீரில் நன்றாக கொதிக்கவிட்டு, கருப்பட்டி சேர்த்து அருந்தினால் சுவையான 'பூனைமீசை டீ' தயார். இது உடலில் சேரக் கூடிய அதிக கொழுப்பு, உப்பு போன்றவைகளை வெளியேற்றும்.” என்று கூறி, நமக்கும் அந்த டீயைக் கொடுத்தார். சுவை அருமையாகவே இருந்தது.

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles