24 நாடுகள்.. 70 நாட்கள்.. நான்கு பெண்கள்..  ஒரு பயணம் 

Wednesday, March 15, 2017

“நான், ருக்மணி, மூகாம்பிகா மற்றும் ப்ரியா நாங்க நாலுபேரும் காரை ஒட்டிகிட்டு கோயம்புத்தூர்ல இருந்து லண்டன் போகப்போறோம். அதுதான் XPD 2470” என்று பேச ஆரம்பிக்கும்போதே, நமது ஆச்சர்யத்தை மொத்தமாக ’கபளீகரம்’ செய்துவிடுகிறார் கேப்டன் மீனாட்சி. தன்னைப் போலவே பயணத்தில் ஆர்வம் கொண்ட தோழிகளுடன் இணைந்து உலகை உலாவர இருக்கிறார் இவர். 

“உலகத்துல இருக்குற எல்லா நாடுகளுக்கும், நான் பயணிச்சிருக்கேன். அதனால, கார்ல ஒரு சாகசப் பயணம் போகணும்னு எனக்குள்ள ஒரு ஆசை இருந்துச்சு. அதை சில நண்பர்கள்கிட்ட சொன்னேன். 2018ம் ஆண்டுக்கு பிறகு பார்க்கலாம்னு அவங்க சொன்னாங்க. அப்புறம், என்னோட இந்த ஆசையை ஒரு சமூகவலைதளத்துல வெளிப்படுத்தியிருந்தேன். என்னைப் போலவே ஆர்வம் கொண்ட தோழிகள் அறிமுகமானாங்க; நாங்க ஒண்ணு சேர்ந்து கூட்டணி ஆகிட்டோம்” என்று புன்னகைக்கிறார் மீனாட்சி. 

’அதென்ன, XPD 2470?’ என்று பெயர்க்காரணம் கேட்டதும், ருக்மணி பேசத் தொடங்கினார். “XPD 2470 என்றால் எக்ஸ்பேடிஷன், 24 நாடுகள், 70 நாட்கள். அது மட்டுமல்லாம, 240000 கிலோ மீட்டர் தொலைவு இதில் அடங்குகிறது. அதோடு, நமக்கு சுதந்திரம் கிடைத்த 70வது வருடம் இது என்பதையும் சொல்கிறது. எந்த நாட்டிலிருந்து சுதந்திரத்தை வாங்கினோமோ, அதே நாட்டுக்கு காரிலேயே பயணிக்கப்போறோம். 

இந்தியாவிலிருந்து மியான்மர் வழியாக தாய்லாந்து, லாவோஸ், சீனா, மத்திய ஆசியா, ரஷ்யா, ஐரோப்பா போயிட்டு கடைசில லண்டன் ரீச் ஆகறோம். அங்கே இந்திய நாட்டின் பெண்கள் எப்படி முன்னேறியிருக்காங்கன்னு காட்டப் போறோம். இதுக்கு, எங்களுக்கு பதினோரு நாடுகள்ல விசா தேவைப்படுது, இதுவரைக்கும் பத்து நாடுகள்ல விசா கொடுத்துட்டாங்க. 

அதேமாதிரி, நமக்கு பாஸ்போர்ட் எப்படி தேவையோ, அதேபோல அங்க கார்களுக்கு காரனேங்கிற (carnet) பெர்மிட் ரொம்ப அவசியம். எந்தக் காருக்கு பெர்மிட் எடுக்குறோமோ, அதைத்தான் பயணத்துல உபயோகிக்கணும். அதையும் வாங்கறோம். இந்தப் பயணத்துக்கு, எங்களுக்கு மொத்தமா 60 லட்சம் செலவாகுது. ரோட்டரி எங்களுக்கு ஸ்பான்சர் பன்றாங்க, அதைத்தவிர, எங்களோட சொந்தக் காசையும் போடுறோம். பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கல்வி ஒரு நாட்டுக்கு எவ்வளவு முக்கியம், அதனால வீடும் நாடும் எப்படி முன்னேறுதுன்னு சொல்லத்தான் இந்தப் பயணமே.

பொதுவா சாகசப் பயணம் மேற்கொள்றவங்க, நாலு அல்லது அஞ்சு கார் எடுத்துக்கிட்டு ஒரு குழுவாக பயணிப்பாங்க. முதல் தடவையா, நாங்க நான்கு லேடீஸ் மட்டும் புறப்படுறோம். அதுக்காக, கார் மெக்கானிசம் எல்லாம் கத்து வச்சிருக்கோம். எது வந்தாலும், எதிர்த்து தைரியமா பேஸ் பண்ண முடிவெடுத்துட்டோம்” என்று தங்களது பயணம் பற்றித் தெளிவாகச் சொல்கிறார் ருக்மணி. 

இந்தக் குழுவில் வயதில் சிறியவர் மூகாம்பிகா. ’பயணத்தில் எதிர்பாரா நெருக்கடி வந்தால் எப்படி சமாளிப்பீர்கள்’ என்று கேட்டதற்கு, “ஹெல்த் இன்ஷுரன்ஸ் எடுத்திருக்கோம். ஆண்களைக் காட்டிலும், பெண்கள் உடல் சார்ந்த விஷயத்துல கொஞ்சம் பலவீனம்தான். நாங்க நான்கு பேர் இருக்கோம். ஒருத்தருக்கு ஒருத்தர் மாத்தி மாத்தி அட்ஜஸ்ட் பண்ணிட்டு ஒட்டிப்போம். அதேமாதிரி, எங்கே போனாலும் வீட்டு சாப்பாடு வேணும்னு ஏக்கமா இருக்கும். எங்களால முடிஞ்சா அளவுக்கு பேக் செஞ்சு எடுத்துக்கப்போறோம். 

தேவை இல்லாத பிரச்சினைகளை அவாய்ட் பண்ண, ‘கோ லோக்கல்'னு முடிவு செஞ்சு வச்சிருக்கோம். அந்தந்த ஊர்ல என்ன கிடைக்குதோ, அதைத்தான் சாப்பிடப்போறோம். என்னை தவிர, இவங்க எல்லாரும் வெஜிடேரியன்ஸ். இவங்க பாடுதான் என்ன ஆகப்போகுதுன்னு தெரியல” என்கிறார் இவர்.

’இந்தப் பயணம் புரட்சிக்கான ஒரு வித்து என்று சொல்லலாமா?’ என்ற கேள்விக்கு, சட்டென்று ‘ஆமாம்’ என்கிறார் மீனாட்சி. “இந்தியாவுக்கு வர்ற வெளிநாட்டவர்கள், புதுடில்லியில இருக்குற ஸ்லம்மை பார்க்குறதுக்கே அதிகமா வருவாங்க. நம்ம நாட்டுல எத்தனையோ நல்ல இடங்கள் மற்றும் விஷயங்கள் இருக்கு. அவங்களைப் பொறுத்தவரை, நாம இன்னும் பின்தங்கி இருக்கோம்னு நினைச்சிட்டு இருக்காங்க. அந்த நிலை மாறணும். அதுக்கு இந்தப் பயணம் பேருதவியா இருக்கும்னு நினைக்கிறோம்.

இன்றைய நவீன பெண்கள் பலவிதமான மனஅழுத்தம், மன உளைச்சல்களுக்கு ஆளாகுறாங்க. அதனைத் தவிர்க்க, உங்களோட பிரச்சனைகளை தொடக்கத்துலேயே பேசிடுங்க. பயணம் மேற்கொள்ளுறது, புதுவிதமான மக்களைப் பார்க்குறது கூட ஒருவிதத்துல ஸ்ட்ரெஸ் பஸ்டர்தான். உங்களுக்குப் பிடித்தமான வேலைகளைச் செய்யுங்க. பிரச்சனைகளை மனசுலேயே வச்சுக்காம, வெளியில உரக்கச் சொல்லுங்க; நண்பர்கள்கிட்ட பகிர்ந்துக்கோங்க. உங்க மனசும் வாழ்க்கையும் ரொம்ப லேசா மாறிடும்” என்று கோரஸாக சொல்கின்றனர் இந்த சாகசப் பெண்கள். பயணம் இனிதே சிறக்க வாழ்த்திவிட்டு விடைபெற்றோம். 

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles