பிளாஸ்டிக் பயங்கரவாதம்! - கவர் ஸ்டோரி 

Thursday, June 15, 2017

“என்னப்பா... நம்மூரிலும் பிளாஸ்டிக் அரிசி நுழைஞ்சிடுச்சாமே... ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி... கடைசில மனுஷன கடிச்ச கதையாயிருக்கே...” பேருந்தில் பயணிக்கும்போது பக்கத்து இருக்கையில் இருந்த ஒரு வயதான மூதாட்டியிடம் இருந்து வந்த புலம்பல் இது. ஆமாம், இப்போது இந்தியாவின் வைரல் டாபிக் அதுதான். அயனாவரம் பேருந்து நிலையம் தொடங்கி அரியலூர் பஸ் ஸ்டாண்டு வரை இதே பேச்சு தான்.

காரணம், ரொம்ப சிம்பிள். தமிழக மக்களின் அடிப்படை ஆதார உணவான அரிசி மீதே பயங்கரவாத போர் தொடுக்கப்பட்டிருப்பதுதான்!. 
 
முன்னரே பிளாஸ்டிக் முட்டை, முட்டைகோஸ் என அரசல்புரசலாக சமூக வலைதளங்களில் விவாதித்துக்கொண்டிருந்த மேட்டர் தான் என்றாலும், அதற்கெல்லாம் பெரிசாக அலட்டிக்கொள்ளாத சமூகம், அரிசி விஷயத்தில் அலர்ட்டாகிவிட்டது!
 
தஞ்சை நெற்களஞ்சியம் 
 
தமிழகத்துக்கு என்று பல சிறப்புகள் உண்டு. அவற்றில் முக்கியமானது, தஞ்சை நெற்களஞ்சியம். “உலகுக்கே சோறு போடும் தஞ்சை...!” என்றால் அது மிகையில்லை. அப்படியாக எப்போதும் குளிர்ந்து காணப்படும் தஞ்சாவூரில் இருந்துதான் சுமார் எழுபது சதவிகித நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. மீதி உள்ள 30 சதவீதத்தை பிற மாநிலங்களில் தான் உற்பத்தி செய்கிறோம். அப்படியாக இந்தியாவிலேயே அதிகமான நெல்லை விளைவிக்கும் மாநிலத்துக்கு உள்ளே பிளாஸ்டிக் அரிசி நுழைந்துவிட்டது என்றால், சும்மா இருக்குமா மாநில அரசு? விடுவார்களா நெற்பயிர் மற்றும் அரிசி உற்பத்தியாளர்கள்? விளைவு, தமிழகம் முழுவதும் உள்ள அரிசி ஆலைகளில் அதிரடி ரெய்டுகள், விசாரணைகள் ஆய்வுகள். பரபரப்பாயினர் மக்கள். விழித்துக்கொண்டனர் விவசாயிகள்!.
 
பிளாஸ்டிக் அரிசி
 
உண்மையிலேயே பிளாஸ்டிக் அரிசி குறித்த விழிப்புணர்வு நம்மிடம் ஏற்பட்டுவிட்டதா? என்றால், “இல்லை” என்பதே நேர்மையான பதில். ஆனால், பலருக்கும் அதுகுறித்து கேள்விகள் முளைக்கத்தொடங்கி விட்டன. குட்டை குழம்பிவிட்டால் மீன் பிடித்தல் எளிதுதானே. இப்போது பிளாஸ்டிக் குறித்த தேடல்கள் அதிகமாகி விட்டன. கூகுளில் அதிகமாக தேடப்படும் வார்த்தையாக இப்போது மாறியுள்ளது பிளாஸ்டிக் ரைஸ்!. நாமும் அலசினோம். வந்து விழுந்த பதில் இதுதான். ரெஸின் எனும் ரசாயன மூலப்பொருளிலிருந்துதான் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ரசாயனத்தை உருவாக்கி, பிளாஸ்டிக் அரிசி என்ன?. தேவைப்பட்டால்... பிளாஸ்டிக் கோதுமை, ரவை, பாசிப்பயிறு, தட்டைப்பயிறு... என நீங்கள் எந்த வடிவத்திலான பொருளையும் உருவாக்கலாம். தற்போதைய எல்லையற்ற பெரு வணிகம் இதுதான். அதன்மீதுதான் விழுந்துள்ளது அதிரடியான கிடுக்குப்பிடி!
 
ஆதாரவேர் சீனாவில்!
 
சில வருடங்களுக்கு முன் சீனாவில் பரபரப்பான ஊழல் ஒன்று, உலகம் முழுவதும் உள்ள அரசியல்வாதிகளை திரும்பிப் பார்க்க வைத்தது. யூகிக்க முடிகிறதா உங்களால்? யெஸ். உங்கள் கணிப்பு மிகச் சரியே. அரிசியில் தான். அப்போது, மற்றொரு விஷயமும் வெளிச்சத்துக்கு வந்தது. அது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக விரும்பி உண்ணும் நூடுல்ஸில் பிளாஸ்டிக். இது புதுசா இருக்கே? என புருவம் உயர்த்தாதீர்கள். அந்த நூடுல்ஸில் கலக்கப்பட்ட ரசாயனப் பொருள்தான் ரெஸின். இப்போது இதுதான் றெக்கைக் கட்டி பறந்து வந்து இந்தியாவில் நுழைந்திருக்கிறது. அதை முறியடிக்க வேண்டாமா நாம்? 
 
சிக்கியது இங்கேதான்!
 
கர்நாடகா, தெலுங்கானாவில்தான் பிளாஸ்டிக் அரிசி, சர்க்கரை குறித்த அலாரம் முதலில் அடித்தது. அங்குள்ள மக்கள் சுறுசுறுப்பாகினர். ஐ.டி. இளைஞர்களும் மீம்ஸ் கிரியேட்டர்களும் சும்மா விடுவார்களா? தெறிக்க விட்டனர். விளைவு, அரசே களத்தில் இறங்கி, துரிதமாக வேட்டையை ஆரம்பித்தது. அந்த வேட்டையில் சிக்கியது எல்லாம் மூட்டை கணக்கில். விழிபிதுங்கி மட்டும் நிற்கவில்லை; அதிர்ச்சியில் உறைந்துபோய் விட்டனர் அதிகாரிகள்!. செய்திகள் காட்டுத் தீயாய் இல்லை சுனாமி வேகத்தில் வைரலானது பிளாஸ்டிக் ரைஸ்!
 
அரசு உத்தரவு!
 
சோஷியல் மீடியாவின் பலமே அது நாம் நினைக்கும் நேரத்திற்கு முன்னதாக நினைத்தவரை சென்று சேர்ந்திருக்கும் என்பதுதான். அது பிளாஸ்டிக் ரைஸ் விஷயத்திலும் நடந்தேறியது. அதிகம் பேர் விவாதிக்கும் விஷயமாக, டிரெண்டிங்கில் வந்து நின்றது அரிசி டாபிக். பொங்கிவிட்டனர் சமூக ஆர்வலர்கள். மேலும் சூடானது தமிழக அரசு. அதிரடியான உத்தரவுகளால், நாலா திசையிலும் பறந்தனர் உணவு தர நிர்ணய கட்டுப்பாட்டு அதிகாரிகள். குறுக்கும் நெடுக்குமாக நீட்டப்பட்ட மீடியா மைக்குகளுக்கு முன்னால் திணறியது உணவு பாதுகாப்பு துறை. துரிதமாக நடந்த விசாரணையின் முடிவில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் அப்படியான கலப்படங்கள் எதுவும் நடைபெறவில்லை என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்து “மேட்டரை ஆஃப்” செய்தார்கள். ‘சமூக வலைதள வாசிகளின் வேண்டாத வேலை’ எனவும் குற்றம் சாட்டினர். ஆனாலும், நிற்கவில்லை விவாதம். தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினரே கூட்டாக பேட்டி அளித்தனர். “பிளாஸ்டிக் அரிசியை உற்பத்தி செய்வது காசு அதிகம் செலவாகும் விஷயம். அதற்கு பேசாமல் அரிசியையே உற்பத்தி செய்துவிடலாம்” என்றனர். மேலும், “அரிசி எங்களின் அரசி. அவளுக்கு தீங்கு விளைவிக்க மாட்டோம். காத்து நிற்றலே எம் கடமை ” என சத்தியம் செய்தனர். பிறகே, அரிசி விஷயத்தில் பொதுமக்கள் கொஞ்சம் ஆசுவாசமாயினர்.
 
அச்சத்தை தவிர்ப்போம்! 
 

“சரி, பிளாஸ்டிக் அரிசி இப்போது நம் ஊருக்குள் எட்டிப் பார்க்காமல் இருக்கலாம். ஆனால், வராமல் போய்விடுமா?” என்றொரு பேச்சும் எதிர்திசையில் இருந்து வரவே செய்கிறது. இதை எப்படி நாம் எதிர்கொள்ளலாம்?. இதுபோன்ற பொருட்கள் நேரடியாக சிறு வணிகர்களின் வழி வருவதில்லை. எல்லாம் பெருவணிகர்களின் வழியே ஊடுறுவும் என்பதை நாம் கொஞ்சம் விழிதிறந்து பார்க்க வேண்டும். நமது ஏரியாவில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்றால், முதலில் நம்மை வரவேற்பது முன்னால் திறந்த நிலையில் இருக்கும், விதவிதமான அரிசி மூட்டைகள் தான். ஆனால், சூப்பர் மார்க்கெட்டில் நீங்கள் அப்படி காண இயலாது. அதற்காக சூப்பர் மார்க்கெட்டுகளே மோசம் என்ற அச்சமும் அவசியமில்லை. எந்தப் பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கிக்கொண்டு, கார்டை தேய்க்காமல் அதை கொஞ்சம் ஆய்வு செய்து பெறுவது நமக்கு மட்டுமல்ல; நாட்டுக்கே நலம் பயக்கும்!

- கிராபியென் ப்ளாக்
 
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles