கவர் ஸ்டோரி!   வெற்றிவாகை சூடிய அரசுப் பள்ளிகள்!

Wednesday, May 31, 2017

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக நான்கு பேர் கூடும் இடத்தில் எல்லாம் தவறாமல் இடம் பிடிக்கும் டாபிக்குகள் எது தெரியுமா?. எது சிறந்த பள்ளி?, அரசா? மெட்ரிக்கா? சி.பி.எஸ்.இ.யா?. அரசு சார்ந்த சாராத பள்ளிகளில் எந்தப் பள்ளிகள் எல்லாம் மாணவர்களை முதலிடத்தில் நிறுத்த பாடுபடும்?. தனியார் பள்ளிகளின் சாதனைகள் எத்தகையதாக இருக்கிறது? நாட்டின் உயரிய பதவிகளில் உள்ளவர்கள் எல்லாம் எந்தப் பள்ளியில் இருந்து வந்தவர்கள்?.

அரசுப் பள்ளிகளில் எல்லாம் மாணவர்களை சேர்த்துவிடவே கூடாது? இப்படியாக இன்னும் நீளுகின்றன பட்டியல்கள். அதையொட்டிய விவாதங்களும்  நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு அடிப்படையான காரணம் என்னவாக இருக்கும் என்பதை பலரும் யூகித்திருப்பீர்கள். 
 
புதிதாக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டில் பல சீர்த்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. அதில் கல்வித்துறையும் அடக்கம். மத்திய அரசு பள்ளிகளில் இந்தி மொழி கட்டாயம் உள்ளிட்ட அதிரடியான பல அறிவிப்புகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக அரங்கேறி வருகிறது. அதில் முக்கியமானதாக ‘நீட்’ எனும் புதிய தேர்வு முறையை அமல்படுத்தி உள்ளது. 
 
இந்தியா முழுக்க உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து, அங்கே மருத்துவ மாணவர்களுக்கான இடங்களை நிரப்பும் புதிய முறையையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அந்தவகையில், நீட் தேர்வின் வழியே தேர்ச்சி பெறும் மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர தேர்வு செய்யப்படுவார்கள். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பதினைந்து சதவீத இடங்களில் பிற மாநிலத்தவர்களால் கொண்டு நிரப்பப்படும். அதனால், அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு மருத்துவ இடம் என்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த நீட் தேர்வுக்கு ஒரு பக்கம் ஆதரவும், மற்றொரு பக்கம் எதிர்ப்பும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. “நகரங்களில் கட்டமைப்பு வசதிகளோடு படிக்கும் மாணவர்களும், கிராமப்புறங்களில் எந்தவித வசதியும் இன்றி பயிலும் மாணவர்களும் ஒன்றாகி விட முடியுமா?. இதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்” எனும் கமெண்ட்டுகள் சோஷியல் மீடியாக்களில் அதிகரித்துவிட்டன. இப்படியான களேபேரங்களுக்கு இடையே நீட் தேர்வும் நடந்து முடிந்துவிட்டது.
 
நீட் தேர்வின் போது மாணவர்கள் நடத்தப்பட்ட விதம் குறித்து எல்லாம் அனைத்து நாளிதழ்களும் அலசிவிட்டதால் அதற்குள் இப்போது நாம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு அடுத்தபடியாக நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய அம்சம் ஒன்று உள்ளது. அதுகுறித்துதான் இப்போது நாம் விவாதிக்க வேண்டி உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு மாணவர்களின் மீது பெற்றொர்கள், ஆசிரியர்கள், சமுகம் என அனைத்து தரப்பிலிருந்தும் முதல் மதிப்பெண்ணை நோக்கி அழுத்தம் தரப்படுகிறது. இதனால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகி, கடந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 39 ஆயிரத்து 775 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் கூடும் எனவும் அது எச்சரிக்கிறது. இது குறித்த விழிப்புணர்வு நம் எல்லோருக்குமே தேவை.
 
இது ஒருபுறமிருக்க, மேலும் ஒரு புதிய மாற்றமும் நம்மை வந்தடைந்திருக்கிறது. அது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் கிரேடு முறை. இதுநாள் வரை மாநிலத்திலேயே முதல் மதிப்பெண், குறிப்பிட்ட சப்ஜெக்டில் முதல் மதிப்பெண், மாவட்ட, வட்ட, கிராம வாரியாக இந்த இந்த மாணவர்கள் எல்லாம் வெற்றி வாகை சூடினர் என்கிற வரலாறு நமக்கு சொல்லப்படும். அதுமட்டுமின்றி, முதல் மதிப்பெண் பெற்றவரை தினசரி பத்திரிகைகள் பேட்டி கண்டு, அந்த மாணவருடைய இமாலய சாதனையாக அதை முன்னிலைப்படுத்தும். பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவியை அல்லது மாணவரை முத்தமிட்டு பாராட்டும் காட்சியும் தவறாமல் இடம்பிடிக்கும். அந்த காட்சிகள் எல்லாம் இனி இல்லை. 
 
உண்மையில், ஒரு மாணவனை அவனுடைய மதிப்பெண்ணை வைத்து எடைபோடுவது என்பது முற்றிலும் தவறான அணுகுமுறை. இதை இப்போதாவது உணர்ந்து கல்வித்துறை விழித்துக் கொண்டுள்ளதை நாம் வரவேற்கத்தான் வேண்டும். அதற்கு தொடர்ச்சியாக சமுகத்தில் நடந்த விவாதங்கள் முக்கியமானவை. ஒரு குறிப்பிட்ட துறையில் ஒரு மாணவர் முன்னேற வேண்டுமானால் அவருடைய தொடர்ச்சியான முயற்சியும், பயிற்சியும் அந்தத்துறை சார்ந்த அவரது தேடலும், அர்ப்பணிப்பும், அறிவும், அனுபவமும் இவை எல்லாம் சேர்ந்துதான் அவரை வெற்றியாளனாக அடையாளம் காட்டும். உதாரணத்துக்கு, இன்று நம்மிடைய பிரபலமாக அறியப்படும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர், பள்ளிகளில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களே. மேலும், அரசின் முக்கிய பொறுப்புகளிலும் அதிகார மையங்களிலும் செயல்படும் பலரும் அடிப்படையான கல்வித் தகுதி பெற்றவர்களே. ஆனால், மேற்சொன்னவாறு தங்களை பிறகு அவர்கள் பட்டைத் தீடடிக்கொண்டதாலேயே தனக்கான துறைகளில் வைரமாக ஜொலிக்கிறார்கள். இது அதிக மதிப்பெண் எடுக்கக் கூடாது என்பதற்கான எதிர்வினை இல்லை. கல்வி அவசியம் தான். ஆனால் அது அழுத்தம் தரக் கூடியவையாக, சுமையாக இருக்கக்கூடாது என்பதே. கல்வி கற்றல் என்பது சுகமான அனுபவமாக இருக்க வேண்டுமே ஒழிய, கடும் அயர்ச்சியை ஏற்படுத்துவதாக மாறிவிடக் கூடாது.
 
“சரி, இன்றைய போட்டி நிறைந்த உலகில் இதெல்லாம் சாத்தியமா?” என்று நீங்கள் கேட்கலாம். சாத்தியமே என்பதைத்தான் கல்வி அறிஞர்கள் பலரும் அறிவுறுத்துகின்றனர். ‘நம்முடைய கல்விமுறையில் மாற்றம் தேவை’ என்கிற குரல்கள் பலமாக ஒலிக்கத்தொடங்கி பல வருடங்களாகி விட்டன. அதனுடைய தொடர்ச்சிதான் தற்போது ஏற்பட்டு வரும் மாற்றங்கள். இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கை என்பது இனிவரும் நாட்களில் நடந்தேறலாம். அதற்கான ஏற்பாடுகள் நடக்கத் தொடங்கிவிட்டன. 
 
சில நாட்களுக்கு முன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் அரசு பள்ளிகள் 91.59 சதவீத தேர்ச்சியும், தனியார் பள்ளிகள் 98.54 சதவீத தேர்ச்சியும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 44 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந்தன. இந்த முடிவுகள் பலரின் புருவத்தை உயர்த்தியது. அரசுப் பள்ளிகள் என்றாலே கல்வியின் தரம், சரியா இருக்காது என்ற எண்ணத்தின் மீது பலமான அடி ஒன்றை கொடுத்தது. தற்போது அரசுப் பள்ளிகள் மீது புதிய வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெற முடியும் என்கிற பொதுபிம்பத்தை இது உடைத்து எறிந்துள்ளது. இதனால் தனியார் பள்ளிகள் மதிப்பு குறைந்துவிட்டதாக நாம் எடுத்துக்கொள்ளல் ஆகாது. அந்தந்த மாவட்டங்களின் மாணவர்களின் எண்ணிக்கை, பெற்றோர்களின் பொருளாதார திறன், புறச் சூழல்கள் உள்ளிட்டவற்றை கொண்டே அரசு, தனியார் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. சிறந்த கல்விக்காக வெகுதொலைவில் கொண்டு மாணவர்களை சேர்ப்பதும் நடக்கவே செய்கிறது. 
 
ஆகவே, பள்ளிகளில் கற்றல் முறை மாறுபடலாம். அவை கற்றுத் தரும் திறனில் பள்ளிகள் வேறுபடலாம். ஆனால், தொடர்ச்சியாக கற்பது என்பதில் மாற்றமில்லை.  அது பள்ளி, கல்லூரியோடு நின்றுவிடுவதில்லை. உண்மையில் இவற்றுக்கு வெளியிலேயே தான் கற்க வேண்டிய ஆயிரமாயிரம் விஷயங்கள் உள்ளன. அவைதான் ஒரு மனிதனை பண்படுத்தும், மாற்றங்களை நோக்கி நகர்த்தும். தன்னம்பிக்கையோடும் புத்துணர்ச்சியோடும் வாழ்க்கையை எதிர்கொள்ள வைக்கும். இதை பள்ளி, கல்லூரிக்குள் வரும் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லி, வழிகாட்ட வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கும் உண்டு.
 
‘மக்கள் &அரசு கூட்டு பங்கேற்பு முறை’யின் மூலம் பொதுமக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து அவர்களது பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளை தத்தெடுக்கலாம். அதன்மூலம் அந்தப் பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம். திருச்சியில் உள்ள கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளி, இத்திட்டத்தில் முன்னோடியாக உள்ளதாக பிரபல நாளிதழ் ஒன்று அறிவித்துள்ளதை கவனத்தில் நாம் கொள்ள வேண்டும். அதேபோல, பாடத்திட்டங்களை கண்டு மாணவர்கள் பயங்கொள்ளாமல் இருக்க, அவற்றை எளிமையான முறையில் கற்பிக்கும் வழிமுறைகளை ஏற்படுத்தி தருவதும் பள்ளிக்கல்வித் துறையின் பொறுப்பேயாகும். குறைந்த வசதிகளோடு கல்வி கற்று, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களால் மதிப்பெண்கள் பெறும்போது, கூடுதல் வழிகாட்டல்கள், தொழில்நுட்ப வசதிகளை அரசுப் பள்ளிகளில் உருவாக்கும்போது, இன்னும் அதிகமான திறமை மிக்க புதிய தலைமுறை உருவாகும். இந்த மாற்றம் விரைந்து நடக்குமா? அரசு விழித்துக்கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles