நம் பாரம்பரிய பொருட்களை பாதுகாப்பது அத்தியாவசியமானது! -    லத்தீப் (உரிமையாளர் - தி ஓல்ட் க்யூரியாசிட்டி ஷாப்)

Wednesday, May 31, 2017

சென்னைக்கு பல்வேறு அடையாளங்கள் உண்டு. மிக நீண்ட ‘மெரினா கடற்கரை’, ‘சென்ட்ரல் ரயில் நிலையம்’, ‘விக்டோரியா ஹால்’, ‘ப்ளாக் டவுன்’ (வடசென்னை) என பழமை பேசும் இடங்கள் நிறைய உண்டு. அவற்றில் தவறாமல் இடம்பிடிக்கும் ‘மவுண்ட் ரோடு’ (இப்போது ‘அண்ணா சாலை’). இதற்குப் பின்னால் ஒரு கதை உண்டு. 

தற்போது உள்ள செயின்ட்தாமஸ் மவுண்ட்டில் (பரங்கி மலை) தான் தமிழகம் முழுக்க உள்ள ஊர்களை அளக்கும் ‘தலைமை நில அளவையர் அலுவலகம்’ இயங்கி வந்தது. அதை ஆங்கிலேயர்கள் நிர்வகித்து வந்தனர். கடற்கரையில் இருந்து அங்கே போவதற்காக அவர்களால் போடப்பட்ட ‘மலைச் சாலை’தான் மவுண்ட் ரோடு. 
 
அப்படியான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாலையில் இப்போதும் பழைமை பேசும் கட்டிடங்கள் உண்டு. அவற்றில் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் விற்பனை நிலையங்களும் உண்டு. அவற்றில் முக்கியமானது தி ஓல்ட் க்யூரியாசிட்டி ஷாப். வெளியே ‘பேராவர்மூட்டும் பழமைப்பொருளகம்’ எனும் தமிழ்ப் பலகை, இப்போது சென்றாலும் நம்மை வரவேற்கும்!. உள்ளே சென்றால் பல தலைமுறை வரலாற்று ஆவணங்கள், பொருட்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அப்படியே அதன் உரிமையாளரான லத்தீப்பிடம் பேச்சு கொடுத்தால், மற்றொரு ஆச்சர்யம். தமிழில் பிச்சு, உதரும் அவர் தமிழரில்லை!
 
“நான் பிறக்குறதுக்கு முன்னாடியே, என்னோட தந்தை, ஆங்கிலேயர் காலத்திலேயே ‘தி ஓல்ட் க்யூரியாசிட்டி ஷாப்’ என்கிற இந்தக் கடையை நிறுவினாரு. இரண்டு கலாச்சாரங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் பரிமாற்றம் ரொம்ப அவசியம். அப்படி பரிமாற்றங்கள் பல செஞ்சதாலதான், இன்னிக்கி எங்களால இவ்ளோ வருஷமா இந்தக் கடையை தொடர்ந்து நடத்த முடியுது.
 
நான் 1970ஆம் ஆண்டில்தான் வியாபாரத்துக்குள்ள நுழைஞ்சேன். எனக்கு, அப்போ கேமரா மேல தீராத காதல் இருந்துச்சு. இப்போ இருக்குற மாதிரி, அப்போ எல்லார்கிட்டேயும் கேமரா இருக்குறது ரொம்ப கஷ்டம். என்னிடம் மட்டும்தான் கேமரா இருந்துச்சு. போட்டோ பிடிக்க எல்லாரும், என்னைச் சுற்றிச் சுற்றி வருவாங்க. இப்படி பல போட்டோக்களை எடுத்துதான் கேமரா சம்பந்தமான நுணுக்கமான விஷயங்களை கத்துக்கிட்டேன். அதைவிட, அதன் வரலாறு ரொம்ப அவசியம்னு புரிஞ்சுக்கிட்டேன்.  அப்படி கேமராவின் வரலாறுகளைத் தேடி தேடி படிச்சுதான், இன்னிக்கி இந்தக் கடையில பழமையான கேமராக்கள் பலவற்றை சேகரித்து வைத்திருக்கேன்.
 
முன்பு எல்லாம், வெளி நாட்டவர்கள்தான் எங்களுக்கு வாடிக்கையாளர்களாக இருந்தாங்க. இன்றைக்கு இந்தியாவுக்குள்ள, ஐ.டி. கம்பெனிகள் நிறைய வந்துடுச்சு. மக்கள் மத்தியில பணப் புழக்கம் அதிகமாகிடுச்சு. அவங்க இதுபோன்ற கலைப்பொருட்களை தேடிப் பிடித்து வாங்குறாங்க. இப்போதெல்லாம் வீடுகள், நவீனமாக கட்டினாலும், அதுல ஜீவன் இருக்கிறது இல்லை. விருந்தினர் வந்தாலும், இப்போ நாம அவங்களோட அதிகமாக உரையாடுறது கிடையாது. பெரும்பாலும் நாம செல்போன்களுக்கு அடிமையாகிட்டோம். இந்த மாதிரியான   கலைப் பொருட்களை வீட்ல வாங்கி வச்சுக்கிட்டா, விருந்தினர் வரும்போது அதனோட சிறப்பம்சங்கள் பற்றி அவங்ககிட்ட நிறைய பேச முடியும்! 
 
பழம்பெரும் கோவில்களைப் பார்த்தீங்கன்னா, மிகவும் உறுதியாக இருக்கும். பூகம்பமோ, சுனாமியோ வந்தாலும், அந்தக் கட்டிடத்தை ஒண்ணுமே செய்ய முடியாது. என்ன காரணம்னு கேட்டீங்கன்னா, அந்தக் கட்டிடங்கள்ல ஆன்மா இருக்கு. ஏன்னா, கட்டுமானப் பணிக்கு வர்றவங்களை அரசாங்கம் பார்த்துக்கும். அவங்க குடும்பத்துக்கு தேவையான எல்லாவற்றையும் அந்தக் கால மன்னர்கள் வழங்கினாங்க. அதுனால, அந்தத் தொழிலாளர்களும், மன நிறைவோடு வேலை பார்த்தாங்க. இப்போ இருக்கிற கட்டிடங்கள்ல, வெறும் பணம் தான் இருக்கு. ஒரு நாளை இவ்ளோதான் கூலின்னு கொடுக்கிறாங்க. அது அவங்களோட வாழ்வாதாரத்துக்கே போதுமானதாயில்லை. அதனால, கட்டிடங்கள்ல ஜீவன் இருக்கிறது இல்லை. இப்போ டெக்னாலஜி நிறைய வளர்ந்திருக்கு. நமக்கு எல்லாம் தெரியுது, நாமதான் பெரிய ஆளுன்னு நினைச்சிட்டு இருக்கோம். ஆனால், நம்மளோட மூதாதையர்கள் நம்மை விட ரொம்ப புத்திசாலி. அவங்க, கலையையும், அறிவியலையும் ஒண்ணா பார்த்தாங்க. அதுனால, அவங்களுக்கு ஒரு விஷயத்தோடு மதிப்பு தெரிஞ்சுது.
 
இங்கு என் கடைக்கு வந்த பலர், ‘பழமையான பொருட்கள் இருக்கா?’ ன்னு கேட்பாங்க. 100 வருட பழமையான பொருளைத்தான், பழமை மிக்க பொருளுன்னு சொல்லுவோம். இங்கே என்கிட்டே ஆயிரமாயிரம் வருடம் பழமை வாய்ந்த இயற்கையான ஸ்படிகம் கல் இருக்கு. எவ்வளவு விலை கொடுத்தாலும், இதனை யாருக்குமே  நான் விற்க மாட்டேன். என் கடைக்கு வர்ற, பள்ளி குழந்தைகளுக்கு, இதனோட மகத்துவத்தை சொல்லி கொடுப்பதற்காக வைத்திருக்கேன். உங்க வீட்ல, இருக்குற உங்க தாத்தா பாட்டி கூட நிறைய பேசுங்க. அவங்க கிட்ட பல கதைகள் இருக்கும். தொலைக்காட்சியிலோ, மொபைல் போனிலோ எந்த உபயோகமான விஷயங்களும் இல்ல. அவங்களோட, பொருட்களை பொக்கிஷமா வச்சுக்கோங்க. உங்க வருங்கால சந்ததிகளுக்கும் சொல்லிக் கொடுங்க. அதுதான் இப்போ நாம செய்ய வேண்டிய அத்தியாவசிய கடமையும் கூட!. இன்றைய இளைஞர்களுக்கு, நான் சொல்றது, ஆண் பெண் என்பதைத் தாண்டி மனிதனாக இருப்பது ரொம்ப முக்கியம். மனிதம் என்ற உணர்வை பாதுகாக்கணும். அடுத்த தலைமுறைக்கும் அதை கொண்டுபோகணும் என்பதுதான்!” என்றார். கடையில் உள்ள பொருட்கள் மட்டுமில்லை; கடையின் உரிமையாளரும் ஒரு பொக்கிஷமாகத்தான் எங்கள் கண்களுக்கு தெரிந்தார்!

- பவித்ரா

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles