நாளை என்பது நாம்தான்! - சிறப்புக் கட்டுரை

Wednesday, May 31, 2017

நாளை என்பது பற்றிய அக்கறைதான் நம் வாழ்வின் அடிப்படை உயிரோட்டம். வாழ்கின்ற மனிதர் அனைவரும் நாளைய சூழல் நன்கு அமைய வேண்டும் என்பதற்காகத்தான், இன்றைய சூழலில் இடைவிடாத முயற்சியில் ஈடுபடுகின்றோம்.

‘விடியலை நோக்கி’ ஒரு விமரிசையான பயணமாக அதை நாம் அமைத்துக்கொள்வதும் உண்டு. இன்றில் நாம் இரண்டறக் கலந்து விடுகின்றோம். ஆனால் நாளை என்பதுடன் நாம் வேறுபடுகிறோம். அதை ஏதோ ஒரு கனவாகவும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவும் எண்ணுவதால் பல வழிகளிலும் அது நம்மை மிரட்டுகிறது. குறிப்பாக, இளைய சமுதாயத்தினரின் நாளை என்பது தேர்வு குறித்ததாகவும், திருமணம் குறித்ததாகவும், வேலையைப் பொருத்ததாகவும் அமைகின்றது. இந்த நிலையில் தோல்வி விஸ்வரூபமாக நமக்காக உருவெடுத்தது போன்ற தோற்றம் அளிக்கின்றது.
 
நாம் பல்வேறு அறிஞர்களைப் பற்றியும் அவர்களது படைப்புகளைப் பற்றியும் கேள்வியுறுகிறோம். உடலைப் பேண உடற்பயிற்சி செய்கின்றோம். ஆக்க வாழ்க்கையை அமைக்க முற்படுகின்றோம், உடன்படுகின்றோம். அலைபாயும் மனதை அடக்க ஆயிரம் வழிகளில் முயன்று பார்க்கின்றோம். எனினும் நாளை என்பது ஒரு பெரும் புதிராகவே நம்மை புரட்டி எடுக்கின்றது. 
 
கனவு காண்கிறோம். நம் காவிய தலைவர்கள் காட்டிய பாதையில் வாழ்க்கையைக் கண்டுகொண்டிருக்கிறோம். சாதனை பற்றிய சிந்தனை நம் மனதை மேலும் மேலும் மெருகு படுத்துகிறது. லட்சிய புருஷர்கள் விடாது தொடர்ந்தவற்றை தொடர முடியாமல் பலமுறை தடுமாறிப் போகின்றோம். அவர்களைப் போல் இருந்தால் என்ன? அவரைப் போல் வாழ்ந்து விட்டால் என்ன? இவர் சாதித்தது போல் நானும் செய்ய கூடாதா? என எண்ணி எண்ணப் பறவைகள் சிறகடிக்கின்றன.
 
உலகம் முழுவதையுமே உன்னதப்படுகின்ற உயர்ந்த மனிதர்களாகிய நமது மொத்த எண்ணிக்கை 500 கோடிக்கும் அதிகம். ஆனால் இந்த 500 கோடி மனிதர்களிலும் ஒருவர்கூட மற்றவரைப் போன்று இல்லாத வித்தியாச நிலை, வேறுபட்ட நிலை. இந்தத் தருணத்தில் ஒரு அழகான சித்தர் பாடல் எனக்கு நினைவு வருகிறது.
 
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த ஜோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே!
 
என்பது அப்பாடல். ஜோதி மயமான உன்னதத் தன்மை நம் உள்ளே சங்கமித்து நம்மை நமக்குள்ளே மேம்படுத்தி இருக்கின்றது. அதை வெளியில் தேடி, ஓடி வாடி மாண்டு போகின்றான் மனிதன்.
 
நாளை என்ற ஒன்றுதான் மனித குலத்தின் நம்பிக்கை நட்சத்திரம். உலகில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு மகத்துவம் உண்டு. அவரது நாளையை நிர்ணயிப்பது அவரேதான். எனக்கு ஒரு விடிவு வராதா? வாழ்வு வராதா? வெற்றி அடைய மாட்டேனா? என்று எங்கோ எதிர்பார்த்து ஏங்கித் திரிவது முட்டாள்தனம். ஒவ்வொரு மனிதனும் நாளை என்ற இலக்கை நன்றாக அடைவதற்கு இயற்கை சரியான திட்டம் தீட்டி உள்ளது. நாம்தான் அதை உணராமல் மற்றவர்களைப் பொறுப்பாக்கி அவர்கள் பின்னால் அலைகின்றோம். நம்மை வகைப்படுத்திக் கொண்டால் நம் திறமைகளை கூர்ப்படுத்திக் கொண்டால், எல்லா வழிகளிலும் நம்மை தயார்படுத்திக் கொண்டால், நம்பிக்கொண்டோம் என்றால் நாளை என்பது நாம்தான். 
 
இயற்கை அதன் கடமைகளை சரிவரச் செய்கின்றது. நாம்தான் அதன் நிலைப்பாட்டைச் சீர்குலைத்து வெற்றி அடைய வழியின்றி வேதனைக்குள்ளாகின்றோம். ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று கூற்றுக்கு இணங்க மனிதராய் பிறந்த நாம் ஒவ்வொருவருமே ஒரு மாபெரும் வெற்றியாளர்தான். எனவே நமக்கு ஒரு குறைந்தபட்ச அத்தியாவசியத் தன்மையாக நம்மை பற்றிய மேலான எண்ணம் இன்றியமையாததாகும். வாழ்க்கையில் மாபெரும் வெற்றியைக் குவித்தவர்கள் அனைவரும் அதீதத் தன்மையுடையவர்களாக, ஏன் சற்று அகம்பாவம் கொண்டவர்களாக கூட இருக்கின்றார்கள். மகத்தான வெற்றிக்கு ஒரு ‘தில்’ அல்லது திடகாத்திரம் இன்றியமையாதது ஆகும். 
 
என்னைப்போல் வேறு ஒருவர் இல்லை. எனக்கு நிகர் நானே. நான் எப்படியும் சாதிப்பேன் என்று நெஞ்சை நிமிர்த்தி தன்னம்பிக்கையோடு நடைபோடுங்கள். நாளை என்பது நாம்தான். 
 
ஏதாவதொரு துறையைத் தேர்வு செய்து எந்தத் துறையாக இருந்தாலும் அதை விடாது பிடித்துக்கொண்டால் நீங்கள் தான் உலகச் சாம்பியன். தவறாமல் தினமும் உடற்பயிற்சி செய்பவர் உலகப் புகழ் பெறுவார். ஒரு நாள் தவறாமல் பயிற்சி செய்யும் விளையாட்டு வீரர் டெண்டுல்கரை மிஞ்சி விடுவார்.
 
இசை, பாடல், கல்வி, பேச்சு, எழுத்து, ஆடல், ஆராய்ச்சி எதுவாக இருந்தாலும் தேவை பயிற்சி, இடைவிடாத முறையான பயிற்சி. சும்மா விளையாட்டா தொடர்ந்து ஒரு காரியத்தை சாதகம் செய்து வருபவர் மாபெரும் ஜாம்பவான் ஆகிவிடுகிறார். ஆம் தொடர் முயற்சி ஒன்றே மூலதனம். நாளை என்பது நாம்தான்!.

-வேலூர் ஹரி 
 

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles