குமரி ஆத்தா என் ஆத்தா ! எழுத்தாளர் ஜோ டி குருஸ்

Friday, June 30, 2017

நவீன இலக்கியத்தில் நெய்தல் படைப்புகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். ‘கடல்புரத்தில்’, ‘கடலோர கிராமத்தின் கதை’ உள்ளிட்ட சில படைப்புகள் மட்டுமே ஆதர்சமாக இருந்து வந்தன. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. அதற்கு காரணம் எழுத்தாளர் ஜோ டி குருஸ். ‘அஸ்தினாபுரம்’, ‘ஆழிசூழ் உலகு’, ‘கொற்கை’, ‘வேர்பிடித்த விளை நிலங்கள் (பயோகிராபி) ’ உள்ளிட்ட படைப்புகள் கடல் சார் வாழ்வியலை பதிவு செய்தவை.

பிறப்பால் கிறிஸ்துவரான ஜோ டி குருஸ், தற்போது ‘தன்னுடைய குலச் சாமி குமரி ஆத்தா ’ என்று கூறி வருகிறார். அது குறித்து அவர் மனம் திறந்தபோது, 
 
“நான் என்னுடைய மூதாதையர்களை வணங்குகிறேன் என்கிற பண்பு நம்மிடம் இருக்கிறது. நமக்கு முப்பது முக்கோடி தெய்வங்கள் இருப்பதாக சொல்கிறோம். அப்படியான முப்பது முக்கோடி பேர் வானத்தில் இருந்து குதித்தவர்கள் இல்லை. எல்லோருமே நம்முடைய முன்னோர்கள். ஆத்தா, அப்பாத்தா, பாட்டி, பாட்டன், பூட்டன், மாமன், மச்சான், அத்தை, அம்மா, தங்கை என வாழ்ந்தவர்கள்தான். அவர்கள் வாழ்ந்து, மரித்துப்போன பிறகு அவர்களது நினைவை போற்றி, வணங்கிக் கொண்டிருக்கிறோம். அதுதான் தொடர்கதையாகவும் நம்முடைய நம்பிக்கையாகவும் இருக்கிறது. 
 
அப்படி, ஜோ டி குருஸ் என்கிறவன் ஒரு கத்தோலிக்க கிறிஸ்துவனாக பிறந்து விட்டான் என்பதற்காக, அவன் தன் மூதாதையர்களை விட்டுவிட வேண்டும் என்பதில்லையே? நான் ஒரு பழங்குடியினரின் மகன். அப்படியாக இருக்கும்போது என்னுடைய பாரம்பர்யங்களை விட்டுவிட்டு இன்று வந்தது, நேற்று வந்தது, அவர் சொன்னது, இவர் சொன்னது வைத்ததை மட்டும் கொண்டாட வேண்டும் என்பது இல்லையே? இன்றைக்கு நாங்கள் ஒரு கத்தோலிக்க மதத்துக்குள் இருக்கிறோம். எப்படி இந்த மதத்துக்குள் வந்தோம் என்பது தனிக் கதை. 
 
இந்த வீட்டில் பார்த்தீர்கள் என்றால் என்னுடைய அய்யா படமாக தொங்குகிறார். இறந்த பிறகு அவரை சாமியாக வைத்து கும்பிடுகிறோம். இந்த வீட்டில் இருந்து நான் வெளியே கிளம்பும் போது, அய்யாவிடம் தான் சொல்கிறேன். “அய்யா ஊருக்குப் போறேன். என் பிள்ளை குட்டிகளை பத்திரமாக பார்த்துக்குங்க...” என்று மானசீகமாக அவரை வழிபட்டுவிட்டு செல்கிறேன். 
 
அப்படியாக நான் வழிபடுபவர் தான் சிவன். அப்படியாக நான் வழிபடுவள் தான் குமரி ஆத்தா. அப்படியாக நான் வழிபடுவன் தான் என்னுடைய மச்சான் முருகன். இவர்கள் எல்லோருமே என்னுடைய மூதாதையர்கள் உடன் வாழ்ந்தவர்கள். அவர்கள் எங்களுடைய நினைவில் தெய்வங்களாக நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்ததனால் அவர்களை நாங்கள் குலச் சாமியாக கும்பிடுகிறோம். இதை சொல்வதில் எனக்கு எந்த அபிப்ராயபேதமும் இல்லை. நான் சந்தோஷமாக, மகிழ்வாக கையெடுத்து அவர்களை வணங்குகிறேன். அதைத் தொடர்ந்து என்னுடைய தலைமுறைகளும் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். 
 
ஏன்னா, அவங்கதான் வழிகாட்டி கொடுத்தவங்க. இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கு ஒரு பாதை போட்டு கொடுத்தவர்கள் அவர்கள்தான். இங்கே இருக்கக் கூடிய நீதி போதனை கதைகள் எல்லாமே, அவர்கள் வாழ்ந்து காட்டிய பக்குவம்தான். அப்படியாக வாழ்ந்தவர்களை பரம்பரை பரம்பரையாக நம்முடைய தலைமுறைகளும் கொண்டாட வேண்டும் என்பதில் எந்த தப்பும் இல்லையே? அப்படி என் நினைவுகளில் போற்றும், என் கரங்களை கூப்பி கும்பிடும் தெய்வம் என்னுடைய குமரி ஆத்தா!. அதை ஏதாவது ஒரு வாதத்துக்குள் கொண்டு சென்று சிதிலமடைய வைக்காதீர்கள்!” - உணர்ச்சியும் பக்குவமும் தெளிவும் கொண்ட பார்வையோடு முடித்தார் ஜோ டி குருஸ். 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles