ஏறுதழுவுதலைக் காண அனைவரும் வாருங்கள்! இயக்குநர் வ.கவுதமன் வேண்டுகோள்!!

Tuesday, January 31, 2017

இயக்குனர் வ.கவுதமன், தமிழ் சமூகம் பற்றிய புரிதலுடன் திரையுலகில் இயங்குபவர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கிய நாளில் இருந்து அது முடிவுக்கு வந்த நாள் வரை, ஓயாது களத்தில் நின்றவர். தமிழினத்தின் அடையாளமாகத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள, அவர் அரசியலில் தடம்பதிக்க முயற்சிக்கிறாரா என்ற ஆரூடங்கள் ஊற்றெடுக்கத் தொடங்கிவிட்டன. அவரைச் சந்தித்துப் பேசினோம்!

ஜல்லிக்கட்டு குறித்து பலவிதமான கருத்துகள் நிலவுகிறதே?

"ஜல்லிக்கட்டு என்கிற ஏறுதழுவுதல் என்பது ஒரு விளையாட்டு. கத்தியை கூர்தீட்டுவது போல, நமது வீரத்தை கூர்தீட்டும் அற்புதமான விளையாட்டு. ஜல்லிக்கட்டு மட்டுமல்ல; நமது கபடி விளையாட்டும் கூட அப்படித்தான். அதேபோல எங்களுடைய வீட்டு மாடுகளை, காங்கேயம் காளைகளை அடக்கி, இந்த மண்ணைக் காக்கிறோம். அதன்மீது தொடுக்கப்படும் எந்த அடக்குமுறையையும் எதிர்த்து, வெகுண்டெழுந்து போராடுவோம் என்பதற்கான அடையாளம்தான் சென்னை மெரினாவில் நடந்த தைப் புரட்சி!

சிந்து சமவெளி நாகரிகத்திலேயே ஏறுதழுவுதல் நடந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அரச முத்திரை சின்னத்தில், காளையை தமிழன் ஒருவன் அடக்குவது போன்று பொறிக்கப்பட்டுள்ளது. ஆக, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழின் கலாச்சாரம் பறைசாற்றப்பட்டுள்ளது. அத்தகைய கலாச்சாரத்தின் மீது போர் தொடுத்தால், அதை முறியடிப்போம் என்பதுதான் நடந்து முடிந்த போராட்டம்!"

 

ஜல்லிக்கட்டு  போராட்டத்துக்கு மாணவர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்த்தீர்களா?

"ஜல்லிக்கட்டு என்கிற வார்த்தையே தவறு. அதை ஏறுதழுவுதல் என்று சொல்வதே சரி! ஒரு மலைக்குன்றை ஒரு மேகம் தழுவதுபோல, தான் உயிராக வளர்த்த தன் வீட்டு உறுப்பினரில் ஒருவரான காளையை விரட்டி, தழுவுதலே ஏறுதழுவுதல். மதுரை அவனியாபுரம் போராட்டத்துக்குச் செல்லும்போது, உண்மையில் வீடு திரும்புவேன் என்று ஒருபோதும் எண்ணவில்லை. இந்தியாவின் அதிகார வர்க்கம் சாத்திய வாடிவாசலை அதுவே திறக்க வேண்டும். அதற்காக எனது உயிரே போனாலும் பரவாயில்லை என்று சென்றேன். பிறகு, அங்கே நடந்த போராட்டத்தில் நான் தாக்கப்பட்டதும் ரத்தம் சிந்தியதும் அனைவரும் அறிந்ததே. அப்போது, "ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எங்களுடைய இனத்தை அழிக்க நினைக்கிற பீட்டாவுக்கு எதிராக எனது இளைஞர்கள் போராடுவார்கள்" என்று சொன்னேன். அதுபோலவே, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், கோடிக்கணக்கில் மாணவர்கள் கூடிவிட்டனர். இனி தமிழினத்தை யாராலும் அழிக்க முடியாது!"

 

போராட்டத்துக்கு வரவேற்பு என்பது சமூக வலைதளங்களால் உருவானது என்கிறார்களே?

"சமூக வலைதளங்களால் உருவானது என்பது உண்மை. அதுபோலவே மீடியாக்களையும் சொல்ல வேண்டும். அதேபோல தமிழர் அல்லாத பிற மாநிலத்தாரும் ஆதரவு அளித்தார்கள். அதையும் குறிப்பிட வேண்டும். இவர்கள்தான் போராட்டத்தை நெருப்பாக மாற்றினார்கள். போராட்டத்தில் மாணவர்களின் அறம் மெய்சிலிர்க்க வைத்தது!"

 

ராணுவ கட்டுப்பாட்டு ஒழுங்குடன் மெரினாவில் போராட்டம் நடந்ததே..?

"நிச்சயமாக, அந்த ஒழுங்குக்குப் பின்னால் யார் என்பது எனக்கும் கூட தெரியாது. ஆனால் மெரினாவில் நடந்தது ஒரு யுகப் புரட்சி. எட்டாவது அதிசயம் என்று கூட சொல்லலாம். அங்கே பத்து அடி, இருபது அடிக்கு மட்டும்தான் ஒருவருக்கொருவர் தொடர்பு உண்டு. அதைத்தாண்டி நிற்கும் யாருக்கும் தொடர்பு கிடையாது. முதல் ஆளாக நின்றவனுக்கும் கடைசி ஆளாக நின்றவனுக்கும் இடையே எந்தவிதமான கம்யூனிகேஷனும் கிடையாது. ஆனால், கூட்டத்தை அவர்கள் ஒழுங்குபடுத்தினார்கள். 

ஒரு நாள் கூட தன் வீட்டின் கழிவறையைச் சுத்தம் செய்திருக்க மாட்டார்கள். ஆனால், பொதுக் கழிப்பறையை சுத்தம் செய்தார்கள். இருபது லட்சம் பேர் கூடிய இடத்துக்கு எங்கிருந்து சாப்பாடு வந்தது என்று தெரியாது. போராட்டத்தின்போது மெரினாவில் கிடந்த குப்பையை மட்டுமல்ல; அரசியல் குப்பை சேராமலும் இளைஞர்கள் பார்த்துகொண்டனர். அதற்குக் காரணம், எல்லோருடைய மனசும் ஒரே அலைவரிசையில் இருந்ததுதான்!"

 

ஜல்லிக்கட்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்ததில், உங்களுடைய பங்களிப்பும் உண்டுதானே?

"எங்களுக்கு மொழி, பண்பாடு, பாரம்பரியம், கலாச்சாரம் பற்றித் தெரியும். ஆனால், சட்டம் பற்றி எதுவும் தெரியாது. அதுதான் உண்மை. இந்த சட்டம் என்பது ஏழ்மையானவர்களை, உண்மையான போராளிகளை அடக்கி ஒடுக்கத்தான் பயன்படுகிறதே தவிர, அதிகார வர்க்கத்தை அது ஒன்றுமே செய்வதில்லை. எனவே, எங்கள் இனத்தின் மீது பற்றுகொண்ட ஒரு நீதிபதி அரசு இயற்றிய சட்டத்தின் உண்மைத்தன்மையை எடுத்துச்சொன்னால் சரியாக இருக்கும் என்று முடிவு செய்தோம். அதன் அடிப்படையில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி அரி பரந்தாமன் அய்யாவை போராட்டக்களத்துக்கு அழைத்து வந்தோம். அவர் விரிவாக எடுத்துச்சொன்ன பிறகு, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்!"

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு செல்வீர்களா?

"உறுதியாகப் போவேன். நான் மட்டுமில்லை. பிற நாடுகளில் உள்ள எனது சொந்தங்களும் அன்று ஏறுதழுவுதல் விளையாட்டில் பங்கேற்கும். உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வீர விளையாட்டைப் பார்க்க அனைத்து தரப்பினரும் வரவேண்டும் என்பதே என் வேண்டுகோள்!" பேசி முடித்தபோது, உண்மையான போரட்டத்தின் பெருமிதம் கவுதமனின் முகத்தில் தெரிந்தது. 

- கிராபியென் ப்ளாக்

Follow Us on Facebook

அடுத்தது

Related Articles